Published:Updated:

`மூன்று தடவை கருக்கலைப்பு; சொல்லமுடியாத தொல்லை’ -முன்னாள் அதிமுக அமைச்சர் மீது நடிகை பரபரப்பு புகார்

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன்  மீது நடிகை  புகார்
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை புகார்

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்தவர் சாந்தினி (36). இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று வந்தார். அவர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் மலேசியா குடியுரிமை பெற்ற திருமணமாகாத பெண். சென்னையில் 2017-ம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். நான், மலேசியா சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தூதரகத்தில் பணிபுரிந்த போது அடிக்கடி என் பணி நிமித்தமாக இந்தியா வந்து செல்வது வழக்கம். கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், சுற்றுலா வளர்ச்சி துறை சம்பந்தமாக என்னைப் பார்க்க விரும்புவதாக எனக்கு தெரிந்த நண்பர் பரணி என்பவர் என்னிடம் கூறினார். அதனால் நான் அமைச்சரின் இல்லத்தில் 3.5.2017-ல் நேரில் மணிகண்டனைச் சந்தித்தேன். அன்றைய தினம் சுற்றுலா துறை சம்பந்தமாக என்னிடம் மணிகண்டன் பேசினார்.

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சாந்தினி
போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சாந்தினி

மலேசியாவில் தொழில் முதலீடு செய்ய போவதாகவும் அந்த தொழில் முதலீடு சம்பந்தமாக நாம் இருவரும் கலந்து பேச வேண்டும் என்று கூறி என்னுடைய செல்போன் நம்பரைப் பெற்றுக் கொண்டார். அன்றைய தினம் மாலையில் எனக்கு அமைச்சர் மணிகண்டன் போனில் பேசினார். சில தினங்களில் என்னிடம் தனிப்பட்ட முறையில் அமைச்சர் மணிகண்டன் பேச ஆரம்பித்தார். நான் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவருக்கு என்னை மிகவும் பிடித்து விட்டதாகவும் ஒரு கட்டத்தில் என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் என்னிடம் கூறினார். மேலும் அவர் குடும்ப வாழ்வில் அவர் மனைவியால் எந்த சந்தோஷமும் இல்லை என்றும் மனைவி ஒரு கொடுமைக்காரி என்றும் உன்னைப் போல ஒரு அழகான பெண் என் இல்லற வாழ்வில் இருந்தால் என்னுடைய வாழ்க்கை மிகவும் அழகாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். நாளடைவில் என்னை காதலிப்பதாகவும் கூறினார். நான் அவருடைய காதலை ஏற்க மறுத்தபோது அவர் என்னை சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

பின்னர் அவருடைய வார்த்தைகளை நம்பி அவர் என்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இருவரும் ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். சென்னையில் அவர் இருந்தால் இரவில் என்னுடன்தான் தங்குவார். நான் எங்கு வெளியில் செல்ல வேண்டும் என்றாலும் அமைச்சருடைய வாகனத்தைதான் பயன்படுத்துவேன். அப்போது அவருடைய டிரைவர்தான் காரை ஓட்டுவார். மேலும் நான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள அனைவரும் நான் அவருடன் சேர்ந்து வாழ்ந்தது தெரியும். நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கணவன் மனைவியாக ராமேஸ்வரம்,பாண்டிச்சேரி, திருநெல்வேலி, டெல்லி தமிழ்நாடு இல்லம் என பல இடங்களுக்குச் சென்று வந்துள்ளோம். கடந்த 2019-ம் வருடம் சட்டமன்றத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

சாந்தினி
சாந்தினி

நான் அவரை முறைப்படி திருமணம் செய்ய வற்புறுத்தியபோது மணிகண்டன், அவருடைய மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு என்னை முறைப்படி திருமணம் செய்வதாக கூறிவந்தார். அதுவரை நாம் இந்த வீட்டில் கணவன் மனைவியாக வாழலாம் என்று கூறியிருக்கிறார். நாங்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தது அவருடைய வீட்டில் வேலை செய்தவர்களுக்கு நன்றாக தெரியும். அதுமட்டுமல்லாமல் அவர் என் வீட்டிற்கு வந்து தங்கி சென்றதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. மேலும் நாங்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தன் பலனாக நான் மூன்று முறை கருவுற்றேன். நான் கருவுற்ற மூன்று முறையும் நான் உன்னை முறைப்படி திருமணம் செய்து கொண்ட பிறகு நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று என்னை மூளைசலவைச் செய்தார். பிறகு மூன்று முறையும் அவருடைய நெருங்கிய நண்பரின் கோபாலபுரத்தில் உள்ள மருத்துவமனையில் என்னை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். கடந்த 2019-ம் ஆண்டு மூன்றாம் முறை கருவுற்றபோது, அவர் அமைச்சர் இல்ல வீட்டுக்கு சென்று திருமணம் செய்ய வற்புறுத்தி என் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த சம்பவம் அவருடைய காவலருக்குத் தெரியும்.

2019-ம் ஆண்டுக்குப் பின் கருத்தடுப்பு உறையை கையாள செய்து என்னிடம் காப்பர்டியை போட வலியுறுத்தி என்னிடம் சந்தோஷமாக இருந்து வந்ததால் நான் பலமுறை உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளேன். மேலும் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் கூட என்னை பலவந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். நான் என் வருங்கால கணவர் என்ற முறையில் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டேன். இந்தநிலையில் என்னை திருமணம் செய்ய வேண்டி 2019-ம் ஆண்டு அவரிடம் கேட்டபோது இரண்டு முறை அடித்து என் கண்களை சேதப்படுத்தினார். அதற்கு நான் சிகிச்சை பெற்றியிருக்கிறேன்.

இந்தநிலையில் கடைசியாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் என்னை திருமணம் செய்வதாக கூறினார். அந்தச் சமயம் கொரோனா வைரஸ் நோயால் உலகம் முழுவதும் ஊரடங்கு போட்டதால் அவர் அவருடைய சொந்த ஊர் சென்று திரும்பி சென்னைக்கு வரமுடியவில்லை என்ற காரணத்தை என்னிடம் கூறினார். நானும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உடல்நிலை சரியில்லாத என் தாய், தந்தையரை பார்க்க மலேசியா சென்று டிசம்பர் மாதம் மீண்டும் தமிழகம் வந்தேன். நான் திரும்பி வந்தவுடன் வீட்டிற்கு வந்து மணிகண்டன் சமாதானம் செய்தார். பிறகு 2021-ம் ஆண்டு வருடம் எப்படியும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் என்னுடன் வாழ்ந்து வந்தார்.

தலைவர் பதவி ரேஸில் சகோதரிகள்! - `யாருக்கு ஆதரவு' குழப்பத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்
மணிகண்டன், சாந்தினி
மணிகண்டன், சாந்தினி

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி வரை என்னுடன் வாழ்ந்து வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவருடைய சொந்த ஊருக்கு சென்ற பிறகு திடீரென என்னை மிரட்ட ஆரம்பித்தார். நான் ஏன் இவ்வாறு திடீரென்று மிரட்டுகின்றீர்கள் என்று கேட்டபோது, `ஒருங்காக நீ உன் சொந்த நாட்டிற்கு சென்றுவிடு இல்லையென்றால் உனக்கு தெரியாமல் எடுத்த அனைத்து அரை நிர்வாண படங்களையும் சமூக வலைதளம் மற்றும் இன்டர்நெட்டில் விட்டுவிடுவேன்’ என்று கூறினார். பிறகு நான் குளிக்கும் சமயம் எனக்கு தெரியாமல் எடுத்த ஆடையில்லாத ஒரு போட்டோவை எனக்கு டெலிகிராம் மூலம் அனுப்பினார். உடனே நான் அந்த போட்டோவை டெலிட் செய்ய வற்புறுத்தினேன். மேலும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த நான் அந்த போட்டோவை ஸ்கீரின் ஸ்டார்ட் எடுத்து வைத்துள்ளேன். தொடர்ந்து அவரை தொலைபேசியில் அழைத்தபோது என் தொலைபேசி எண்ணை எடுக்காமல் பரணி என்பவர் மூலம் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் என்னை அவதூறாக சித்தரித்தார். என் மீது வழக்கு போடுவதாகவும் எனக்கு தெரியாமல் என்னிடம் இருந்து எடுத்த காசோலை ஒன்று அவரிடம் இருப்பதாகவும் அதை வைத்து என் மீது மோசடி வழக்கு பதிவு செய்வதாக மிரட்டினார். அவருக்கு தெரிந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி என் மீது பல பொய் வழக்குகளை போட்டு என் வாழ்க்கையை சீரழித்து விடுவதாக மிரட்டியதோடு இங்கேயே அவருக்கு தெரிந்த ரெளடிகளை வைத்து என்னை கொலை செய்து விடுவதாகவும் எனக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

எனவே என் மனுவை விசாரித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அவருக்கு உடந்தையாக இருந்த பரணி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வாட்ஸ்அப் மெஸேஜ்
வாட்ஸ்அப் மெஸேஜ்

இதுகுறித்து துணை நடிகை சாந்தினியிடம் பேசினோம். ``நான் மலேசிய தூதகரத்தில் பணியாற்றிய போது அமைச்சராக இருந்த மணிகண்டன் தொழில் சம்பந்தமாக என்னைச் சந்தித்து பேசினார். அதன்பிறகு நானும் அவரும் கணவன் மனைவியாக 5 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தோம். அப்போது அவரால் சொல்ல முடியாத தொல்லைகளை அனுபவித்திருக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்ளாமல் அவர் ஏமாற்றிவந்தார். மலேசியாவிலிருக்கும் என்னுடைய குடும்பத்தையும் போனில் மிரட்டிவருகிறார். அதனால்தான் மத்திய குற்றப்பிரிவின் துணை கமிஷனர் நாகஜோதியைச் சந்தித்து புகாரளித்திருக்கிறேன்" என்றார்.

வழக்கறிஞர் சுதனிடம் பேசினோம். ``மலேசியாவைச் சேர்ந்த சாந்தினி, நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக நடித்திருக்கிறார். மலேசிய தூதரகத்தில் சாந்தினி பணியாற்றியபோதுதான் அப்போதைய அமைச்சர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சாந்தினியை மணிகண்டன் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியிருக்கிறார். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் துணை கமிஷனர் நாகஜோதியிடம் கொடுத்திருக்கிறோம். விசாரித்து விட்டு நடவடிக்கை எடுப்பதாகக துணை கமிஷனர் நாகஜோதி தெரிவித்தார்" என்றார்.

சாந்தினியின் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விளக்கம் கேட்க அவரின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டோம். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறுகையில், ``என் மீது புகாரளித்த சாந்தினி யாரென்றே எனக்குத் தெரியாது. சில தினங்களுக்கு முன் வழக்கறிஞர் ஒருவர் என்னிடம் பேசினார். அப்போது அவர், சாந்தினிக்கும் எனக்கும் பழக்கம் இருப்பதாகக் கூறினார். அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்போது நானும் சாந்தினியும் இருக்கும் போட்டோஸ்களைக் காண்பித்தார். அதை வெளியிடாமலிருக்க பேரம் பேசினார். தவறு செய்தால்தானே பயப்பட வேண்டும். அதனால் நான் பணம் கொடுக்க மறுத்துவிட்டேன். நான் அமைச்சராக இருந்தபோது பலர் என்னைச் சந்தித்திருப்பார்கள். ஆனால் சாந்தினி என்பவரை நான் மிரட்டவும் இல்லை. அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய். இந்தப் பிரச்னையை சட்டப்படி சந்திக்க நான் தயாராக உள்ளேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு