Published:Updated:

நள்ளிரவில் கதவைத் தட்டிய துணை நடிகர்!- சென்னையில் கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகையின் குடும்பம்

மதுரையிலிருந்து சினிமா இயக்குநர் கனவில் சென்னைக்கு வந்த ரவி, வாய்ப்புகளைத் தேடிவந்தார். அப்போது அறிமுகமாகிய தேவியிடம், உன்னை பெரிய நடிகையாக்குகிறேன் என்று வாக்குறுதியளித்துள்ளார்.

துணை நடிகை, அவரின் சகோதரி
துணை நடிகை, அவரின் சகோதரி

சென்னை கொளத்தூர், ராஜீவ்காந்தி நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் சவுரியார் (53). தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துவருகிறார். இவரின் மனைவி லட்சுமி (40). இவரின் வீட்டுக்கதவை நள்ளிரவில் ஒருவர் தட்டியுள்ளார். கதவைத் திறந்து வெளியில் வந்த லட்சுமியிடம், `நான் யாருன்னு தெரியுதா?' என்று குடிபோதையில் கேட்டார். உடனே லட்சுமி, `நீங்கள் யாரென்று தெரியவில்லை' என்று பதில் கூறியபடி கதவை மூட முயன்றார். அப்போது அந்த நபர் வீட்டுக்குள் நுழைந்தார்.

கொலை
கொலை

இதையடுத்து, `நள்ளிரவில் வீட்டுக்குள் வந்து ஏன் தகராறு செய்கிறீர்கள்?' என்று லட்சுமி சத்தம் போட்டார். இந்தச் சத்தம் கேட்டு சவுரியார் மற்றும் குழந்தைகள் கண்விழித்தனர். திடீரென வீட்டுக்குள் நுழைந்த நபர், லட்சுமி குழந்தையின் கழுத்தைப் பிடித்து நெரித்தபடி, `உன்னுடைய அக்கா முகவரியைச் சொல்லவில்லை என்றால் இவளைக் கொலை செய்துவிடுவேன்' என்று மிரட்டியுள்ளார். அதனால் லட்சுமி, சவுரியார் அதிர்ச்சியடைந்தனர்.

அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தவர் ரவி என்று லட்சுமிக்குத் தெரியவந்தது. உடனே, `உன்னால்தான் அக்கா வீட்டு அட்ரஸை மாற்றினாள். அதனால் முகவரி தரமுடியாது' என்று கூறினார். அதைக்கேட்டு கொதிப்படைந்த ரவி, குழந்தையின் கழுத்தை நெரிக்கத் தொடங்கினார். அதை லட்சுமி மற்றும் அவரின் குடும்பத்தினர் தடுத்தனர். பின்னர், ரவி தகராறு செய்வதை போன் மூலம் தன்னுடைய அக்கா தேவிக்கு லட்சுமி கூறினார். உடனே தேவி மற்றும் அவரின் கணவர் சங்கர் ஆகியோர் லட்சுமியின் வீட்டுக்கு வந்தனர்.

5 பைசா, கொலை, விபத்து, மந்தி, 40 ஆயிரம் ரூபாய்... 2019-ன் டிரெண்டிங் பிரியாணி சம்பவங்கள்!

தேவியைப் பார்த்ததும் ரவி, `உன்னைத் தேடிதான் இங்கு வந்தேன்' என்று கூறினார். உடனே தேவி, லட்சுமி ஆகியோர் ரவியை வீட்டை விட்டு வெளியில் செல்லும்படி கூறினர். ஆனால் ரவி, வெளியில் செல்லாமல் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார். அதைப்பார்த்த லட்சுமி, தேவி, சங்கர், சவுரியார் ஆகியோர் ரவியைப்பிடித்து வெளியில் தள்ளினர். அதனால் அவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டது.

இந்தச் சமயத்தில் ஆத்திரமடைந்த லட்சுமி, தேவி, சங்கர், சவுரியார் ஆகியோர் உருட்டுக்கட்டை மற்றும் சுத்தியலால் ரவியைத் தாக்கினர். தலையில் பலத்த காயமடைந்த ரவி, ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்தார். பின்னர், அவர்கள் ராஜமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ரவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ரவியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகையின் குடும்பம்
கொலை வழக்கில் சிக்கிய துணை நடிகையின் குடும்பம்

இதையடுத்து ரவியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். ரவியைக் கொலை செய்த குற்றத்துக்காக தேவி, லட்சுமி, சங்கர், சவுரியார் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``வடக்கு கொரட்டூரில் குடும்பத்தோடு தேவி வசித்துவருகிறார். இவர், துணை நடிகையாக சில படங்களில் நடித்துவந்துள்ளார். அப்போதுதான் மதுரையைச் சேர்ந்த ரவி என்பவருடன் தேவிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து சினிமா இயக்குநர் கனவில் சென்னைக்கு வந்த ரவி, வாய்ப்புகளைத் தேடிவந்தார். அப்போது அறிமுகமாகிய தேவியிடம், உன்னை பெரிய நடிகையாக்குகிறேன் என்று வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் இயக்குநர் கனவிலிருந்த ரவிக்கே அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தேவியுடன் சேர்ந்து சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். இருவருக்குமே வாய்ப்பு சரியாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் இருவருக்கிடையே கடந்த 5 ஆண்டுகளாக நட்பு தொடர்ந்துள்ளது. வடபழனியில் தங்கியிருந்த ரவி, தேவியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.

சவுரியார், சங்கர்
சவுரியார், சங்கர்

இதனால் தேவியின் குடும்பத்தில் பிரச்னை ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து ரவியை வீட்டுக்கு வரவேண்டாம் என்று தேவி பலதடவை கூறினார். ஆனாலும் தேவியின் வீட்டுக்கு வருவதை ரவி நிறுத்தவில்லை. இதனால் கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டை காலி செய்துகொண்டு வடக்கு கொரட்டூர் பகுதிக்கு தேவி குடும்பத்தோடு சென்றார். இந்தச் சமயத்தில்தான் தேவியின் பழைய வீட்டின் முகவரிக்கு வந்த ரவி, அங்கு தேவி இல்லாததால் அவரின் தங்கை லட்சுமியின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்து தொல்லை செய்துள்ளார்.

ரவியின் தொல்லையால் அவரை சகோதரிகள் லட்சுமி, தேவி மற்றும் சவுரியார், சங்கர் ஆகியோர் அடித்தே கொலை செய்துள்ளனர். தேவியின் கணவர் சங்கர், தேனாம்பேட்டையில் உள்ள கடையில் வேலை பார்த்துவருகிறார். ரவி கொலை தொடர்பாக 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். கொலை செய்யப் பயன்படுத்திய உருட்டுக்கட்டை, சுத்தியல் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

ராஜமங்கலம் காவல் நிலையம்
ராஜமங்கலம் காவல் நிலையம்

துணை நடிகர் ரவியின் சொந்த ஊர் மதுரை என்று மட்டுமே போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் இறந்த தகவலை ரவியின் உறவினர்களுக்குத் தெரிவிக்கும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் ரவி தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் வடபழனி முகவரி குறித்தும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.