Published:Updated:

``மீட்டர் வட்டிக்கும் மேல; 1.5 கோடி கேட்டாங்க" -வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பாஜக பிரமுகர்

உயிரிழந்த தினேஷ்

கந்து வட்டி தொல்லை என கூறி, பா.ஜ.க பிரமுகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

``மீட்டர் வட்டிக்கும் மேல; 1.5 கோடி கேட்டாங்க" -வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பாஜக பிரமுகர்

கந்து வட்டி தொல்லை என கூறி, பா.ஜ.க பிரமுகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
உயிரிழந்த தினேஷ்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (எ) தினேஷ். இவர் கள்ளக்குறிச்சி பா.ஜ.க நகர இளைஞரணி துணை செயலாளராக இருந்து வந்துள்ளார். இவருடைய தந்தை சிறுவயதிலேயே இறந்த நிலையில், படிப்பை முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் வசூல் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில், விஷமருந்திய நிலையில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்துவட்டி கொடுமை உள்ளிட்ட காரணங்களால் தான் தற்கொலை செய்து கொள்வதாக, அவர் இறப்பதற்கு முன்பு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உருக்கமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்கொலை - மரணம்
தற்கொலை - மரணம்
சித்திரிப்புப் படம்

அந்த வீடியோ காட்சிகளில், "எங்க அம்மா, பாப்பா, பாட்டியை அனாதையாக விட்டுட்டு போக போறேன். எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்க. அப்பா மாதிரி பார்த்த எங்க ஓனர், முழுசா என்னை ஏமாத்திட்டாரு. இரண்டு லட்ச ரூபா வாங்கினார், தரல. இவரு மனரீதியா என்னை டார்ச்சர் பண்ணாரு. இன்னொருத்தரு 10,000 ரூபா பணம் கொடுத்தார். ஆனா, அதுக்கு அவர் மீட்டர் வட்டிக்கு மேல வட்டி போட்டு, 'ஜி பே' மூலமா 7.5 லட்சத்துக்கு மேலே நான் கொடுத்திருக்கேன். மொபைல் பேங்கிங் மூலமா 10 லட்சம் அனுப்பியிருப்பேன். அவர்கிட்ட வாங்குற காசு அவர்கிட்டயே போயிடும். ஒரு கட்டத்துல என்னால தரமுடியல. பொய் பொய்யா பேசி ஒன்றரை மாசம் ஓடிட்டேன். இதுக்கு மேல என்னால முடியல. அப்புறம் 3 லட்சம் பணம் எனக்கு கொடுத்துட்டு, அதை வட்டி வட்டினே திருப்பி வாங்கிட்டாரு. இப்போ 1கோடி கொடு, 1.5 கோடி கொடுனு டார்ச்சர் பண்ணுறாரு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன பண்ணுறதுனே தெரியல, இன்னைக்கு நைட்டே பணம் செட்டில் பண்ண சொல்லி எனக்கு டைம் கொடுத்திருக்காங்க. என்னை ஏமாற்றி பாண்டு வாங்கிக்கிட்டாங்க, செக் லீஃப் ஒன்று வாங்கிக்கிட்டாங்க. என்ன ரொம்ப கார்னர் பண்ணாங்க. நான் தனியாக தொழில் ஆரம்பிச்சேன், அந்த பணத்தையும் எங்க ஓனர் வாங்கிக்கிட்டாரு. என்னுடைய சாவுக்கு முழுக்க முழுக்க காரணம் வேல்முருகன், பன்னீர்செல்வம் தான். நான் சாகப் போறேன், சீனு அண்ணே, கார்த்தி அண்ணே, இளையராஜா அண்ணே, மோகன் அண்னே, மகேஷ் அண்ணே... உங்க எல்லாரையும் நம்பித்தான் நான் போறேன். அம்மாக்கு வீட்டு வாடகை மட்டும் பேசி கம்மி பண்ணி கொடுக்க சொல்லுங்கண்ணே.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

எங்க குடும்பத்தை கொஞ்ச நாளைக்கு பாத்துக்கோங்க. அம்மாவுக்கு ஹாஸ்பிடல் போக உதவி பண்ணுங்க. அப்போ அப்போ பணம் தேவைப்பட்டா கொடுங்கண்ணே, அம்மா அதை திருப்பி தந்திடுவாங்க. அம்மா, பாப்பாவை பாத்துக்கோங்க அண்ணே. உங்கள விட்டா எனக்கு யாருமே இல்லைங்கண்ணே... நீங்க இருக்கிற தயவுல தானே போறேன்" என்று முடிகிறது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கள்ளக்குறிச்சி காவல்துறையினர், தினேஷின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், தினேஷின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், தினேஷ் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை கைப்பற்றியதோடு, வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா போன்ற சந்தேக கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கந்து வெட்டி கொடுமை என கூறி, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.'

இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., செல்வக்குமாரிடம் பேசினோம். "உயிரிழந்த தினேஷ், பன்னீர்செல்வம் என்பவர் நடத்திய எண்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். பன்னீர்செல்வத்திடம் விசாரணை மேற்கொள்ளும் போதுதான், தினேஷ் ஏன் அங்கு வேலைக்குச் செல்லாமல் நின்றார் என்பது தெரியவரும். மற்றொன்று, வேல்முருகன் என்பவரிடம் பணம் பெற்ற நிலையில், தான் ஏமாற்றப்பட்டதாக வீடியோவில் கூறுகிறார் தினேஷ். விசாரணையில், வேல்முருகன் என்பவரிடம் தினேஷ் பணம் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம், தினேஷ் ஒரு தனியார் நிதி நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ளார்.

கந்துவட்டி
கந்துவட்டி

அதில், வரவேண்டிய பணம் வராததால் தினேஷ் ஒரு நிதி நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறார். இவரிடமிருந்து அதிக வட்டி பெற்றாரா... இல்லையா... என்பது குறித்து வேல்முருகனை விசாரித்து, வங்கிக் கணக்கு விவரங்களைச் சோதித்துப் பார்க்கும் போதுதான் தெரியவரும். மேலும், இவ்விருவர் மூலம் நெருக்கடி வந்த நிலையில் தான் இவ்வாறு குறிப்பிட்டு தினேஷ் உயிரிழந்துள்ளார். பன்னீர்செல்வம், வேல்முருகனை மூன்று தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம். தினேஷ் அந்த நிதி நிறுவனம் மூலம் கிடைத்தப் பணத்தை பிட்காயினில் முதலீடு செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.