விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ளது வெங்கந்தூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது இளைஞர் ஞானவேல். செங்கல் சூலை வேலை செய்யும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 3 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சென்னையைச் சேர்ந்த அசோக் என்பவர் கடந்த சில வாரங்களாக தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. கஞ்சா புகைக்கும் பழக்கம் கொண்டவராக கூறப்படும் இந்த அசோக்கும், ஞானவேலுக்கும் இடையே முன்பகை இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று (07.05.2022) இரவு ஞானவேல் வேலையை முடித்துவிட்டு தனியாக வந்துக் கொண்டிருந்தபோது, அசோக் தன் நண்பருடன் சேர்ந்து வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் அசோக், ஞானவேலை தாக்கியதோடு கழுத்தில் காலை வைத்து அழுத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றிருக்கிறார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் ஞானவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக திண்டிவனம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அதிந்துப்போன ஞானவேலின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் தீவனூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த விழுப்புரம் டி.எஸ்.பி பார்த்திபன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். மேலும், பெரியதச்சூர் போலீஸார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
