Published:Updated:

`ட்விட்டரில் மோசமான புகைப்படங்கள்; ஆபாசத் தொல்லை!’ - திமுக பிரமுகர்மீது காயத்ரி ரகுராம் புகார்

திமுக பிரமுகர்மீது நடிகை காயத்ரி ரகுராம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார்.

தமிழக பா.ஜ.க கலை, கலாசார பிரிவின் மாநிலத் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

``சமூக வலைதளத்தில் எனது கட்சியின் நோக்கங்களையும் சித்தாந்தங்களையும் அடித்தட்டு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதத்தில் நான் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறேன். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத யாரோ என் நற்பெயருக்கும் எனது அரசியல் பயணத்துக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எப்போதோ நடந்த நிகழ்ச்சியிலிருந்து சில படங்களை எடுத்து எனக்கு ஆபாச தொல்லை கொடுத்துவருகின்றனர்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்
``கங்கனாவுடன் மூணு மாத டிராவல்... 25 கிலோ எடை கூடிய ரகசியம்!" - `தலைவி' குறித்து காயத்ரி ரகுராம்

அதிலும் குறிப்பிட்ட ஒரு ட்விட்டர் கணக்கில், எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்ட என்னுடைய சில மோசமான புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யப்பட்டு, மோசமான வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் புகைப்படங்கள், கடந்த ஆண்டு பொங்கல் விழாவில் எங்கள் பா.ஜ.க சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். பொங்கல் விழாவில் பா.ஜ.க கலை, கலாசார பிரிவின் தலைவர் என்ற முறையில் நானும் சிறப்பு விருந்தினராகப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். அப்போது அங்கு நடந்த சில நிகழ்வுகளை யாரோ எனக்குத் தெரியாமல் படம் எடுத்துள்ளனர்.

அந்தப் புகைப்படம், வீடியோவை இணைத்து எங்கள் கட்சியில் நாங்கள் மதிக்கப்பட்ட தலைவர்களோடு ஒப்பிட்டு மிகவும் மோசமாக என்னுடைய பெயருக்கும், என்னுடைய நடத்தைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் மலிவான, தரம் தாழ்ந்த கருத்துகளைப் பரப்பிவருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியைச் சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன. இதனால் நான் மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாகியுள்ளேள். எனவே சம்பந்தப்பட்ட நபரை அழைத்து விசாரித்து அவரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

பின்னர் காயத்ரி ரகுராம் கூறுகையில், ``தி.முக எம்.பி கனிமொழி, ட்விட்டரில் அவர்கள் கட்சி, கொள்கை சார்ந்து கருத்து பதிவு செய்தால் உடனடியாக பதிலளிப்பார். அவர்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர், என்னை ஆபாசமாகச் சித்திரித்து படம் வெளியிட்டிருக்கிறார். அவரைக் கண்டிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். இதுதான் தி.முக ஆட்சியில் பெண்களுக்குத் தரப்படும் மரியாதையா, பாதுகாப்பா?” என்று கேள்வி எழுப்பினார்.

காயத்ரி ரகுராம் புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீஸார் சம்பந்தப்பட்ட ட்விட்டர் கணக்கை ஆய்வு செய்ததோடு அந்த நபர் குறித்தும் விசாரணை நடத்திவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு