Published:Updated:

`அவள் பேசிய கடைசி வார்த்தை; அதிர்ச்சி கொடுத்த போலீஸ்!' -கலங்கும் ஹைதராபாத் பெண் மருத்துவரின் தாய்

காவல்துறையினர் விரைந்து செயல்பட்டிருந்தால் என் மகளைக் காப்பாற்றியிருக்கலாம் என ஹைதராபாத் பெண் மருத்துவரின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் மருத்துவர்
ஹைதராபாத் மருத்துவர்

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் திட்டமிட்டு இருசக்கர வாகனத்தை பஞ்சர் செய்து, அவரைக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. `பெண் மருத்துவர் வழக்கில் கைதாகியுள்ள நால்வருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் வலுத்து வருகின்றன.

ஹைதராபாத் மருத்துவர் கொலை
ஹைதராபாத் மருத்துவர் கொலை

இந்தநிலையில், தன் மகள் கடைசியாக தன்னிடம் பேசியது குறித்தும் அன்று இரவு நடந்த விஷயங்களைப் பற்றியும் பெண் மருத்துவரின் தாய் கண்ணீர்மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

``அன்று இரவு 9:20 மணி இருக்கும். என் மகள் எனக்கு போன் செய்து, எத்தனை மாத்திரைகளை வாங்க வேண்டும் எனக் கேட்டாள். பின்னர் `எனக்கு ரொம்ப பசிக்குதும்மா.. சாப்பிடப் பழங்களை எடுத்து வை’ எனக் கூறினாள். அதுதான் நான் அவள் குரலைக் கேட்ட கடைசி நிமிடங்கள். அப்போது அவரின் வண்டி பஞ்சரானது பற்றி என்னிடம் எதுவும் கூறவில்லை. அவள் மருந்துக் கடையிலிருந்து போன் செய்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

`தார்பாயில் சுற்றப்பட்ட உடல்; எரிந்த பிறகும் நோட்டம்’ - ஹைதராபாத் பெண் கொலையில் என்ன நடந்தது? #priyankareddy

அடுத்த சில நிமிடங்களில் என் இளைய மகள் எனக்குப் போன் செய்து, `அக்கா வந்துவிட்டாளா’ எனக் கேட்டாள். இல்லை எனக் கூறினேன். நேரம் செல்லச் செல்ல எனக்குள் பயம் தொற்றிக்கொண்டது. பொதுவாக என் இருமகள்களில் யார் வெளியில் சென்றாலும், உரிய நேரத்துக்கு வரவில்லை என்றால் தொடர்ந்து போன் செய்துகொண்டே இருப்பேன். அன்றைய தினம் இரவு ஆகிவிட்டதால் என்னால் ஒரு இடத்தில் அமரமுடியவில்லை. வாசலில் நின்றபடியே மகள் வருவாளா என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஹைதராபாத் மருத்துவரின் தாய்
ஹைதராபாத் மருத்துவரின் தாய்

அதற்குள், அவள் கீழே விழுந்திருப்பாளோ.. விபத்து ஏற்பட்டிருக்குமோ.. எனப் பல எண்ணங்கள் எனக்குள் தோன்றின. சரியாக 10 மணிக்கு என் இளைய மகள், அவள் நண்பரை அழைத்துக்கொண்டு வீட்டுக்குவந்து, மீண்டும் அக்காவைப் பற்றி விசாரித்தாள், அப்போதுதான் வண்டி பற்றிய விஷயம் எனக்குத் தெரிந்தது. அக்கா இன்னும் வரவில்லை என அறிந்ததும், இளைய மகளும் அவரின் நண்பரும் அவளைத் தேடுவதற்காக டோல் பிளாசாவுக்குச் சென்றனர்.

`நாடகம்.. கூட்டு பலாத்காரம்.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

10:40 மணி வரை தேடியும் அவள் கிடைக்காததால் வீட்டுக்கு வந்துவிட்டனர். மூத்த மகளின் போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. மொத்த குடும்பமும் பதறிப்போனோம், உடனடியாக இரவு 11 மணிக்கு ஷம்ஷாபாத் விமானநிலையத்துக்கு அருகில் உள்ள காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தோம், அவர்கள் நடந்தவற்றைக் கேட்டபிறகு, `சம்பவம் நடந்த பகுதி எங்கள் காவல்நிலையத்துக்குக்கீழ் வராது' எனக் கூறி அனுப்பிவிட்டனர்.

இறப்பு
இறப்பு

இதையடுத்து, மீண்டும் அவர்கள் கூறிய காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தோம். அங்கு காவலர்கள் எங்களை மிகவும் மோசமாக நடத்தினார்கள். முதலில் எங்கள் மகளைப் பற்றி விசாரித்தார்கள், பின்னர், `அவளுக்கு ஏதேனும் காதல் உள்ளதா மறைக்காமல் கூறுங்கள்' எனக் கேட்டனர். சிசிடிவி காட்சிகளில் என் மகள் வெளியில் செல்வது மட்டும்தான் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு `உங்கள் மகள் யாருடனாவது சென்றிருப்பார்’ எனச் சொன்னார்கள். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. மேலும், நாங்கள் புகார் கொடுத்த உடனேயே விசாரணையைத் தொடங்கியிருந்தால், எங்கள் மகளை எப்படியாவது காப்பாற்றியிருக்கலாம். ஆனால், காவலர்கள் மிகவும் அலட்சியமாகச் செயல்பட்டனர்.

அதிகாலை 4 மணிக்கு எரிந்த நிலையில் என் மகளின் உடல் கண்டுபிடிக்கப்பட்டவுடன் தான் விசாரணையைத் தீவிரப்படுத்தினார்கள். இறுதியாக வீட்டை விட்டுப் புறப்படும்போது, விரைவில் வந்துவிடுவதாக என் மகள் தெரிவித்துவிட்டுச் சென்றாள். ஆனால், அவளைப் பெட்டியில் வைத்துத்தான் இறுதியாகப் பார்க்க முடிந்தது. விபத்து போன்ற ஏதாவது நடந்திருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அவளுக்கு இப்படியொரு கொடூரம் நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

ஹைதராபாத் மருத்துவர்
ஹைதராபாத் மருத்துவர்

அந்த இறுதி நேரத்தில் என் மகள் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பாள். அதே துன்பத்தைக் குற்றவாளிகளும் அனுபவிக்க வேண்டும். என் மகளை என்னிடமிருந்து பிரித்தவர்களை நடுரோட்டில் நிற்கவைத்து உயிருடன் எரிக்க வேண்டும். அதை நானும் என் இளைய மகளும் பார்க்க வேண்டும். இதுதான் என் மகளுக்குக் கிடைக்கும் உண்மையான நீதியாக இருக்கும்” எனக் கண்ணீருடன் பேசியுள்ளார்.