Published:Updated:

`சாதாரண உடையில் ஆய்வு; மடக்கிப் பிடித்த எஸ்.ஐ!’ -தேனியில் தொடரும் கள்ளச்சாராய கைதுகள்

கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம்

தேனி மாவட்டத்தில் அடுத்தடுத்து கள்ளச்சாராய கும்பல் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் கள்ளச்சாரயம் காய்ச்சிய 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மற்றுமொரு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 70 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டது.

சாராய ஊறல்
சாராய ஊறல்

ஆண்டிபட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் அமைந்துள்ள தோட்டம் ஒன்றில், சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸாரிடம், டி.பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சின்னமுத்து (வயது 54) மற்றும் குருசாமி (வயது 49) ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்ச முற்பட்டது தெரியவந்தது. இருவரும் பதுக்கி வைத்திருந்த 70 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டது. பின், இருவரும் கைது செய்யப்பட்டனர்.

ஒரு வாரத்தில் 13 பேர்.. தேனி போலீஸுக்கு அதிர்ச்சிகொடுக்கும் கள்ளச்சாராயம்!

இது தொடர்பாக போலீஸார் தரப்பில் கூறும்போது, ``டாஸ்மாக் மூடப்பட்டதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தேனியில் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி அமைத்துள்ள தனிப்படை, மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கள்ளச்சாராயம் காய்ச்ச ஊறல் போட்டவுடனே எங்களுக்குத் தகவல் கிடைத்துவிடுகிறது. அவர்களை உடனே கைது செய்துவிடுகிறோம். இப்போது அணைக்கரைப்பட்டியில் உதவி ஆய்வாளர், சாதாரண நபர் போல கைலி கட்டிக்கொண்டுதான் அப்பகுதியில் ஆய்வு செய்து, இருவரையும் கைது செய்துள்ளார். இப்படி, எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.

ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!

மேலும், வருசநாடு, காமராஜபுரம், கொடிகுளம்குடிசை போன்ற மலைப்பகுதிகளிலும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இது ஒருபுறம் என்றால், சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும், கருப்பட்டி, பட்டை, கடுக்காய் போன்ற பொருள்களை மொத்தமாக யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என்றும், அப்படி மொத்தமாக விலைக்கு கேட்டு வந்தால், உடனே எங்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு