Published:Updated:

`இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது!' - சீமான் விவகாரத்தில் கொதிக்கும் நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

`பொதுக்கூட்டங்களில் மோசமான வார்த்தைகளால் திட்டி என்னை மிரட்டி வருகின்றனர். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில வருடங்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார் சீமான்' என்று நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது. `` `வாழ்த்துகள்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது நான் சீமானை சந்தித்தேன். அந்தப் படத்தின் இயக்குநரான அவர் படப்பிடிப்பின்போது என்னிடம் அன்பாக நடந்துகொண்டார். அப்போது, என் வீட்டுக்கு வந்த அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார்.

எந்த ஆண் துணையும் இல்லாமல் வாழ்ந்துவந்த எனக்கு சீமான் கொடுத்த சப்போர்ட் மிகவும் ஆறுதலாக உள்ளது. 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை நான் சீமானுடன் நட்பில் இருந்தேன். அதுவும் சீமான் மதுரை சிறையில் இருந்த தருணத்தில் அவர் பெயிலில் வரும்போதுகூட அவரைச் சந்திக்கச் சென்றுவிடுவேன். இப்படிச் சந்திக்கச் சென்றபோது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அருகில் உள்ள ஹோட்டலில் மூன்று, நான்கு முறை அவருடன் தங்கியுள்ளேன்.

நடிகை விஜயலட்சுமி, சீமான்
நடிகை விஜயலட்சுமி, சீமான்
நடிகை விஜயலட்சுமியின் புகார் மனு
நடிகை விஜயலட்சுமியின் புகார் மனு

சீமானுடன் நான் நட்பில் இருந்தபோது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை அவர் கன்ட்ரோலில் வைத்திருந்தார். எனக்கு மருந்துகள் கொடுத்து நான் கருத்தரிப்பதை அவர் தடுத்தார். நான் சினிமாவில் நடிப்பதற்குக்கூட அவர் தடைகள் விதிக்க ஆரம்பித்தார். மூன்று வருடம் அவருடன் நான் வாழ்ந்த பிறகு திருமணம் செய்துகொள்ள நினைத்தேன்.

2011-ல் இந்த முடிவை எடுத்தபோது சீமானுக்கு நெருக்கமான ஒருவர், `சீமான் உங்களை திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை. அவர் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறார்' எனக் கூறினார். இதுகுறித்து சீமானிடம் கேட்டதற்கு அவர் மறுத்துவிட்டார். என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாததால், அவருடைய குழுவில் உள்ள சில பெரியவர்களுடன் பேசினேன்.

ஆனால், அவர்கள் என்னையும், எனது குடும்பத்தையும் மிரட்ட ஆரம்பித்தார்கள். இதையடுத்தே என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மூன்று ஆண்டுகளாக சீமான் ஏமாற்றினார் என்று 2011 ஜூனில் போலீஸில் புகார் கொடுத்தேன். இந்தப் புகாரை வாபஸ் பெற வேண்டும் என சீமானும் அவரது ஆட்களும் என்னைத் துன்புறுத்தினர். புகாரை வாபஸ் வாங்கிய பிறகு, என்னை யாரென்று தெரியாது என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக பொய்ப் புகார் கொடுத்தேன் என்றும் மீடியாக்களிடம் பேசி அதிர்ச்சிகொடுத்தார் சீமான். இதனால் என் நற்பெயர் முற்றிலும் கெட்டுப்போனதோடு, நான் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். இதற்கடுத்து, சில ஆண்டுகளில் சீமான் கயல்விழி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

சீமானுடன் நடிகை விஜயலட்சுமி
சீமானுடன் நடிகை விஜயலட்சுமி

இதற்கிடையில், கடந்த வருடம் எனக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதற்கான பணம் இல்லாததால் நடிகர் ரஜினிகாந்த் உதவ வேண்டும் என்று சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டேன். ஆனால், இந்த வீடியோவை சீமானுக்கு நெருக்கமான மீடியா நிறுவனம் ஒன்று தவறாக சித்திரித்து, நான் பணத்துக்காக டிராமா செய்வதாகவும், எனது உடல்நிலை சரியில்லை என்ற விவகாரம் தவறானது என்றும் செய்தி வெளியிட்டார்கள். அப்போது முதல் சீமானின் ஆட்கள் எனது போட்டோ மற்றும் வீடியோக்களை தவறாக சித்திரித்து வருகிறார்கள்.

அதனால் நான் சீமானுடன் இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். அதிலிருந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காளியம்மாள் மற்றும் சில வழக்கறிஞர்கள் என்னைத் தவறாக சித்திரித்து வருகின்றனர். மேலும், பொதுக்கூட்டங்களில் மோசமான வார்த்தைகளால் திட்டி என்னை மிரட்டி வருகின்றனர். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனது தொழிலும், எனது வாழ்க்கையிலும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் உள்ளது. கடந்த சில வருடங்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகிறார் சீமான். இதனால் எனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலும் அவர்களது செயல்களைப் பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே, சீமான் மற்றும் அவரது ஆட்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி

இதுகுறித்து நடிகை விஜயலட்சுமியிடம் பேச பல தடவை முயற்சி செய்தோம். ஆனால் அவரின் சகோதரி, நடிகை விஜயலட்சுமி வெளியில் சென்றுள்ளார். வந்த பிறகு உங்களிடம் பேசுவார் என்று கூறினார். ஆனால், நடிகை விஜயலட்சுமி செய்தி வெளியாகும் வரையிலும் பேசவில்லை.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் விளக்கம் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவரும் பதிலளிக்கவில்லை. அந்தக் கட்சியின் பி.ஆர்.ஓ. பாக்கியராசனைத் தொடர்பு கொண்டபோது, `சீமானிடம் கேட்டுவிட்டு பதிலளிக்கிறேன்' என்று கூறினார்.

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்ட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் கேட்டதற்கு,`` புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரிக்கும்போது உரிய விளக்கம் அளிக்கத் தயாராக உள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு