Published:Updated:

தஞ்சை: பாலியல் வழக்கில் கைதான பெண்! - காப்பாற்ற முயன்ற போலீஸார்; கறார் காட்டிய கலெக்டர்

ராஜம்
ராஜம்

பாலியல் வழக்கில் செந்தில்குமார் அவரின் மனைவி ராஜம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், புரோக்கர் ராமச்சந்திரன் மற்றும் பழனிவேல் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பாலியல் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தஞ்சை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அந்தக் கும்பல் வளர்ச்சியடைவதற்கு போலீஸ் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் பெரிய அளவில் உதவியுள்ளனர். அவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பாலியல் வழக்கில் கைதான கும்பல்
பாலியல் வழக்கில் கைதான கும்பல்

தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் காரில் வந்த கும்பல் ஒன்று செங்கிப்பட்டி என்ற இடத்தில் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரை காரிலிருந்து தள்ளிவிட்டுச் சென்றனர். தஞ்சையில் உள்ள பாலியல் கும்பல் ஒன்று வட மாநில இளம்பெண்களை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து கட்டாயப்படுத்தி, சித்ரவதை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் இதன்மூலம் தெரிய வந்தது.

அந்த வடமாநில பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பாலியல் கும்பலை பிடிக்க எஸ்.பி-யின் தனிப்படை எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான போலீஸாரை கொண்டு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த செந்தில்குமார் அவரின் மனைவி ராஜம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், புரோக்கர் ராமச்சந்திரன் மற்றும் பழனிவேல் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

செந்தில்குமார்  - ராஜம் - பிரபாகரன் - ராமசந்திரன் - பழனிவேல்
செந்தில்குமார் - ராஜம் - பிரபாகரன் - ராமசந்திரன் - பழனிவேல்

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய உயர்ரக கார்கள், செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததுடன் தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள செந்தில்குமாரின் வீட்டையும் சீல் வைத்தனர். அத்துடன் தஞ்சையின் முக்கிய நகரங்களில் சொகுசு வீடுகளை வாடகைக்கு எடுத்தும், சொகுசுக் கார்களிலும் பாலியல் தொழில் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டதட்ட 15 வருடங்களுக்கும் மேலாக ஹைடெக்காக இதைச் செய்து வந்துள்ளனர். இதற்காக வடமாநில இளம்பெண்களை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது.

இது தஞ்சாவூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. செந்தில்குமார், ராஜம் வசித்த தெருவில் இருப்பவர்களுக்கே இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகுதான் இதுகுறித்து தெரிய வந்திருக்கிறது. தற்போது பழனிவேலை தவிர்த்து மற்ற நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

`4 கார், 4 செல்போன், டைரி;15 ஆண்டுகள்!’- தஞ்சையில் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ``பாலியல் கும்பல் கைது செய்யப்பட்டதிலிருந்தே அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சிலர் பெரிய அளவில் முயற்சி செய்தனர். விசாரணையில் ஈடுபட்ட தனிப்படை எஸ்.ஐ கண்ணன் தலைமையிலான போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி அவர்களுக்கு எதிரான பல ஆதாரங்களைத் திரட்டினர்.

அதன்படி செந்தில்குமார், பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டது. ராஜம் மீது குண்டர் சட்டம் பதியாதவாறு செய்வதற்கான காய்கள் நகர்த்தப்பட்டன. இதனால் அடுத்த இரண்டு தினங்கள் கழித்தே ராஜம் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டது.

ராஜம்
ராஜம்

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே காவல் துறையில் உள்ள சிலர் இவர்கள் மீது குண்டர் சட்டம் பதியாதவாறு காப்பாற்ற முயற்சி செய்தனர். இந்தக் கும்பல் வளர்ச்சியடைவதற்கு உதவியாக இருந்தவர் தற்போது மதுரையில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார்.

10 சொகுசு வீடுகள், 30 இளம்பெண்கள், பாலியல் தொழில்... தஞ்சாவூர் பகீர்!

அவர் தஞ்சை எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவர் மூலம் விசாரணை விவரங்களைத் தெரிந்து கொண்டே இருந்தார். வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைகளை மேற்கு காவல்நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலர் ஒருவர் அனைத்து தகவல்களையும் அவருக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருந்தார்.

செந்தில்குமார் ராஜம்  வீடு
செந்தில்குமார் ராஜம் வீடு

இதை வைத்து குண்டர் சட்டம் பாய்வதற்குள் ஜாமீனில் எடுத்து விட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் குண்டர் சட்டம் போட்டாலும் அதிலிருந்து எளிதாகத் தப்பிவிடலாம் என்றே அதற்கு முயன்றனர். அத்துடன் குண்டர் சட்டத்துக்கான ஆர்டரை சிறையில் செலுத்துவதற்குள் ஜாமீனில் வெளியே எடுத்து விட்டால் அவர்கள் மீது பதியப்பட்ட குண்டர் சட்டமே செல்லாமல் செய்துவிடலாம் என அதற்கும் முயற்சி செய்தனர்.

வன்கொடுமை; காரில் நடுரோட்டில் வீசிச் சென்ற கும்பல்! -தஞ்சை அருகே வடமாநிலப் பெண்ணுக்கு நடந்த கொடுமை

இவர்களைப் பற்றி அறிந்த தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ், `வரலாற்று பெருமைமிக்க தஞ்சாவூரில் இப்படிப்பட்ட தொழில் செய்யும் கும்பல் இருந்துள்ளது, மீண்டும் இதுபோல் ஒரு சம்பவம் நடக்கக் கூடாது. அவர்கள் இனி இதைச் செய்யாத வகையில் தண்டனை பெற்றுத் தர வேண்டும்' என அறிவுறுத்தியிருந்தார். இதனால் பாலியல் கும்பலைக் காப்பாற்ற சில போலீஸார் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. குண்டர் சட்டத்துக்கான ஆணையும் சிறையில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இனி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், இவர்கள் இந்தத் தொழிலில் வளர்வதற்கு பல போலீஸார் துணையாக இருந்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றனர் உறுதியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு