Published:Updated:

ஆர்யன் கானை கைதுசெய்த சமீர் வான்கடே மீது சட்டப்படி நடவடிக்கை?! - ஷாருக் கானின் அடுத்த திட்டம் என்ன?

ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அவரைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேமீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஷாருக் கான் ஆலோசித்துவருகிறாராம்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், கடந்த மாதம் தொடக்கத்தில் கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ஷாருக் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஆர்யன் கானுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் உத்தரவின் நகல் சமீபத்தில்தான் வெளியானது. அதில் ஆர்யன் கானும், அவருடன் கைதுசெய்யப்பட்டவர்களும் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேயும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகளும் சேர்ந்து ஆர்யனைக் கடத்தி மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த கொசாவி, ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க ஷாருக் கான் மேலாளர் பூஜாவிடமிருந்து ரூ.50 லட்சத்தை வாங்கினார் என்ற தகவல் வெளியானது. அது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது ஏன்?! - உயர் நீதிமன்ற தீர்ப்பில் வெளியான தகவல்

தற்போது கிடைத்துள்ள ஜாமீன் உத்தரவு நகலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஷாருக் கான் ஆலோசித்துவருகிறாராம். ஷாருக் கானின் வழக்கறிஞர்கள் இது தொடர்பாக ஷாருக் கானுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றனர். ஷாருக் கான் இன்னும் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்காமல் அமைதி காத்துவருகிறார். இது குறித்து ஷாருக் கானின் நண்பர் ஒருவர் கூறுகையில், `ஆர்யன் கானை மூன்று வாரமங்கள் சிறையில்வைத்த சமீர் வான்கடே மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி சட்ட வல்லநர் குழு ஷாருக் கானுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது’ என்றார். ஏற்கெனவே சமீர் வான்கடேயிடமிருந்து ஆர்யன் கான் தொடர்பான வழக்கு விசாரணையை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றிவிட்டது. அதோடு அமைச்சர் நவாப் மாலிக்கும் தொடர்ந்து சமீர் வான்கடேவுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்டுக்கொண்டேயிருக்கிறார்.

சமீர் வான்கடே
சமீர் வான்கடே

மேலும் ஆர்யன் கான் மீதான வழக்கு போலியானது என்ற குற்றச்சாட்டு குறித்து போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலீப் வல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆர்யன் கான் மீது பதிவு செய்த வழக்கு போலியானதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் சமீர் வான்கடே மும்பை போலீஸாரால் கைதுசெய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துவிட்டதால் சமீர் வான்கடேவுக்குச் சிக்கல் அதிகரித்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு