Published:Updated:

`நடிகர் சூரி கொடுத்த நிலமோசடி புகாரில் வழக்கு!' - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்

நடிகர் சூரி
நடிகர் சூரி

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யுமான ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது காமெடி நடிகர் சூரி நிலமோசடி புகார் கொடுத்தார். அதன்பேரில் சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் சூரி, கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் இடம் வாங்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது அவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அதனால் இடம் வாங்கவிருக்கும் தகவலை விஷ்ணு விஷாலிடம் சூரி கூறியிருக்கிறார். உடனே விஷ்ணு விஷால், தன்னுடைய தந்தையான ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷிடம் நடிகர் சூரி இடம் வாங்கும் விவரத்தைக் கூறியிருக்கிறார். இதையடுத்து ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜனை நடிகர் சூரிக்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

சூரி
சூரி

மூன்று பேரும் சேர்ந்து நிலம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அப்போது சிறுசேரியில் ஒரு ஏக்கர் 82 சென்ட் உள்ள இடத்தை அன்பு வேல்ராஜன் நடிகர் சூரிக்கு காண்பித்திருக்கிறார். பின்னர், அந்த இடத்தை ரூ.5.75 கோடி ரூபாய்க்குப் பேசி முடித்திருக்கிறார்கள். பணத்தைக் கொடுத்ததும் சிறுசேரி பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு நடந்திருக்கிறது. நடிகர் சூரிக்கு விற்கப்பட்ட இடத்துக்குப் பாதை இல்லை என்று கூறப்படுகிறது. அது குறித்து இடத்தை விற்றவர்களிடம் சூரி முறையிட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் அந்த இடத்துக்குப் பாதை வரவிருப்பதாகவும், வருங்காலத்தில் நல்ல விலைக்கு அந்த இடம் போகும் என்றும் கூறியிருக்கிறார்கள். சில ஆண்டுகள் கடந்த பிறகும் சூரி வாங்கிய இடத்துக்குப் பாதை கிடைக்கவில்லை.

அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., அவரின் மகனான நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரிடம் முறையிட்டிருக்கிறார். அப்போது, `அந்த இடத்தை நாங்களே வாங்கிக்கொள்கிறோம்’ என்று கூறிய அந்தத் தரப்பு, அதற்காக சினிமா தயாரிப்பாளர் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸாகக் கொடுத்தாகத் தெரிகிறது. அதற்கான ஒப்பந்தத்தையும் நடிகர் சூரிக்கு அந்தத் தரப்பு போட்டுக் கொடுத்தது. அதில் 2.75 கோடி ரூபாயை இடத்துக்கும் மீதமுள்ள தொகை 3 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகவும் கொடுப்பதாகக் கூறியிருக்கிறது. பணம் கிடைத்தால் போதும் என நடிகர் சூரி தரப்பு ஒப்பந்தத்துக்கு ஓகே செய்திருக்கிறது. ஆனால், பணத்தைக் கொடுக்காமல் அந்தத் தரப்பு ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வந்திருக்கிறது.

மோசடி
மோசடி
Representational Image

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்ட டி.ஜி.பி., கடந்த 2018-ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கிறார். அப்போது, நடிகர் சூரி தரப்பு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் 50 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு நடிகர் சூரிக்கு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதனால் நடிகர் சூரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்தார். ஓய்வுபெற்ற டி.ஜி.பி மீதே குற்றம் சாட்டப்பட்டதால் புகார் கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து நடிகர் சூரி தரப்பில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சூரியின் புகாரின் பேரில் செப்டம்பர் 25-ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தனர். அதில், `சம்பந்தப்பட்டவர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அக்டோபர் 28-ம் தேதிக்குள் ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து அடையாறு காவல் நிலையத்தில் நடிகர் சூரியை ஏமாற்றியதாக ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் மற்றும் சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விஜய், சூர்யா, தனுஷ், சூரி... யார் படத்தை முதலில் இயக்குகிறார் வெற்றிமாறன்? #VikatanExclusive
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

நிலத்தின் மதிப்பு கோடி ரூபாயைத் தாண்டுவதால் அடையாறு காவல் நிலையத்திலிருந்து இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படவிருக்கிறது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதும், ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ், சினிமா தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் தரப்பும் இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது.

இது குறித்து அடையாறு சரக போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, `நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு (நிலமோசடி) போலீஸார் விசாரணை செய்வார்கள்' என்றார்.

ஓய்வுபெற்ற டி.ஜி.பி மற்றும் சினிமா தயாரிப்பாளர் மீது நடிகர் சூரி அளித்த புகாரின்பேரில் எஃப்.ஐஆர் பதிவு செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், தனது தந்தை மீதான புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கமளித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விஷ்ணு விஷால், ``என் மீதும், என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு.சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். ``கவரிமான் பரம்பரை' என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

உண்மை வெளிவரும் வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், உண்மையான தகவல்களுடன் இது பற்றிச் செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு