Published:Updated:

`ஜனவரி 28 நியூஸ் பேப்பர்; பாகிஸ்தான் முத்திரை!' - கேரளாவை அதிரவைத்த 14 தோட்டாக்கள்

தோட்டாக்கள்
தோட்டாக்கள் ( Twitter )

தமிழக எல்லையை ஒட்டிய கொல்லம் மாவட்டத்தில், 14 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டிருப்பது கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில், ஒரு தோட்டாவில் பாகிஸ்தான் முத்திரை இருப்பது தேசிய அளவில் கவனம்பெற்றுள்ளது.

கொல்லம் மாவட்டத்தின் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜோஷி மற்றும் அஜீஸ். நண்பர்களான இவர்கள், திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சென்றபோது, பிளாஸ்டிக் கவரில் ஏதோ ஒரு பொருள் கீழே கிடப்பதை நேற்று மாலை 3 மணியளவில் பார்த்திருக்கிறார்கள். அதை எடுத்துப் பார்த்தபோது, அந்த பிளாஸ்டிக் கவருக்குள் செய்தித்தாளில் சுற்றப்பட்டு 14 தோட்டாக்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் 12 தோட்டாக்கள் ஒரு பெட்டியிலும், இரண்டு தோட்டாக்கள் வெளியிலும் இருந்திருக்கின்றன.

• இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், கேரள போலீஸாரை அலர்ட் செய்திருக்கிறார்கள். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தோட்டாக்களை ஆய்வுசெய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவை அதிக தூரம் சென்று இலக்கைத் தாக்கும் 7.62 மி.மீ ரகத் தோட்டாக்கள் என்பதும், அவை வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் ஒரு தோட்டாவில், `POF' என்ற முத்திரை இருந்ததை போலீஸார் கண்டறிந்தவுடன், உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். POF என்பது பாகிஸ்தான் ஆயுதத் தொழிற்சாலையைக் குறிக்கும் (Pakistan Ordnance Factories). ராணுவம், போலீஸார் போன்றோர் பயன்படுத்தும் தோட்டாக்களை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆயுதத் தொழிற்சாலைகளில் தயாரிப்பார்கள். அந்த தோட்டாக்களில், அதுதொடர்பான முத்திரை இடம்பெற்றிருக்கும்.

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தோட்டாக்களில் ராணுவத் தளவாடங்களுக்கான ஆயுதங்களைத் தயாரிக்கும் இந்திய ஆயுதத் தொழிற்சாலையைக் குறிக்கும் `IOF' என்ற முத்திரை இடம்பெற்றிருக்கும். அதேபோல், பாகிஸ்தான் ராணுவத்துக்காகத் தயாரிக்கப்படும் `POF' முத்திரை தாங்கிய தோட்டாக்கள் கேரளாவில் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, ராணுவம் மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியோருக்கு கேரள போலீஸார் தகவல் கொடுத்தனர்.

பாகிஸ்தான் முத்திரையுடன் கூடிய தோட்டா
பாகிஸ்தான் முத்திரையுடன் கூடிய தோட்டா
EnteVarthakal

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் அடங்கிய குழு, குளத்துப்புழா வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திவருகிறார்கள். இன்றும் நாளையும் அவர்கள் சோதனைப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும், பாதுகாப்புக்காக மாநில போலீஸாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விசாரணையில், அந்தத் தோட்டாக்கள் ஜனவரி 28-ம் தேதியிட்ட செய்தித் தாளில் மடித்து வைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவந்தது. இதனால், அந்த நாளுக்குப் பின்னரே இந்தத் தோட்டாக்கள் குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் என்று கருதப்படுகிறது. விசாரணை, தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா
கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள டிஜிபி லோக்நாத் பெகரா, ``இந்த விவகாரம் தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்திருக்கிறோம். அதேபோல், விசாரணைக்கு உதவும்படி அண்டை மாநில டிஜிபி-களிடமும் பேசியிருக்கிறேன். விரைவில் தோட்டாக்களின் பின்னணி என்ன என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில், தீவிரவாதிகளின் சதி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்'' என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, திருவனந்தபுரம் போலீஸ் பட்டாலியனில் இருந்து கடந்த 2013-18 -க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில், 12,000-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மாயமானதாக அம்மாநில தணிக்கைத் துறை குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டை கேரள அரசு மறுத்திருந்தது. அதேநேரம், இது அந்தத் தோட்டாக்கள் இல்லை என்பதை கேரள போலீஸார் உறுதி செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் கேரளாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`போலீஸின் 25 ரைஃபிள்கள்; 12,061 தோட்டாக்கள் எங்கே?!' - சிஏஜி அறிக்கையும் கேரள அரசின் சமாளிப்பும்..

கர்நாடக - கேரள எல்லையில் 60 தோட்டாக்கள் பறிமுதல்!

14 தோட்டாக்கள் குறித்த விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், கண்ணூர் அருகில் கர்நாடகாவை ஒட்டியுள்ள கிளியந்தரா செக்போஸ்ட்டில், காரில் வந்த ஒருவரிடமிருந்து 60 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கண்ணூரை அடுத்த தில்லன்கேரி பகுதியைச் சேர்ந்த பிரமோத் என்பவரை சுங்கத்துறையினர் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், பயிரைச் சேதப்படுத்தும் கரடிகள், குரங்குகளைக் கொல்வதற்காக அந்தத் தோட்டாக்களை விராஜ்பேட் பகுதியிலிருந்து வாங்கிவருவதாக பிரமோத் தெரிவித்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு