Published:Updated:

`பிரியாணி சாப்பிட்டு ஜெயிலுக்குப் போகலாம் சார்!'- மருதமலை பட காமெடி பாணியில் தப்பிய ரவுடி

ரவுடி வெங்கடேசன்
ரவுடி வெங்கடேசன்

பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு… எங்க வீடு பக்கத்துலதான் இருக்கு… அங்கபோய் பிரியாணி சாப்பிட்டுட்டுப் போயிடலாம் சார். என்னோட காரிலே போய்விட்டு, அதே காரிலேயே திரும்பி வந்துவிடலாம்.

மருதமலை படத்தில் வடிவேலுவை ஏமாற்றியது போல நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி ஒருவர் காஞ்சிபுரம் ஆயுதப்படை காவலரை ஏமாற்றித் தப்பிச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்த நான்கு காவலர்களைக் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மத்திய சிறை
வேலூர் மத்திய சிறை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா, செங்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கொலை, கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து என சுமார் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அணைக்கட்டுப் பகுதியில் கடந்த 2014ல் நடைபெற்ற கொலையில் தொடர்புடைய இவர், வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அணைக்கட்டு கொலை வழக்கு தொடர்பாகக் கடந்த 2ம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக காஞ்சிபுரம் ஆயுதப்படை காவலர்கள் ராஜா, புஷ்பராணி ஆகியோர் வெங்கடேசனை அழைத்து வந்தனர். வேலூர் சிறையிலிருந்தே வெங்கடேசனின் கார் மூலமாகச் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அவர்கள் வந்துள்ளனர். புஷ்பராணியின் வீடு செங்கல்பட்டில் இருப்பதால் வெங்கடேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, புஷ்பராணி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

செங்கல்பட்டு நீதிமன்றம்
செங்கல்பட்டு நீதிமன்றம்

ஆயுதப்படைக் காவலர் ராஜா மட்டும் வெங்கடேசனை வேலூர் சிறைச்சாலைக்குத் திரும்ப அழைத்துச் சென்றுள்ளார். வேலூர் சிறைக்குச் செல்லும் வழியில் வாலாஜா பகுதிக்கு வந்த போது, “பிரியாணி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு… எங்க வீடு பக்கத்துலதான் இருக்கு… அங்கபோய் பிரியாணி சாப்பிட்டுட்டுப் போயிடலாம் சார். என்னோட காரிலே போய்விட்டு, அதே காரிலேயே திரும்பி வந்துவிடலாம்” எனத் தெரிவித்திருக்கிறார். அதற்குச் சம்மதம் தெரிவித்த காவலர் ராஜாவைச் செங்காட்டில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் வெங்கடேசன்.

சாப்பிடும் முன்பு வெங்கடேசன் கைவிலங்கை அப்புறப்படுத்தினார் ராஜா. இருவரும் ஒன்றாக அமர்ந்து பிரியாணியைச் சுவைக்கத் தொடங்கினார்கள். ராஜாவிற்கு முன்பே சாப்பிட்டு முடித்த வெங்கடேசன் கைகழுவிவிட்டு வருவதாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். செய்வதறியாது திணறிய ராஜா சிறிது நேரம் அப்பகுதியில் வெங்கடேசனைத் தேடி இருக்கிறார். வெங்கடேசன் கிடைக்காததால் அவர் தப்பி ஓடியதாக உயர் அதிகாரிகளிடம் தகவலைத் தெரிவித்தார் ராஜா.

வெங்கடேசன்
வெங்கடேசன்

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி தலைமையில் துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்பு ஆயுதப்படைக் காவலர்கள் ராஜா, புஷ்பராணி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பணிக்குச் சென்ற காவலர்களைக் கண்காணிக்கத் தவறியதாக ஆயுதப்படை உதவி ஆய்வாளர் சுந்தரபாண்டியன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பரந்தாமன் ஆகியோரையும் காஞ்சிபுரம் டி.ஐ.ஜி தேன்மொழி பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மருதமலை படத்தில் வரும் காட்சியைப் போல நடைபெற்ற இந்தச் சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு