Published:Updated:

`சார்...நாங்கள் தெரியாமல் செய்த தவறு அது!' -ரவி ஐ.பி.எஸ்-ஸிடம் கலங்கிய 2 மாணவிகள்

ரவி ஐ.பி.எஸ்
ரவி ஐ.பி.எஸ்

உங்களுக்கே தெரியாமல் யதேச்சையாக யாராவது வீடியோக்கள், படங்களை அனுப்பியிருக்கலாம். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லோரும் படிக்கிற பருவத்தில் இருக்கிறீர்கள். அதைப்பார்க்கும்போது கவனம் சிதறும்.

`காவலன் செயலி' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடர்ந்து பங்கேற்றுவருகிறார். அவரைத் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏ.டி.ஜி.பி ரவி, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வதில் சிரமங்கள் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது. அந்தச் செயலியில் ஒருவாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும். இனிமேல் எந்த விவரங்களும் கேட்காமல் போன் நம்பர் மட்டுமே பதிவு செய்யும் வகையில் மாற்றம் செய்யப்படும்.

சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

இதன் பின்னர், பல கோடி மக்கள் காவலன் செயலியை எளிதில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவார்கள். வருமுன் காப்பதுதான் தமிழகக் காவல்துறையின் நோக்கம். அதற்காக பல முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறோம். யாரும் காவலன் செயலியைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் தமிழக காவல்துறையின் ஆசை.

குற்றங்கள் குறைய அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும். குற்றங்களிலிருந்தும் மீள முடியும். தெலங்கானாவில் நடந்த துயரமான சம்பவம் அனைவரின் மனதையும் உலுக்கியது. பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த எண்ணிக்கையில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நடக்கின்றன. குற்றங்களே நடக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்.

காவலன் செயலில் ஒரு வாரத்தில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இனிமேல் காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்ய போன் நம்பர் மட்டுமே கேட்கப்படும்.
ஏ.டி.ஜி.பி ரவி

பெண்களைப் பாராட்டும் இந்தச் சமுதாயம் அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடக் கூடாது. சிறார் வதை வீடியோக்கள் பார்ப்பவர்கள், பகிருபவர்கள், பதிவிறக்கம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சென்னையில் சிறார் வதை வீடியோக்களைப் பார்த்த 30 நபர்களின் பட்டியலை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு வந்துள்ளேன். கடந்த வாரம் சென்னை கல்லூரிகளில் படிக்கும் 2 மாணவிகள் வந்தனர். எந்தக் கல்லூரி, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட மாட்டேன். நிச்சயமாக இந்தக் கல்லூரி கிடையாது. அவர்கள் மிகவும் சோகமாகவும் மனஅழுத்தத்தோடும் வந்தனர்.

அவர்கள் என்னைச் சந்தித்ததும் அழுதார்கள். அவர்களிடம் விசாரித்தேன். யாராவது துன்புறுத்துகிறார்களா, பின்தொடர்கிறார்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பதில் சொல்லாமல் அழுதுகொண்டே இருந்தனர். உடனே தண்ணீரைக் கொடுத்து அவர்களை ஆசுவாசப்படுத்தினேன். பின்னர் அவர்கள் ``சார், எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் ஒரு சில மாணவிகளுடன் சேர்ந்து ஆபாசப் படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றைப் பார்த்தோம். அது, சிறார் சம்பந்தப்பட்டது இல்லை.

சிறார் வதை வீடியோ விவகாரம்- முதல் நபராகத் திருச்சி மெக்கானிக் கைது!

நாங்கள் கல்லூரிக்குச் செல்லவில்லை. காவல்துறையினர் எங்களைப் பிடித்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. அவமானமாக இருக்கிறது. விளையாட்டாக அந்த வீடியோக்களைப் பார்த்தோம்" என்று கண்ணீர்மல்க கூறினர்.

உடனே நான் சொன்னேன், `நீங்கள் பார்த்ததில் தவறு ஒன்றும் இல்லை. இனிமேல் பார்க்க வேண்டாம். அதைக் குற்ற உணர்வாக கருத வேண்டாம். இந்த வயதில் சமூகவலைதளங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கிறது. ஒவ்வொருவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் உள்ளன. அதனால் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும்' என்று மாணவிகளிடம் கூறினேன்.

உங்களுக்கே தெரியாமல் யதேச்சையாக யாராவது வீடியோக்கள், படங்களை அனுப்பியிருக்கலாம். அதை நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லோரும் படிக்கிற பருவத்தில் இருக்கிறீர்கள். அதைப்பார்க்கும்போது கவனம் சிதறும். அந்த வீடியோக்களைப் பார்த்தற்காக நிச்சயம் காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்காது. தெரியாமல் பார்த்துவிட்டீர்கள், தெரிந்து பார்த்தாலும் அதை மறந்துவிடுங்கள் என்று கூறினேன். அதன்பிறகுதான் மாணவிகள் நிம்மதியாக புறப்பட்டுச் சென்றனர்" என்றார்.

`சிறார் வதை; 11 நாளில் குற்றப்பத்திரிகை..9 மாதத்தில் தண்டனை!' - நெல்லை நீதிமன்றம் அதிரடி

நிகழ்ச்சிக்குப்பிறகு ஏ.டி.ஜி.பி. ரவி அளித்த பேட்டியில், ``சிறார் வதை வீடியோக்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், மற்றவர்களுக்குப் பகிர்ந்தவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், கமிஷனர்களுக்கும் அனுப்பியுள்ளோம். அந்த எண்ணிக்கையை சொல்ல முடியாது. பட்டியல் அடிப்படையில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களும் கமிஷனர் அலுவலக போலீஸ் அதிகாரிகளும் விசாரித்துவருகின்றனர். சென்னையில் சிறார் வதை வீடியோக்கள் தொடர்பான பட்டியலை சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ளேன்" என்றார்.

ஏ.டி.ஜி.பி. ரவியிடம் சென்னைக்கு அனுப்பிய பட்டியல் குறித்து கேட்டதற்கு, ``முதல் பட்டியலில் 30 பேர் உள்ளனர். அடுத்த பட்டியல் தயாராகிக்கொண்டிருக்கிறது. பட்டியலில் உள்ளவர்களிடம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக போலீஸார் விரைவில் விசாரணை நடத்துவார்கள்" என்றார்.

சிறார் வதை வீடியோக்களைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், மற்றவர்களுக்குப் பகிர்ந்தவர்களின் பட்டியல் ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், கமிஷனர்களுக்கும் அனுப்பியுள்ளோம்.
ரவி ஐ.பி.எஸ்.

அந்த 30 பேர் யாரென்று விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. `அந்தப் பட்டியலில் 10 பேர் 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் உள்ளனர். மேலும், சமூகத்தில் முக்கிய பதவியிலிருக்கும் 3 பேரும், கல்லூரி மாணவர்கள், மாணவிகளும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் சிறார் வதை வீடியோக்களை பதிவிறக்கம் செய்ததோடு அதை மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். பட்டியலில் உள்ளவர்களுக்கு நாளை முதல் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்' என்றார் கமிஷனர் அலுவலக உயரதிகாரி ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு