1803-ம் ஆண்டு இங்கிலாந்து விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னன்ட்டால் கண்டுபிடிக்கப்பட்டது இரிடியம். இரிடியம் பெயரில் மோசடி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. பெரும் தொழிலதிபர்கள்கூட கோடிக்கணக்கில் இதில் ஏமாறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
தற்போது பிரபல திரைப்பட நடிகர் விக்னேஷ் இரிடியம் மோசடிக் கும்பலிடம் 1.81 கோடி ரூபாய் இழந்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த புகார் மனுவில், "30 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடித்தும் அதன் பிறகு சொந்தமாகத் தொழிலும் செய்துவருகிறேன். எனது கடையின் வாடகைதாரரான ராம் பிரபு எப்போதும் சைரன் வைத்த வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய, சபாரி உடையணிந்த பாதுகாப்பு வீரர்களுடன்தான் வலம்வருவார். இவரை நான் வி.ஐ.பி என்றே கருதினேன்.
இவருடன் நட்புரீதியாகப் பழக வாய்ப்பு ஏற்பட்டது. அவரிடம் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரித்தபோது இரிடியம் என்ற பொருள் தனக்குக் கிடைத்ததாகவும், மத்திய அரசுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு அதை விற்பதாகவும் அதன் மதிப்பு 3 லட்சம் கோடி என்றும், அதனால்தான் தனக்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களை மத்திய அரசு வழங்கியிருக்கிறது எனவும் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது தொடர்பாக இரண்டு முறை நடந்த கூட்டங்களில் கலந்துகொண்டேன். அதில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவையெல்லாம் ராம் பிரபு கூறியதை என்னை நம்பவைத்தது.
இதைத் தொடர்ந்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் 500 கோடியாக உங்களுக்குத் திருப்பி தருகிறேன் என்று நம்பிக்கையூட்டும் வகையில் ராம் பிரபு பேசினார். அவரின் பேச்சை நம்பி நான் எனது வங்கிக் கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாகப் பெற்றும் ரூபாய் 1.81 கோடி ரூபாய் அவரிடம் கொடுத்தேன்.

ஆனால், அதற்குப் பிறகு அவர் என்னிடம் பேசுவதைத் தவிர்த்தார். ஒருமுறை நேரில் சந்தித்தபோது 500 கோடி ரூபாய் கன்டெய்னர் லாரி மூலம் வருகிறது, வந்தவுடன் தருவதாகவும் கூறினார். என்னைப்போல நிறைய பேரிடம் இதுபோல் அவர் பணம் வசூலித்திருப்பது தெரியவந்தது.
மேலும், அவர் மோசடிப் பேர்வழி என்றும் தகவல் வந்தது. இதற்கிடையில், மோசடி வழக்கில் விருதுநகர் காவல்துறை அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. என்னைப்போல 500 பேரிடம் ராம் பிரபு பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக அறிகிறேன். அவர்மீதும், அவருடன் இருப்பவர்கள்மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.