Published:Updated:

ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்ப்பு!

ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ரூ.200 கோடி மிரட்டிப் பணம் பறித்த வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்ப்பு!

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

Published:Updated:
ஜாக்குலின் பெர்னாண்டஸ்

டெல்லியை மையமாகக்கொண்ட ரான்பாக்ஸி என்ற மருந்து கம்பெனியின் உரிமையாளர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அந்த மருந்து கம்பெனி தொழிலதிபர் சிறையில் இருக்கிறார். அவரைச் சிறையிலிருந்து விடுவிப்பதாகக் கூறி அவர் மனைவியிடம் இந்தப் பணத்தை சுகேஷ் சந்திரசேகர் வாங்கியிருக்கிறார். சுகேஷ் சந்திரசேகர் மட்டுமல்லாமல் அவர் மனைவி லீனா உட்பட இந்த வழக்கில் மொத்தம் எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து நடிகை ஜாக்குலின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்களைப் பெற்றது அமலாக்கப் பிரிவின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சுகேஷ் - ஜாக்குலின்
சுகேஷ் - ஜாக்குலின்

இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பல முறை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகருடன் காதலியாக வாழ்ந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் கைதுசெய்யப்படாவிட்டாலும், அவர் இன்னும் அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பில்தான் இருக்கிறார். அவர் வெளிநாட்டுக்குச் செல்லவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தடைவிதித்திருக்கின்றனர்.

குற்றவாளியாகச் சேர்ப்பு!

சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த ரூ.7 கோடி மதிப்பிலான பரிசுப்பொருள்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த நிலையில், புதிய திருப்பமாக ஜாக்குலின் பெர்னாண்டஸை ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் அமலாக்கப் பிரிவு அவரைக் குற்றவாளியாகச் சேர்த்திருக்கிறது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்திருக்கின்றனர். அதில்தான் ஜாக்குலின் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சுகேஷ் சந்திரசேகர்
சுகேஷ் சந்திரசேகர்

மிரட்டிப் பணம் பறித்தல் உட்பட குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த நிதியிலிருந்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் சந்திரசேகர் ரூ.7 கோடி மதிப்புள்ள பொருள்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். சுகேஷ் இந்தப் பரிசுப்பொருள்களை தன்னுடைய கூட்டாளியும், இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருப்பவருமான பிங்கி இரானி மூலம் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் கொடுத்திருக்கிறார் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலின் குடும்பத்துக்கு அதிக அளவில் பணம் கொடுத்து உதவியிருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு தெரிவித்திருகிறது. அமலாக்கப் பிரிவின் இந்தக் குற்றச்சாட்டு காரணமாக ஜாக்குலின் விரைவில் கைதுசெய்யப்படுவார் என்று தெரிகிறது. ஜாக்குலினுக்குக் கொடுத்த பணம் முழுவதும் தொழிலதிபர் மனைவியிடம் மிரட்டிப் பறித்த பணம் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
ஜாக்குலின் பெர்னாண்டஸ்

சுகேஷ், ஜாக்குலினுக்கு ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரை, 9 லட்சம் மதிப்புள்ள அபூர்வமான பூனை, விலை உயர்ந்த பேக், தங்க ஆபரணங்கள் போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அதோடு சுகேஷ் பரோலில் வெளியில் வந்தபோது சென்னையில் தங்கியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஜாக்குலின் அடிக்கடி தனி விமானத்தில் சென்னைக்குச் சென்று வந்தார். சுகேஷ் சந்திரசேகர்தான் தனி விமானத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். ஜாக்குலினுடன் பழக ஆரம்பித்த பிறகு பரிசுப்பொருள்களை சிறையில் இருந்துகொண்டே தன்னுடைய ஆட்கள் மூலம் கொடுத்து அனுப்பினார். சிறைக்குள் இருப்பதை காட்டிக்கொள்ளாமலேயே சுகேஷ், ஜாக்குலினுடன் பழகிவந்தார். சுகேஷ், ஜாக்குலின் சகோதரிக்கு 1.5 லட்சம் டாலர் கடனாகக் கொடுத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது. சிறையிலும் ஆடம்பர வாழ்க்கை வாழ ஒவ்வொரு மாதமும் கோடிக்கணக்கில் சுகேஷ் செலவு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்குச் சிறையில் உதவி செய்ததாக சிறை அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். 2017-ம் ஆண்டிலிருந்து சுகேஷுடன் தொடர்பில் இருப்பதாக ஜாக்குலின் தெரிவித்திருக்கிறார். இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜாக்குலின் நடிப்புக்காக இந்தியாவில் தங்கியிருக்கிறார்.