Published:Updated:

`காதலித்தேன், எச்சரித்தனர்!'- பெண்ணின் அண்ணன்களின் ஆயுத தாக்குதலில் உயிர்தப்பிய வாலிபர்

திருச்சியில் எப்போதும் திருவானைக்காவல் பகுதி பரபரப்பாக இருக்கும். வழக்கமாக பணிக்குச் செல்வோர், வீடு திரும்பும் வேலை என்பதால் மாலை கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்படியான சூழலில் வாலிபர் ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைவெறித் தாக்குதல்
கொலைவெறித் தாக்குதல்

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பிரிவு சாலையில் நேற்று மாலை, வாலிபர் ஒருவர் பைக்கில் சென்றுகொண்டிருக்க, அவரைப் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல், சட்டென பைக்கில் சென்ற வாலிபரை, ஒருவர் இரும்பு ராடால் தாக்க வாகனத்திலிருந்து கீழே விழுகிறார். அடுத்து அந்தக் கும்பல், இரும்பு ராடு, அரிவாள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களால் தாக்குகிறார்கள். அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த இளைஞர், அப்பகுதியில் இருந்த கடைக்கு ஓடி ஒளிகிறார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத அந்தக் கும்பல் இளைஞரை நடுரோட்டுக்கு இழுத்துவந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

இளைஞர் மீது தாக்குதல்
இளைஞர் மீது தாக்குதல்

சுயநினைவு இழந்து கிடக்கும் அந்த இளைஞரை எட்டி உதைத்தும், அரிவாளால் உடலில் ஆங்காங்கே கொத்தி சிதைத்ததுடன், அவரை எச்சரித்துவிட்டு அந்தக் கும்பல் நிதானமாக பைக்கில் சென்றது. அதுவரை தாக்குதலுக்குள்ளான நபர் குறித்தோ, தாக்கிய நபர்கள் குறித்தோ, யாருக்கும் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பதும், தாக்குதல் நடப்பதைப் பார்த்த ஒரு சிறுவன் ஓடிவந்து எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வதும், ஒருவர் போதும் போங்க என கும்பலுக்கு சைகைக்காட்டுவது பலரையும் அதிர வைத்துள்ளது. இந்தக் கொலைவெறித் தாக்குதல் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்க, அந்த வீடியோ வெளியாகி நெஞ்சைப் பதறவைக்கிறது.

இந்த நிலையில், படுகாயமடைந்த அந்த வாலிபரை, அப்பகுதி மக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் நடத்திய விசாரணையில், தாக்குதலுக்குள்ளான நபர், திருச்சி திருவானைக்காவல் அடுத்த திம்மராயர் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கிட்டப்பா என்பவரின் மகனான மணிகண்டன் என்பதும், அவர் கொத்தனார் வேலை செய்துவருவதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், மணிகண்டன் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் தங்கையைக் காதலித்து வருவதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த சிவா தன் நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும் முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாக்கப்படும் இளைஞர்
தாக்கப்படும் இளைஞர்

இந்த நிலையில், படுகாயமடைந்த மணிகண்டன், திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். தன் தங்கையைக் காதலிக்கும் மணிகண்டனை, சிவா தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகியிருப்பதால், அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் அதிரவைத்துள்ளது.

இதனிடையே, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மணிகண்டன், ``நான் சிவாவின் தங்கையைக் காதலித்தேன். இந்தத் தகவல் தெரிந்து சிவா, என்னை எச்சரித்து வந்தார். இந்த நிலையில் சிவா, அவரது நண்பர்களுடன் சேர்ந்து என்னைத் தாக்கினார்" என்றார்.

இந்த நிலையில், மணிகண்டனைத் தாக்கிய 5 பேரும் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், போலீஸார் அதை மறுத்தனர்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாலிபர்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வாலிபர்

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ``மணிகண்டன் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், தற்போது அவரின் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவரும் மணிகண்டன், மதுப் பழக்கம் உடையவர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் சிவாவின் பத்தாவது படிக்கும் தங்கையைக் கேலி கிண்டல் செய்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் அண்ணன்களான மேல கொண்டையன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவா, சுரேஷ், சந்தோஷ் மற்றும் அவரின் நண்பர்கள் சோடா மோகன் உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து மணிகண்டன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பல் சிக்கினால்தான் முழு உண்மை தெரியவரும் என்பதால் போலீஸார் அவர்களைத் தீவிரமாக தேடி வருகிறார்கள்.