Published:Updated:

விழுப்புரம்: கணவனை இழந்த பழங்குடியினப் பெண் தற்கொலை; பாலியல் தொல்லை? - வெளியான ஆடியோ; இளைஞர் கைது

தற்கொலை

கணவனை இழந்த பழங்குடிச் சமூகப் பெண் ஒருவரிடம், அந்தப் பகுதி நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும், இதனால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்: கணவனை இழந்த பழங்குடியினப் பெண் தற்கொலை; பாலியல் தொல்லை? - வெளியான ஆடியோ; இளைஞர் கைது

கணவனை இழந்த பழங்குடிச் சமூகப் பெண் ஒருவரிடம், அந்தப் பகுதி நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும், இதனால் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மாத்தூர் திருக்கை பகுதியில் வசித்துவந்திருக்கின்றனர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் - தாட்சயணி தம்பதி. இவர்களுக்குத் திருமணமாகி, இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். கூலித் தொழிலாளியான சுரேஷ், கடந்த 30 தினங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கிறார். அதற்குப் பிறகு, தன் குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்திருக்கிறார் தாட்சயணி. இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தாட்சயணிக்கு நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

புகார் கொடுத்த சகோதரி, தற்கொலை செய்துகொண்ட பெண்
புகார் கொடுத்த சகோதரி, தற்கொலை செய்துகொண்ட பெண்

பின்னர், சக்திவேல் தனக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக, தனது சகோதரி துர்கா என்பவரிடம் தொலைபேசியில் தெரிவித்த தாட்சயணி, "நீ எனக்கு வேணும்..." என சக்திவேல் பாலியல்ரீதியாக பேசிய ஆடியோ ஒன்றையும் அனுப்பிவைத்திருக்கிறார். அதன் பின்னரும் தாட்சயணிக்கு, சக்திவேல் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. எனவே தாட்சயணியிடம், "ஊர் பெரியோரிடம் நாங்கள் வந்து பேசுகிறோம்" என்று துர்கா கூறியிருந்தாராம். 

இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி இரவு கொக்கு மருந்தை சாப்பிட்டு தாட்சயணி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். சக்திவேல் பாலியல் தொல்லை அளித்ததாலேயே தாட்சயணி தற்கொலை செய்துகொண்டதாக, ஆடியோ பதிவுடன் அனந்தபுரம் காவல் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி மாலை புகார் அளித்துள்ளார் துர்கா. 

கைதுசெய்யப்பட்ட சக்திவேல்
கைதுசெய்யப்பட்ட சக்திவேல்

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள், 306, 345(d) உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தலைமறைவாக இருந்த சக்திவேலைத் தனிப்படை அமைத்து தேடிவந்த போலீஸார், சென்னையில் பதுங்கி இருந்தவரைக் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மூன்று சிறார்களும் பெற்றோர் இருவரையும் இழந்து வாடுவது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.