Published:Updated:

`எங்களுக்கு எதிராக நீதிமன்றம் போகலாமா?!' -உ.பி-யில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர், பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

பெண் எரிக்கப்பட்ட இடம்
பெண் எரிக்கப்பட்ட இடம் ( Twitter )

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண் கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வன்கொடுமை
வன்கொடுமை
மாதிரி புகைப்படம்

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், தனக்கிருக்கும் செல்வாக்கால் ஜாமீன் பெற்று வெளியில் வந்துவிட்டார். மற்றொருவர் காவலர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடப்படும் நபராக அறிவித்துள்ளது உத்தரப்பிரதேச காவல்துறை.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், வழக்கு விசாரணை தொடர்பாக இன்று ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார்.

ஆன்லைன் கத்தி; தினமும் நோட்டம்! - தன்னை சிறைக்கு அனுப்பிய பெண்ணை கொடூரமாகப் பழிவாங்கிய இளைஞர்

அப்போது அவரை வழிமறித்த ஐந்து பேர் கொண்ட கும்பல், அந்தப் பெண்ணைக் கடத்தி கிராமத்துக்கு வெளியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரில் ஒருவர் முன்னதாக பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியவர் எனக் கூறப்படுகிறது. 70 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

இதுபற்றிப் பேசியுள்ள உன்னாவ் எஸ்.பி, “பெண் எரிக்கப்பட்டது தொடர்பாக இன்று காலை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாங்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது ” எனக் கூறியுள்ளார்.

`` பெண்ணைக் காப்பாற்றுவது மட்டுமே எங்கள் முதல் கடமை. நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இன்னும் பல தகவல்களைப் பெற நாங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியதை, போலீஸார் எதிர்த்திருப்பார்கள் என நம்புகிறேன். தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடந்து வருகிறது” என உத்தரப்பிரதேச டி.ஜி.பி ஓ.பி.சிங் என்.டி.டிவி ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

உ.பி போலீஸ்
உ.பி போலீஸ்

கடந்த வாரம் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் ஓயாத நிலையில் தற்போது அதேபோன்று மற்றொரு பெண்ணும் எரிக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.