Published:Updated:

கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண்! - ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி வாக்குமூலம்

சி.ய.ஆனந்தகுமார்
என்.ஜி.மணிகண்டன்

``என்னை மறந்துவிட்டு நீ மட்டும் சந்தோஷமா வாழுகிறாயா..? உன்னை உயிரோடு விடமாட்டேன்” என ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பெண்ணை கழுத்தறுத்துக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநர் சண்முகம்
ஆட்டோ ஓட்டுநர் சண்முகம்

திருச்சி, ஏர்போர்ட், காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கே.கே.நகர் பகுதியில் உள்ள அரிசி குடோனில் மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

கொலை செய்யப்பட்ட உமா சத்யா
கொலை செய்யப்பட்ட உமா சத்யா

கூலிவேலை செய்யும் கணவரின் வருமானம் தன் இரண்டு பெண் குழந்தைகளின் கல்விக்கும் குடும்பத்துக்கும் போதாத காரணத்தால், அவரின் மனைவி உமாசத்யா, திருச்சி ஏர்போர்ட் காந்திநகர் பிரதான சாலையில் டிபன் கடை ஒன்றை நடத்தி வந்தார். அந்தவகையில் டிபன் கடைக்கு வாடிக்கையாளராக அடிக்கடி வருகைதரும், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகத்துடன், உமா சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம், கணவர் மாரிமுத்துவுக்கு தெரியவரவே, மனைவி உமா சத்யாவைக் கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதைத் தொடர்ந்து, சண்முகத்துடன் பேசுவதையும் பழகுவதையும் உமா சத்யா தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வழக்கமாக டிபன் கடை போடும் இடத்தில் உமா சத்யா கடையில் இட்லி ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் சண்முகம், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர் குடி போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. `என்னிடம் எப்படி நீ பேசாமல் இருக்கிறாய். உனக்கு உன் புருஷன்தான் முக்கியமா. என்னை மறந்துட்டு நீ நிம்மதியா வாழுறியா. உன்னை உயிரோடு விடமாட்டேன்' எனச் சண்டை போட்டவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகம், உமா சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் உமா சத்யா உயிரிழந்தார். சண்முகம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

உமா சத்யா
உமா சத்யா

தகவலறிந்து அங்கு வந்த திருச்சி கே.கே.நகர் போலீஸார், உமாசத்யா உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர் சண்முகத்தை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகம், ``உமா சத்யா தன்னை தவித்துவருவதைத் தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவரைக் கொலை செய்ய கத்தியுடன் அலைந்தேன். என்னை மறந்துட்டு அவமட்டும் எப்படி சந்தோசமாக வாழலாம். அதான் சந்தர்ப்பம் கிடைத்தது. கழுத்தறுத்து கொன்றுவிட்டேன்” என்றாராம்.