Published:Updated:

டெல்லிக் கலவரத்தில் கொல்லப்பட்ட உளவுத்துறை காவலர்!- ஆம் ஆத்மி கவுன்சிலருக்குத் தொடர்பா?

தாஹிர் உசைன்
தாஹிர் உசைன்

டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லியில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. போராட்டக்காரர்களின் தாக்குதலில் மத்திய உளவுத்துறையில் பணியாற்றும் அன்கித் ஷர்மா என்பவர் உயிரிழந்துள்ளார். வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்கியதில் அன்கித் ஷர்மா இறந்ததாக டெல்லி போலீஸார் கூறுகின்றனர். அன்கித் ஷர்மாவைக் கடுமையாகத் தாக்கிய கும்பல், உடலை வடிகாலில் தூக்கி வீசிவிட்டுச் சென்றதாக அவரது சகோதரர் கூறியுள்ளார்.

டெல்லிக் கலவரம்
டெல்லிக் கலவரம்
AP

அன்கித் ஷர்மாவின் உடல் வடிகாலிலிருந்து மீட்கப்பட்டது. டெல்லிக் காவல்துறையில் பணியாற்றும் அவரது தந்தை அன்கித் ஷர்மாவின் உடலை அடையாளம் காட்டினார். அன்கித் உடலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைந்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் உசைன் வீட்டுக்கு அருகில் இருந்த வடிகாலில் இருந்துதான் அன்கித் உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் அன்கித் மரணத்தில் தாஹிர் உசைனுக்கு சம்பந்தம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாஹிர் உசைன் வீட்டின் மாடியிலிருந்து சிலர் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசும் வீடியோ வெளியாகியுள்ளது.

வடிகாலில் சடலம்;உடலைத் துளைத்த தோட்டாக்கள்?!- டெல்லி கலவரத்தில் கொல்லப்பட்ட மத்திய உளவுத்துறை காவலர்

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தாஹிர் உசைன், ``அந்த வீடியோ தொடர்பாக வெளியாகும் தகவல்கள் பொய்யானது. நான் கடந்த 24-ம் தேதியே போலீஸார் முன்னிலையில் பாதுகாப்பான இடத்துக்குக் குடும்பத்துடன் சென்றுவிட்டேன். அதன்பின்னர் நான் வீடு திரும்பவில்லை" எனக் கூறியுள்ளார்.

தாஹிர் உசைன்
தாஹிர் உசைன்

டெல்லி வன்முறையில் வீடு இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்னையில் அரசியலுக்கு இடமில்லை. ‘வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்படும். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் யாராவது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்க வேண்டும்” என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். இந்நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதையடுத்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு