Published:Updated:

சென்னை: அதிகாலையில் சைக்கிளிங் - நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போன் பறிப்பு

 நடிகர் கௌதம் கார்த்திக்
நடிகர் கௌதம் கார்த்திக்

சென்னை ஆழ்வார்பேட்டை, டி.டி.கே சாலையில் சைக்கிளில் சென்ற நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான நடிகர் கௌதம் கார்த்திக்கின் வீடு, சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன்ரோடு முதல் குறுக்குத்தெருவில் இருக்கிறது. இவர் அதிகாலை நேரத்தில் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் சைக்கிளில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இன்று அதிகாலை 5 மணியளவில் நடிகர் கௌதம் கார்த்திக், சைக்கிளில் டி.டி.கே சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

கௌதம் கார்த்திக்
கௌதம் கார்த்திக்

அப்போது பைக்கில் வந்த இரண்டு நபர்கள், நடிகர் கௌதம் கார்த்திக்கின் விலையுயர்ந்த செல்போனைப் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். அதனால் அதிர்ச்சியடைந்த நடிகர் கௌதம் கார்த்திக், பைக்கை விரட்டியிருக்கிறார். ஆனால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நடிகர் கெளதம் கார்த்திக், தன்னுடைய Samsung Galaxy note 10+ என்ற செல்போனை பைக்கில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகப் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவம் நடந்த டி.டி.கே.சாலையிலுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்து செல்போன் திருடர்களைத் தேடிவருகின்றனர். அதிகாலை நேரத்தில் சைக்கிளில் சென்ற நடிகர் கௌதம் கார்த்திக்கின் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு