Published:Updated:

நடிகர் சூரி வீட்டுத் திருமண விழாவில் நகை திருடியவர் நகைக்கடை உரிமையாளர் மகனா?! - அதிர்ச்சித் தகவல்

நடிகர் சூரி வீட்டுத் திருமணம்
நடிகர் சூரி வீட்டுத் திருமணம்

நகைக்கடை உரிமையாளரின் மகனான விக்னேஷ் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டிருக்கிறார். அடிக்கடி சென்னை சென்று நடிகர்கள், அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்வார். அது மட்டுமில்லாமல் பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் அழைப்பில்லாமலேயே கலந்துகொள்வார்.

மதுரையில் நடிகர் சூரி வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் நகை திருடியவர் நகைக்கடை உரிமையாளரின் மகன் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

கடந்த 9-ம் தேதி நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் மதுரை வேலம்மாள் அரங்கத்தில் நடந்தது. இதில் திரைப்பட நடிகர்கள், அரசியல்வாதிகள் உட்பட பல விஐபி-க்கள் கலந்துகொண்டனர்.

சூரி குடும்ப விழா
சூரி குடும்ப விழா

திருமண நாளன்று மணமகள் அறையிலிருந்த 10 பவுன் நகை திருட்டுப்போனது. திருமணம் நல்லபடியாக நடைபெற வேண்டுமென்பதால், அந்தச் சம்பவத்தை அப்போது பரபரப்பாக்காமல் திருமண விழாவைச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

இந்தநிலையில் திருமண மண்டப நிர்வாகிகள் மூலம் காவல்துறையில் புகார் கொடுக்க, சிசிடிவி பதிவுகளை வைத்து ஆய்வு செய்தபோது திருடியது பரமக்குடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பதை உறுதி செய்து அவரைக் கைதுசெய்தனர்.

சூரி
சூரி

விக்னேஷ், தொழில்முறை திருடர் அல்ல என்பதும் பரமக்குடியில் நகைக்கடை வைத்திருக்கும் மணிவாசகத்தின் மகன் என்ற தகவலும் அனைவரையும் அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் தலைமையில்… களை கட்டிய சூரி வீட்டுக் கல்யாணம்!

இது குறித்து காவல்துறையினரிடம் பேசியபோது, ``நகைக்கடை உரிமையாளரின் மகனான விக்னேஷ் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டிருக்கிறார். அடிக்கடி சென்னை சென்று நடிகர்கள், அதிகாரிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்வார். அது மட்டுமின்றி பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் அழைப்பில்லாமலேயே கலந்துகொள்வார். அப்படியே விழாவில் டிப்டாப்பாகச் சுற்றி வந்து நகை திருடுவதைப் பொழுதுபோக்குப்போல செய்துவருகிறார். இதற்கு முன்பு இதுபோல பல இடங்களில் கைவரிசையைக் காட்டி சிறைக்குச் சென்றிருக்கிறார். இவர்களை `எம்.ஓ.கிரிமினல்ஸ்’ (Modus Operandi criminals) என்று அழைப்போம். இந்தத் திருடர்கள் வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர்கள்.

விக்னேஷ்
விக்னேஷ்

திருடப்போகும் வீடு திறந்து கிடந்தாலும் ஜன்னலை உடைத்துத்தான் செல்வார்கள். இன்னும் சிலர் திருடச் செல்லும் வீட்டில் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் அதைத் தொடாமல் பட்டுச்சேலைகளை மட்டும் திருடுவார்கள்.

இன்னும் சிலரோ திருடும் வீட்டில் அசிங்கம் பண்ணிவைத்துவிட்டு வருவார்கள். அதுபோலத்தான் இந்தத் திருடனும். நகைக்கடை உரிமையாளர் மகனாக இருந்தும், விஐபி-க்கள் வீடுகளில் விசேஷங்கள் நடக்கும்போது உள்ளே புகுந்து நகை திருடுவதை ஹாபியாக வைத்திருக்கிறான்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு