Published:Updated:

`அவனே வளர்த்த மாதிரி விக்கறதுக்கு வந்தான்!’ -தூத்துக்குடி விவசாயியைப் பதறவைத்த ஆடு திருடன்

ஆடு
ஆடு

தூத்துக்குடியில் ஆடுகளைத் திருடியவர் சந்தையில் விற்பனை செய்துவிட்டு பணம் வாங்கும்போது சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள தளவாய்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி அழகுவேல் (வயது 75). இவர், விவசாயத்துடன் ஆடுகளையும் மேய்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்குச் சென்ற அவரது ஆடுகளில் இரண்டு கிடாக்களைக் காணவில்லை. வழக்கமாக ஆடுகள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடங்களில் தேடியும், பிற ஆடு மேய்ப்பாளர்களிடம் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில், `ஆடுகளைக் காணவில்லை' எனப் புகார் அளித்தார்.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை

இதற்கிடையில், அருகிலுள்ள ஆறுமுகநேரியில் ஆட்டுச்சந்தைக்குச் சென்று பார்த்துள்ளார் அழகுவேல். அப்போது அவரது இரண்டு கிடாக்களை ஒருவர் கையில் பிடித்துக்கொண்டு நின்றுள்ளார். அவரிடம், ``இது என்னுடைய ஆடுகள். உங்களிடம் எப்படி வந்தது?” எனக் கேட்க, அதற்கு அவர், ``நானும் இன்னொரு வியாபாரியும் சந்தைக்கு ஆடு பிடிக்க (வாங்க) வந்தோம்.

அப்போது ஒருவர், எங்களிடம் இந்த இரண்டு ஆடுகளுடன் சேர்த்து, மொத்தம் 5 ஆடுகளை ரூ.24,500-க்கு விலைபேசி விற்றார். எங்களிடம் பணம் குறைவாக இருந்ததால், மீதிப் பணத்தை எடுக்க என்னுடன் வந்த வியாபாரி ஊருக்குச் சென்றுள்ளார். ஆட்டை விற்றவர் கொஞ்ச நேரத்தில் மீதிப் பணத்தை வாங்க இங்கு வருவார். அவரிடம் விசாரித்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, போலீஸுக்குத் தகவல் சொன்னார் அழகுவேல்.

ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி

அந்த வியாபாரி சொன்னபடியே ஆட்டை விற்ற திருடனான மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த ரூபனும் (வயது 28) பணத்தை வாங்க வரவே, போலீஸார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர். விசாரணையில், அழகுவேலின் இரண்டு ஆடுகளை ரூபன், ரூ.5,500-க்கு விலை பேசி விற்றது தெரியவந்தது. இரண்டு ஆடுகளை மீட்டதுடன் ரூபனை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்துப் பேசிய விவசாயி அழகுவேல், ``விவசாயத்தோட சேர்த்து ஆடுகளை மேய்ச்சும் பிழைப்பு நடத்திட்டு வர்றேன். மேய்ச்சலுக்குப் போகும் ஆடுகள் எப்படியும் சாயங்கால நேரம் வீட்டுக்குத் திரும்பி வந்துடும். இதுல, இரண்டு கிடாக்கள் காணாமல் போச்சு. எல்லா ஆடுகளையும் பிள்ளைகள் மாதிரி வளர்த்துட்டு வர்றேன். ஆடுகளை காணாட்டின்னா எனக்கு தூக்கமே வராது.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை

அதனால, திருச்செந்தூர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்தேன். இந்த மாதிரி ஆடுகளைத் திருடுபவர்கள் ஆட்டுச்சந்தை, கறிக்கடைகளில் விலை பேசி விற்பார்கள். அதனால், பக்கத்துல உள்ள ஆறுமுகநேரி ஆட்டுச்சந்தைக்குப் போனேன். எல்லா ஆடுகளையும் உத்துப் பார்த்தேன். அதுல, ஒருத்தர் ஒரு கையில மூணும், இன்னொரு கையில ரெண்டுமா 5 ஆடுகளை கயித்தோடப் பிடிச்சுக்கிட்டு நின்னார்.

அவர்ட்ட விசாரிச்சப்போ, மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த ஒருத்தர் அஞ்சு ஆடுகளையும் விலைபேசி வித்தார்னு விவகாரத்தைச் சொன்னார். ஆடு கிடைச்ச சந்தோஷத்துலயும், திருடுனவனைப் பத்தி தகவல் கிடைச்சதுனாலயும் உடனே போலீஸுக்குத் தகவல் சொன்னேன். அவனே வளர்த்து சந்தையில வித்தது மாதிரி, பணம் வாங்க வந்தான் அந்தப் பய. கையும் களவுமாப் பிடிச்சுட்டோம்” என்றார்.

ஆட்டுச்சந்தை
ஆட்டுச்சந்தை

திருச்செந்தூர் பகுதியில் ஆடுகள் காணாமல் போவது தொடர்கதையாகி வருவதால், இதன் பின்னணியில் உள்ள ஆடு திருடும் கும்பல் குறித்தும் போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு