Published:Updated:

பாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள்... அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு!

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசுப் பேருந்துகள்

பாம்பன் பாலத்தில் கடந்த 12-ம் தேதி ஆம்னி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாம்பன் பாலத்தில் தொடரும் விபத்துகள்... அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு!

பாம்பன் பாலத்தில் கடந்த 12-ம் தேதி ஆம்னி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், இப்போது அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசுப் பேருந்துகள்

ராமநாதபுரத்தையும் ராமேஸ்வரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் பாலமாக பாம்பன் பாலம் அமைந்திருக்கிறது. ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரமே பாம்பன் பாலத்தை நம்பித்தான் இருக்கிறது. ராமேஸ்வரம் தீவிலிருந்து வெளியே வருவதற்கும், மீண்டும் உள்ளே செல்வதற்கும் இந்தப் பாம்பன் பாலம்தான் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. மேலும், புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயில் ராமேஸ்வரத்தில் அமைந்திருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தப் பாலத்தைக் கடந்துதான் அந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

பாம்பன் தடுப்புச் சுவரில் மோதி ஆபத்தாக நிற்கும் ஆம்னி பேருந்து
பாம்பன் தடுப்புச் சுவரில் மோதி ஆபத்தாக நிற்கும் ஆம்னி பேருந்து

இந்த நிலையில் சமீபகாலமாக பாம்பன் பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்துவருவது அந்தப் பகுதி மீனவ மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கடந்த 12-ம் தேதி சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆம்னி பேருந்தும், மதுரையை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஆம்னி பேருந்து பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி கடலில் விழும் அளவுக்கு மிகவும் ஆபத்தான முறையில் நிறுத்தப்பட்டது. அதன் அதிர்ச்சியிலிருந்தே இதுவரை அந்தப் பகுதி மக்கள் மீளாமல் இருக்கின்றனர். அதற்குள் மீண்டும் அதேபோல் விபத்து நடந்திருப்பது அவர்களை மேலும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசுப் பேருந்துகள்
நேருக்கு நேர் மோதிக்கொண்ட அரசுப் பேருந்துகள்

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை மதுரைக்கு அரசுப் பேருந்து கிளம்பியிருக்கிறது. பாம்பன் பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் தாறுமாறாக ஓடியிருக்கிறது. பிரேக்கை அழுத்திப் பிடித்தபோதும், மழையின் காரணமாக பாம்பன் பாலத்தில் தேங்கியிருந்த தண்ணீரால் பிரேக் பிடித்தும் நிற்காமல் எதிரே திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இரு பேருந்தின் ஓட்டுநர்கள் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீஸார், அந்தப் பகுதி மீனவர்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தால் பாம்பன் சாலை பாலத்தில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய பேருந்துகளை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.

பாலத்தில் விபத்தில் சிக்கி நின்ற அரசு பேருந்து
பாலத்தில் விபத்தில் சிக்கி நின்ற அரசு பேருந்து

இது குறித்து பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி நம்மிடம் பேசும்போது, ``அதிகாரிகளின் அலட்சியத்தால் பாம்பன் பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்துவருகிறது. குறிப்பிட்ட அளவக்குத்தான் பாரம் ஏற்றிச் செல்ல வேண்டும் என விதி இருந்தும், அதிக பாரத்துடன் பொருள்களை ஏற்றி பாலத்தைக் கடந்துவருகின்றனர். இதனால் பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியிருக்கிறது. மேலும் சுற்றுலாப்பயணிகளை ஒழுங்குபடுத்தவேண்டிய போலீஸார் அதைக் கண்டுகொள்ளாமல்விடுவதால், பாலத்தின் எதிரெதிர்த் திசையில் வரும் சுற்றுலாப்பயணிகள் பொறுப்பற்ற முறையில் இரு புறமும் கார்களை நிறுத்திக்கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

அதுமட்டுமின்றி தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அதிவேகமாக பாலத்தில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரம் ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கி நூலிழையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இப்போது அதேபோல் அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்கியுள்ளன‌. இது வெளியூர் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டுமென்றால் சாதாரணமான விஷயமாக இருக்கலாம். ஆனால் ராமேஸ்வரத்திலுள்ள ஒரு லட்சம் மீனவர் குடும்பங்களுக்கு உயிர்நாடியே இந்தப் பாம்பன் பாலம்தான். எனவே, பெரிய அசம்பாவிதச் சம்பவம் நடந்தால்தான் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மனநிலையிலிருந்து தமிழக அரசு மாறி தற்போதே விரைந்து நடவடிக்கை எடுத்து, பாலத்தின் இருபுறமும் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும். பாலத்தின் ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளியிலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியுடன்கூடிய வேகத்தடைகளை அமைக்க வேண்டும். பாலத்திலுள்ள சிறு சிறு பள்ளங்களை உடனடியாகச் சீர்ப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், இதைத் தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.