Published:Updated:

உ.பி: தூங்கிக் கொண்டிருந்த 3 பட்டியலினச் சகோதரிகள் மீது ஆசிட் வீச்சு! - தொடரும் சாதியக் கொடுமைகள்

ஆசிட்
ஆசிட்

``என்னைச் சிறுநீரைக் குடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தினார்கள். நான் மறுக்கவே, அவர் என்னைத் தடியால் அடித்தார். அப்போது அதைத் தடுக்க வந்த என் மகனையும் அடித்துக் கொடுமைப்படுத்தினார்...’’

சம்பவம் 1: 

உத்திரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த பிறகு, அந்தப் பெண்ணின் உடலை காவல்துறையினர் இரவோடு இரவாக தகனம் செய்த விவகாரம், பொதுமக்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் உ.பி அரசின் செயல் மனிதநேயமற்றது என்று பலர் குரல் எழுப்பிவரும் நிலையில், தற்போது உ.பி., கோண்டா மாவட்டத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் மீது அதிகாலை 2 மணிக்கு ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்
ஹத்ராஸ் இளம்பெண் உடல் தகனம்

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவிலிருந்து 117 கி.மீ தொலைவிலுள்ளது கோண்டா மாவட்டம். இந்த மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்கள் மூன்று சகோதரிகள். இன்று அதிகாலை 2 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் மொட்டைமாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்து ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அந்தப் பெண்களின் அழுகுரல் கேட்ட அவர்களின் தந்தை அறைக்குள் சென்று பார்த்த போது மூவரும் பாதிக்கப்பட்ட நிலையிலிருக்க, அவர்களை மீட்டு, கோண்டா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

பாதிக்கப்பட்ட மூன்று சகோதரிகளில், 17 வயதான மூத்த பெண்ணுக்கு 30 சதவிகிதக் காயமும், 12 வயதான இரண்டாவது சகோதரிக்கு 20 சதவிகிதக் காயமும், 8 வயதான மூன்றாவது சகோதரிக்கு 5 முதல் 7 சதவிகித தீக்காயமும் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கோண்டா மாவட்டத்திலுள்ள அந்தக் கிராமத்தில் துணி இஸ்திரி செய்யும் தொழில் செய்துவரும் அந்தப் பெண்களின் தந்தையிடமும், அக்கம் பக்கத்து வீட்டினரிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடமும் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ஷைலேந்திர குமார் பாண்டே, ``ஆசிட் வீசிய நபர்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அடையாளம் காட்டவில்லை; பெயரையும் குறிப்பிடவில்லை. எனவே, தெரியாத நபர்கள் மீதான புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருப்பினும், இதில் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தெரிந்த நபருக்கு பங்கிருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்றார். மேலும், தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய்களைக்கொண்டு விசாரணை செய்யப்பட்டுவருகிறது என்று தெரிவித்தார்.

க்ரைம் - கொலை முயற்சி
க்ரைம் - கொலை முயற்சி

சம்பவம் 2:

உத்தரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டம், ரோடா கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 65 வயதான அமர் என்பவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சோனு யாதவ் என்பவர், சில நாள்களுக்கு முன்னர் அமரின் மகனைக் கோடரியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தந்தையும் மகனும் காவல்துறையில் புகாரளித்ததால், இந்த விஷயத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளவும், புகாரை வாபஸ் பெறவும் யாதவ் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு தந்தை, மகன் இருவரும் மறுக்கவே, சோனு யாதவ் அமரை சிறுநீரைக் குடிக்குமாறு துன்புறுத்தியிருக்கிறார். இது குறித்து அமர் அளித்திருக்கும் புகாரில், ``என்னைச் சிறுநீரைக் குடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள், நான் மறுக்கவே, அவர் என்னைத் தடியால் அடித்தார். அப்போது அதைத் தடுக்க வந்த என் மகனையும் அடித்துக் கொடுமைப்படுத்தினார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் லலித்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் மிர்சா மன்சார் பேக், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், சோனு யாதவைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார். ரோடா கிராமத்தில் செல்வாக்குமிக்க இரண்டு நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தகவல் கிடைத்தவுடன் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததோடு, குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் கூறினார். மேலும், `பொதுமக்களை எந்தவிதத்திலும் கொடுமைப்படுத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என்றார்.

போலீஸ்
போலீஸ்
Representational Image

இந்த இரண்டு சம்பவங்களும் உத்தப்ரபிரதேசம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு