Published:Updated:

நிழலுலக ராஜாக்கள்: ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே|பகுதி-3

ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே
News
ஹாஜி மஸ்தான் Vs தாவூத் Vs பால் தாக்கரே

மஸ்தான் மனம் மாறினார், ‘இனி கடத்தலில் ஈடுபட மாட்டேன்’ என்று மஸ்தானும் அவரின் அடியாட்களும் ஜெய்பிரகாஷ் நாராயண் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிறையில் மஸ்தான் பெரிய அளவில் மனம் மாறியதை ஒரு முறை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

விரும்பிய வாழ்க்கை, விரும்பியதற்கும் அதிகமான பணம்! மஸ்தானின் வாழ்க்கை உயரங்களையும் தாண்டிய உயரத்துக்குச் சென்றது. அதிகரித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் பாலிவுட்டில் படங்கள் தயாரிக்க வட்டிக்குப் பணம் கொடுக்கத் தொடங்கினார் மஸ்தான். படங்களை வாங்கி விநியோகமும் செய்தார்.

ஹாஜி மஸ்தான்
ஹாஜி மஸ்தான்

நடிகை மோனாவும், ஹாஜி மஸ்தானும்!

பாலிவுட்டின் கலர் வெளிச்சம் மஸ்தானின் நடவடிக்கைகளை மாற்றியது. எப்போதும் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களோடு இருப்பதை விரும்பினார். அவருக்கு நடிகை மதுபாலா என்றால் மிகவும் பிடிக்கும். அவரைப் போன்ற உருவத்தைக்கொண்டிருந்த நடிகையான மோனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். எப்போதும் வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டு மெர்சிடிஸ் காரில் தெருக்களில் வலம் வந்துகொண்டு இருப்பார். வெள்ளைச் சட்டை, மெர்சிடிஸ் கார் மற்றும் சிகரெட் ஆகிய மூன்றும் மஸ்தானிடமிருந்து பிரிக்க முடியாதவையாக இருந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தாவூத் Vs மஸ்தான்

மும்பையில் மிகப்பெரிய சக்தியாக விளங்கிய தாவூத் இப்ராஹிமுக்கும் மஸ்தானுக்கும் இடையே ஒரு முறை மோதல் ஏற்பட்டது. இருவரது ஆட்களும் மோதிக்கொண்டபோது பிரச்னையைத் தீர்க்க இரண்டு பேரும் சந்தித்துப் பேசினர். மஸ்தான் அமைதியை விரும்புபவர் என்பதால், இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டது. அதேசமயம் இருவரும் சேர்ந்து பதான் கூட்டத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்தனர். நாளடைவில் மஸ்தான் அரசியல் கட்சி தொடங்கியபோது, மஸ்தான் கூட்டத்திலுள்ள ரெளடிகளை தாவூத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மிகப்பெரிய மாஃபியாவாக வலம்வந்தான். மஸ்தானுடன் தாவூத் இப்ராஹிமுக்கு நெருங்கிய தொடர்பு இருந்தபோதிலும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மஸ்தானிடம் தாவூத் பேசினானா என்பது இதுவரை மர்மமாகவே இருக்கிறது. தாவூத், மஸ்தானுடன் கலந்து ஆலோசித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதை மஸ்தான் ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. எனவேதான் போலீஸார் நடத்திய விசாரணையில்கூட மஸ்தானின் பெயர் வரவில்லை.

தாவூத் இப்ராஹிம்
தாவூத் இப்ராஹிம்

ஜெய்பிரகாஷ் நாராயணனுக்கு அளித்த உறுதிமொழி!

நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஹாஜி மஸ்தானும் கைதுசெய்யப்பட்டார். அவருடன் அவருடைய ஆட்கள் 200-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். சிறையில் ஜனதா கட்சித் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனைச் சந்தித்துப் பேசினார் மஸ்தான். அதற்குப் பிறகு மஸ்தான் மனம் மாறினார். ‘இனி கடத்தலில் ஈடுபட மாட்டேன்’ என்று மஸ்தானும், அவரது அடியாட்களும் ஜெயபிரகாஷ் நாராயண் முன்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிறையில் மஸ்தான் பெரிய அளவில் மனம் மாறியதை ஒரு முறை பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் கடத்தல் தொழிலை கைவிடுவதாக அறிவித்து உறுதிமொழி எடுத்ததை பிரதமர் மொரார்ஜி தேசாய்கூட குறிப்பிட்டிருந்தார். அதற்காக, மஸ்தானை ஹீரோவாக தான் பார்க்கவில்லை என்றும் மொரார்ஜி தேசாய் குறிப்பிட்டார். அவசரநிலை திரும்பப் பெறப்பட்ட பிறகு தங்கம், வெளிநாட்டு மது மற்றும் சிகரெட்களின் விலையும் வெகுவாகச் சரிந்தது. இதனால் அவற்றைக் கடத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1984-ம் ஆண்டில் மும்பையின் பாந்த்ரா உட்பட்ட சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. ஹாஜி மஸ்தான்தான் வன்முறைகளுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது முதல்வராக இருந்த வசந்த்தாதா பாட்டீலிடம் ஹாஜி மஸ்தான், கரீம் லாலா ஆகிய கடத்தல்காரர்களை உடனே கைதுசெய்ய வேண்டும் என்று பாஜக மனு கொடுத்தது. அவர்களிடம் ஜூலை 2-ம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று முதல்வர் தெரிவித்தார். பக்ரீத் முடிந்த இரண்டு நாள்களில் ஹாஜி மஸ்தான், கரீம் லாலா மற்றும் யூசுப் பட்டேல் ஆகிய மூன்று பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

மொரார்ஜி தேசாய்
மொரார்ஜி தேசாய்

தப்பிச் சென்ற மஸ்தான்

இதற்கு முன்பு ஒரு முறை மஸ்தானைக் கைதுசெய்ய போலீஸார் முயன்றனர். ஆனால் முடியவில்லை. போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு மஸ்தான் குஜராத்துக்குத் தப்பிச் சென்றுவிட்டார். மஸ்தான், கரீம் லாலா மற்றும் யூசுப் பட்டேல் ஆகியோர் இணைந்து `அகில இந்திய செகரட்ரியேட்’ என்ற ஓர் அமைப்பை நடத்தி, ஏழைகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கிவந்தனர். இதற்காக மஸ்தான் ஆம்புலன்ஸ்களையும் வாங்கி நிறுத்தியிருந்தார். அமைப்பின் நிறுவனராக மஸ்தானும், இயக்குநராக பட்டேலும், ஃபைனான்ஸியராக கரீம் லாலாவும் இருந்தனர். மும்பையின் சில இடங்களில் நடந்த வன்முறைக்கு இந்த அமைப்புதான் காரணம் என்றும், இங்கிருந்துதான் ஆயுதங்கள் சென்றதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. மஸ்தான் கைது செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்புதான் அமைப்பின் கிளையை தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் தொடங்கினர். தொடக்கவிழாவில் நடிகர் திலீப் குமார் கலந்துகொண்டு, சமுதாயத்தில் எங்கு பிரச்னை என்றாலும் ஹாஜி சாஹேப் உதவிக்கு வருவார் என்று தெரிவித்திருந்தார். அவர் சொன்ன சில நாள்களில் மஸ்தான் கைது செய்யப்பட்டது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.

மஸ்தானுடன் அகில இந்திய செகரட்டேரியேட் உறுப்பினர்கள் மொத்தம் 18 பேர் கைதுசெய்யப்பட்டனர். மஸ்தானின் கைதைக் கண்டித்து தென்மும்பையிலுள்ள மொகமதலி ரோடு, நாக்பாடா,அக்ரிபாடா, டோங்கிரி, பைதோனி போன்ற பகுதிகளில் வியாபாரிகள் பந்த் நடத்தினர். சில இடங்களில் மஸ்தானின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அடுத்த 24 நாள்களில் முக்கியமான ஒரு விஷயம் நடந்தது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி நாளில் மஸ்தான் உட்பட அனைவரையும் மாநில அரசு விடுதலை செய்தது. அவர்களின் விடுதலை குறித்து மாநில தலைமைச் செயலாளர் பிரதான் மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் ஜூலியோ ரிபெரியா ஆகியோருக்குக்கூட தெரிந்திருக்கவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்தவர்களை விடுவிக்க வேண்டுமானால் அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் ஒப்புதல் தேவை. ஆனால், மஸ்தான் விவகாரத்தில் இது போன்ற எந்தவித நடைமுறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. கைதான 18 பேரும் அப்படியே விடுவிக்கப்பட்டனர். அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகு விடுவிக்கப்பட்டதாக மட்டும் மாநில அரசு தெரிவித்தது.

பால் தாக்கரே
பால் தாக்கரே

பால் தாக்கரேவின் எதிர்ப்பு

மாநில அரசின் விடுதலை நடவடிக்கைக்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரேயும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். `சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக எங்களது கட்சியினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து விடுவிக்கவில்லை’ என்றும், `கடத்தல்காரர்களை மட்டும் எந்தவித விசாரணையும் இல்லாமல் விடுவித்திருப்பதாக’வும் தாக்கரே சாடினார். ஆனால், மாநில அரசு கண்டுகொள்ளவில்லை. வெளியில் வந்த பிறகு மஸ்தான் தனது அமைப்பைக் கலைத்துவிட்டு அதிலிருந்த ஆம்புலன்ஸ்களை வேறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பிறகு பாரதீய தலித் முஸ்லிம் சுரக்‌ஷா மகாசங் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி அதன் மூலம் மக்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதில் காலத்தைக் கழித்தார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் உலகின் மன்னனாக விளங்கிய மஸ்தானை அனைவரும் கடத்தல்காரராகவே பார்த்தனர். கள்ளச்சாராயத்திலும் சூதாட்ட விடுதியிலும் அதிக அளவில் மஸ்தான் பணம் சம்பாதித்ததாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மும்பையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளச்சாராயம் தெருவுக்கு தெரு ஆறாய் ஓடியது. குடிசைப்பகுதியில் சர்வசாதாரணமாக கிடைத்தது. ஆனால் ஒரு சில இடங்களில் கள்ளச்சாராயம் குடித்த பொதுமக்கள் ஏராளமானோர் இறந்ததை தொடர்ந்து போலீசார் மும்பையில் கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழித்தனர்.

ஹாஜி மஸ்
ஹாஜி மஸ்

மஸ்தானின் கடைசி காலம்

மஸ்தான் கடைசி காலத்தில் அரசியல் கட்சி, பொதுச்சேவை, இந்திப்பட தயாரிப்பு என ராஜ வாழ்க்கை வாழ்ந்தார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள். சுந்தர் சேகர் என்பவரை தனது வளர்ப்பு மகனாக தத்து எடுத்துக்கொண்டார். அதோடு ஹஜ் சென்று வந்த பிறகு தனது ஹாஜி மஸ்தான் என்ற பெயரை மாற்றிக்கொண்டு தனது பாதையையும் மாற்றிகொண்டார். 1994ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி மஸ்தானுக்கு மாரடைப்பு ஏற்பட்டு பிரீச்கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அன்றைய தினமே சிகிச்சை பலனின்றி இறந்து போனார். மஸ்தான் மறைவுக்கு பிறகு தாவூத் இப்ராகிமும் மும்பை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று பதுங்கிக்கொண்டான். ஆனால் அங்கிருந்து தனது கும்பலை உலகம் முழுவதும் இயக்கிக்கொண்டுதான் இருக்கிறான்.

ஹாஜி மஸ்தான் இறந்த பிறகும் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப்படங்கள் அவரை இன்னும் அதிகமாக பேசிக்கொண்டுதான் இருக்கின்றது. மும்பை நகரத்தின் ஆழம் கொண்டிருக்கும் மண் மஸ்தானின் வாழ்க்கையை கண்ட மண்!

(அடுத்து மாஃபியா மன்னன் வரதாபாயின் கதை)