Published:Updated:

`என்னைத் தப்பானவள் என்றுகூட சொல்லிவிட்டு போகட்டும்!' - கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த `டிக்டாக்' நடிகை

நடிகை இலக்கியா
நடிகை இலக்கியா

`நான் ஆண்களிடம் நேரலையில் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக வெளியான தகவலைக் கேட்டு அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தேன்' என்று ஜாம்பி படத்தில் நடித்த நடிகை இலக்கியா தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்தவர் இலக்கியா (21). இவர் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, ``நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறேன். ஜாம்பி திரைப்படத்திலும் நடித்துள்ளேன். டிக்டாக்கில் வீடியோக்களைப் பதிவு செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளேன். இதில் எனக்கு அதிகமான லைக்ஸ் வந்தது. அந்த மகிழ்ச்சியில் அதிகமான வீடியோக்களை வெளியிட்டேன்.

கமிஷனர் அலுவலகத்தில் இலக்கியா
கமிஷனர் அலுவலகத்தில் இலக்கியா

15.3.2020-ல் என்னைப்பற்றி அவதூறான செய்தி வெளியிடப்பட்டது. மேலும், நான் ஆண்களிடம் நேரலையில் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக தகவல் வெளியானது. அதனால் நான் மிகுந்த அவமானமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மனஉளைச்சலுக்குள்ளாகினேன். எனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ ஒரு சிலர் போலியான ஐடி-க்களை உருவாக்கிப் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலக்கியா அளித்த பேட்டியில்,``என்னுடைய பெயரில் 10க்கும் மேற்பட்ட ஐடிக்கள் உள்ளன. அதைத் தப்பா மிஸ்யூஸ் பண்ணுகிறாங்க. என்னுடைய நேம் சொல்லி 5,000 ரூபாய் பணம் வாங்கியிருப்பதாக கமென்ட்ஸ்ல போட்டியிருக்காங்க. இதுபோல பண்ண மாட்டேன். எனக்கு தேவையானது எல்லாம் என்கிட்ட இருக்கு. அந்தமாதிரி குடும்பத்திலிருந்து நான் வளரல, என்னுடைய நேம் யூஸ் பண்ணி இந்த மாதிரி நிறைய பேக் ஐடி பண்ணியிருக்காங்க. இன்ஸ்ட்ராகிராம், டிக்டாக்ல நேம் போட்டியிருக்காங்க. யார் இப்படி பண்ணுகிறாங்க என எனக்கு தெரியணும். அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன். இதுவே தப்பு பண்ணியிருந்தால் இவ்வளவு தூரம் வந்து பேசணும்னு எனக்கு அவசியமில்லை. தப்பே பண்ணாமல் எனக்கு இவ்வளவு பெரிய பட்டம் கொடுத்திருக்காங்க. என்னைப்பற்றிய நியூஸ் தப்பா போய்கிட்டிருக்கு" என்றார்.

நடிகை இலக்கியா
நடிகை இலக்கியா

இலக்கியாவிடம் ஏன் இப்போது புகாரளித்தீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.``அப்போ எனக்கு பெரிசா தெரியல. இலக்கியா ஃபேன்ஸ் கிளப் என்று தொடங்கினாங்க. அது எனக்கு பிரச்னையில்ல. டிக்டாக்கில் வீடியோ போடுவது எனக்குப் பிடித்துள்ளது" என்றார்.

இலக்கியாவிடம் பேசினோம். ``நான் கடந்த 2 ஆண்டுகளாக டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டுவருகிறேன். என்னுடைய வீடியோக்களுக்கு அதிகமான லைக்ஸ் கிடைத்தன. இந்தச் சூழலில் எனக்கு வந்த சில கமென்ட்ஸ்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதில், ஆண்களிடம் நேரலையில் பேச நான் பணம் பறிப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது. உடனடியாக நான் என் தரப்பு விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளேன். காவல் துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்.

என்னை தப்பானவள் என்றுகூட சொல்லிவிட்டுப் போகட்டும். ஆனால், என்னை ஏமாற்றிப் பிழைப்பதாகக் கூறுகிறார்கள். எனக்கு இன்னமும் திருமணம் நடக்கவில்லை. எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுகிறார்கள். அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள போய்விட்டேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் டிக்டாக் பண்ணுவதில்லை" என்றார்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, `இலக்கியா கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்துவருகிறார்கள். இலக்கியா பெயரில் உள்ள போலியான ஐடி குறித்து ஆய்வு செய்துவருகிறோம்' என்றனர்.

நடிகை இலக்கியா
நடிகை இலக்கியா

இலக்கியாவின் வழக்கறிஞர் கூறுகையில்,``இலக்கியா, 5,000 ரூபாய் வாங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையில்லை. செய்தி வெளியான பிறகுதான் போலி ஐடிக்கள் இருப்பது தெரியவந்தது. இலக்கியா யாரையும் ஏமாற்றவில்லை" என்றார்

இறுதியாக இலக்கியா ஒரு தகவலைத் தெரிவித்தார். ``நான் நேரலையில் நிர்வாணமாக வருவதாகக் கூறி சிலர் பணத்தைப் பறித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு