Published:Updated:

கடலூர்: தன்பாலின ஈர்ப்பு கொலை வழக்கு... காய்கறி கத்தியால் திருப்பம் - விடுதலைசெய்த நீதிமன்றம்

கொலை

ஓரினச்சேர்க்கை கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை போதிய ஆதரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

கடலூர்: தன்பாலின ஈர்ப்பு கொலை வழக்கு... காய்கறி கத்தியால் திருப்பம் - விடுதலைசெய்த நீதிமன்றம்

ஓரினச்சேர்க்கை கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை போதிய ஆதரங்கள் இல்லை என்று கூறி விடுதலை செய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

Published:Updated:
கொலை

கடலூர், கோண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மகன் சதீஷ்குமார். பொறியியல் பட்டதாரியான இவர், கடலூரில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தனது பள்ளித்தோழன் தினேஷ் என்பவரை சந்திக்கச் சென்ற சதீஷ்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அதனால் சந்தேகமடைந்த சதீஷ்குமாரின் தந்தை, தன் மகனை காணவில்லை என்று நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார் சதீஷ்குமாரின் செல்போனிலிருந்து விசாரணையை துவக்கினர். அப்போது சதீஷ்குமார் கடைசியாக தினேஷிடம் பேசியிருந்தது தெரிய வந்தததால், அவரிடம் பேசுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் முயற்சித்தனர் போலீஸார். ஆனால் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்ததுடன், அவரும் தலைமறைவாகியிருந்தார். போலீஸார் தினேஷை தேடிவந்த நிலையில், 2016 ஏப்ரல் 12-ம் தேதி தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் சரணடைந்தார்.

கொலை
கொலை

2016 ஏப்ரல் 1-ம் தேதி சதீஷ்குமாரை தனது வீட்டுக்கு அழைத்த தினேஷ், அவருடன் மது அருந்தியிருக்கிறார். தொடர்ந்து சதீஷ்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்திருக்கிறார் தினேஷ். அதற்கு அவர் மறுக்கவே அவரை பலமாக தாக்கியிருக்கிறார் தினேஷ். அதில் சதீஷ்குமார் உயிரிழந்துவிட, பயந்துபோன தினேஷ் அவரை தனது வீட்டின் பின்புறம் குழிதோண்டி புதைத்திருக்கிறார். அதையடுத்து சென்னைக்கு சென்று தலைமறைவானார் தினேஷ். ஆனால் சதீஷ்குமார் செல்போனில் பேசியதை வைத்து போலீஸார் தன்னை தேடுவதை தெரிந்துகொண்ட தினேஷ், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார். அதன்பிறகு அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சதீஷ்குமாரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த கொலை வழக்குடன், எஸ்.சி, எஸ்.டி பிரிவும் சேர்க்கப்பட்டதால் டி.எஸ்.பி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வழக்கை விசாரித்த கடலூர் முதன்மை செசன்ஸ் நீதிமன்றம், கடந்த 2018-ம் ஆண்டு தினேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் தினேஷ். நீதிபதிகள் பரேஷ் உபாத்தியாய், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதிகள் வாசித்த அந்த தீர்ப்பில் “ஓரினச்சேர்க்கைக்கு சம்மதிக்கவில்லை என்பதற்காகத்தான் இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை கொண்டதாகவே இருக்கிறது. சதீஷ்குமார் கடைசியாக தினேஷுடன்தான் இருந்தார் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர் போலீஸார்.

கொலைசெய்யப்பட்ட சதீஷ்குமார்
கொலைசெய்யப்பட்ட சதீஷ்குமார்

தினேஷ் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து அளித்த வாக்குமூலம், அவரது வீட்டுக்குப் பின்புறம் உடல் புதைக்கப்பட்டிருந்தது, பறிமுதல் செய்யப்பட்ட கத்தி போன்றவற்றின் அடிப்படையில்தான் தினேஷ்மீது போலீஸார் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் கொலைசெய்யப்பட்டவர் கடைசியாக யாரிடமெல்லாம் செல்போனில் பேசினார் என்பதையும், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. கொலை நடந்த நாளில் சதீஷ்குமாரும், தினேஷும் மது அருந்தியிருக்கின்றனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் போதையில் கொலை நடந்திருக்கிறது என்று போலீஸார் கூறினாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சதீஷ்குமார் மது அருந்தியதற்கான ஆதாரம் எதுவும் கூறப்படவில்லை. அதேபோல பிரேத பரிசோதனை செய்த டாக்டர் அளித்த அறிக்கையில், சதீஷ்குமார் உடலில் இருந்த காயம் இருபுறமும் கூர்மையான கத்தியால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் போலீஸார் பறிமுதல் செய்திருக்கும் கத்தி ஒரு பக்கம் கூர்மையான, காய்கறி வெட்டும் கத்தி. மொத்தத்தில் இந்த வழக்கு முழுவதும் முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. கொலை செய்யப்பட்டவரின் பெற்றோர், தங்கள் மகனுக்கு மாற்று சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் காதல் இருந்தது என்று தெரிவித்திருந்தும் போலீஸார் அதுகுறித்து விசாரிக்கவே இல்லை. பள்ளிக்காலத்திலிருந்தே தினேஷும், சதீஷ்குமாரும் நண்பர்கள். சென்னையில் சில நாட்கள் ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர். போலீஸாரின் வாதத்தின்படி தினேஷுக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்திருந்தால் இருவரது நட்பும் தொடர்ந்திருக்காது. முன்பின் தெரியாத வேறு கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் மனுதாரர் சரணடைந்து வாக்குமூலம் அளித்தது எப்படி ?

அங்கு சரணடைந்த தினேஷை சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தது ஏன் ? பறிமுதல் செய்யப்பட்ட கத்தியில் முரண்பாடு என இந்த வழக்கில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. எனவே இந்தக் கொலையை தினேஷ்தான் செய்தார் என்பதை போலீஸார் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை. எனவே அவரது ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. வேறு வழக்கில் தினேனை கைதுசெய்ய தேவைப்படாத பட்சத்தில் அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் காவல்துறை இந்த வழக்கை சரியாக விசாரிக்காததால்தான் தங்களுக்கு நீதி கிடக்கவில்லை என்று குற்றம்சுமத்துகின்றனர் கொலைசெய்யப்பட்ட சதீஷ்குமாரின் உறவினர்கள்.