Published:Updated:

காவலாளி தலையில் கல்லைப் போட்டு ரூ.500, செல்போனை திருடிச் செல்லும் மர்மநபர்! - திருச்சியில் கொடூரம்

அந்த வணிக வளாகம்
அந்த வணிக வளாகம்

திருச்சியில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், வணிகவளாக காவலாளி ஒருவர் மீது மர்மநபர் ஒருவர், பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு கொலை செய்ய முயன்றதுடன், மர்மநபர் பணம் திருடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி, கன்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ளது டேப்ஸ் வணிக வளாகம். இதில் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளுக்குப் பாதுகாப்பாக வணிக வளாகத்தின் சார்பில் காவலாளிகள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதில் பொன்மலை, அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரும் ஒருவர்.

நேற்று முன்தினம் இரவு பணியிலிருந்த காவலாளி செந்தில்குமார், அதிகாலை 2 மணியளவில் வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள லிப்ட் அருகே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

பாரங்கல்லுடன் மர்மநபர்
பாரங்கல்லுடன் மர்மநபர்

அப்போது அங்கு வந்த மர்மநபர், பாராங்கல்லைத் தூக்கிவந்து தூங்கிக்கொண்டிருந்த செந்தில்குமார் மீது வீசியதுடன், படுகாயமடைந்த செந்தில்குமார் சட்டைப்பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அதைத்தொடர்ந்து, படுகாயமடைந்த செந்தில்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில், மர்மநபர் வீசிய பாராங்கல் செந்தில்குமாரின் தலையில் விழாமல், தோளில் விழுந்ததில் அவர் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் காவலாளி செந்தில்குமார் இருந்துவரும்நிலையில், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். தற்போது அந்த கேமரா பதிவுகள் போலீஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.

மர்மநபர் வணிக வளாகத்தின் வெளிப்பகுதியிலிருந்து பாராங்கல்லை தலைக்கு மேலே தூக்கி வருவதும், அந்தக் கல்லை தூங்கிக்கொண்டிருந்த காவலாளி செந்தில்குமார் தலையில் நான்கு முறை போடுவதும் பதிவாகியுள்ளது. மேலும், படுகாயமடைந்த காவலாளி செந்தில்குமாரின் சட்டைப் பையில் இருந்த பணத்தையும் செல்போனையும் அந்த மர்ம நபர் எடுத்துச் செல்கிறார்.

பாரங்கல்லுடன் மர்மநபர்
பாரங்கல்லுடன் மர்மநபர்

அந்த மர்மநபர் திருடுவதற்காக வந்திருக்கலாம் என்றும், திருடுவதற்குக் காவலாளி செந்தில்குமார் இடையூறாக இருந்ததால் அவரைக் கொலை செய்யும் வகையில் பாரங்கல்லை தலையில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகப்படும் போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், திருச்சி மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அனைத்து காவலாளியும் இரவு நேரங்களில் விழிப்புடன் இருந்து, மர்ம நபரை எங்கு பார்த்தாலும் பிடித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்குத் தெரியப்படுத்துமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையம், திருச்சி மாநகராட்சி, நீதிமன்றம், பள்ளி மற்றும் மருத்துவமனைகள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிக வளாகம்
வணிக வளாகம்

இதேபோல், திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள பாலாஜி 7-வது தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்துவரும் மத்திய துப்பாக்கித் தொழிற்சாலையின் ஊழியரான வெங்கடேசன் என்பவர் வீட்டில், நேற்று உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 51 பவுன் தங்கநகை மற்றும் 5.50 லட்சம் பணத்தை அள்ளிச் சென்றனர். இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களால் திருச்சியில் பெரும்பரபரப்பு நிலவுகிறது.

அடுத்த கட்டுரைக்கு