தேனி: முதியவர் மர்ம மரணம்... பிரேத பரிசோதனையால் சிக்கிய இளைஞர்!

முதியவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள கெங்குவார்பட்டியில் வசித்துவந்த பொன்ராம் (வயது 75) என்ற முதியவர், கடந்த சில நாள்களுக்கு முன்னர், அவரது வீட்டுப் படுக்கையறையில் இறந்தநிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், யாரோ ஒருவர் தனது தந்தையைக் கொலை செய்திருக்கலாம் எனக் கூறி, தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரைப் பதிவு செய்த தேவதானப்பட்டி போலீஸார், விசாரணையில் இறங்கினார்கள். அதேநேரத்தில், பொன்ராமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், முதியவர் பொன்ராம், கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. அதை அடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய தேவதானப்பட்டி போலீஸார், பொன்ராமின் வீட்டுக்கு அடிக்கடி வரும் அருண்குமார் (வயது 26) என்பவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து விசாரித்ததில், அவர் கூறிய தகவலால் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

அருண்குமாரும், அவரது நண்பர் ஒருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுவந்திருக்கிறார்கள். அந்த நண்பருக்குத் திருமணம் ஆனதால், பொன்ராமிடம் அருண்குமார் பழகிவந்திருக்கிறார். சம்பவத்தன்று, இரவு குடிபோதையில் பொன்ராம் வீட்டுக்கு வந்திருக்கிறார் அருண்குமார். அப்போது பொன்ராமிடம் ஓரினச் சேர்க்கை செய்ய முயல, அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்து, பொன்ராமின் கழுத்தை நெரித்திக் கொலை செய்தததாகவும் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் அருண்குமார். அதைத் தொடர்ந்து, அருண்குமார் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதியவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.