Published:Updated:

தஞ்சாவூர்: `நான் சென்ட்ரல், நீ ஸ்டேட்’ - மணல் எடுப்பதில் அதிமுக - பாஜக பிரமுகர்கள் இடையே மோதல்

வீட்டில் கிடக்கும் போட்டோக்கள்
வீட்டில் கிடக்கும் போட்டோக்கள்

`மணல் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 12 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். வீட்டிலிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்களே தவிர, மோடி உள்ளிட்ட தலைவர்களின் படங்களைச் சேதப்படுத்தவில்லை.’

தஞ்சாவூர் அருகே ஆற்றில் மணல் எடுப்பதில் பா.ஜ.க., அ.தி.மு.க பிரமுகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பா.ஜ.க பிரமுகர் வீடு சூறையாடப்பட்டது. `நான் சென்ட்ரல், நீ ஸ்டேட். என் அனுமதியில்லாமல் நீ மணல் எடுக்கக் கூடாது’ எனப் பெண் பா.ஜ.க பிரமுகர் தடுத்ததால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் அவர் வீட்டிலிருந்த பொருள்களையும், மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் போட்டோக்களையும் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக 12 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜே.பி பிரமுகர் ஆசைக்கனி
பி.ஜே.பி பிரமுகர் ஆசைக்கனி
ம.அரவிந்த்

தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப்பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசைக்கனி. இவர் பா.ஜ.க-வில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் மோகன்தாஸ். இவர் அ.தி.மு.க-வில் பொறுப்பில் இருக்கிறார். இரு தரப்பும் அனுமதியின்றி, சட்டவிரோதமாக வெண்ணாற்றில் மணல் அள்ளிவந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே இரு தரப்பும் மணல் எடுப்பதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடனேயே மோகன் தாஸ் மீண்டும் மணல் அள்ளத் தொடங்கினார். இவருக்கு திருவையாறு அருகேயுள்ள தில்லைஸ்தானம் ஊராட்சி மன்றத் தலைவரான சூர்யா மறைமுகமாக அனைத்து உதவிகளையும் செய்ததாகக் கூறப்படுகிறது. சொல்லப்போனால் மோகன்தாஸ் பெயரில் சூர்யா மணல் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இவரும் அ.தி.மு.க பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மோகன்தாஸ் தரப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை ஆற்றில் லாரியில் மணல் எடுத்துக்கொண்டு கள்ளப்பெரம்பூர் வழியாக வந்திருக்கிறார்கள். இதையறிந்த ஆசைக்கனி தரப்பினர் மணல் ஏற்றி வந்த லாரியை மறித்துள்ளனர். மோகன்தாஸ் தரப்பினர் பட்டா நிலத்திலேயே மணல் அள்ளி வந்ததாகத் தெரிவித்துள்ளனர். அப்போது ஆசைக்கனி, `நான் சென்ட்ரல், நீ ஸ்டேட். எங்கிட்ட அனுமதி வாங்காம ஏன் மணல் அள்ளினாய்’ எனக் கேட்டு அதிகாரிகளுக்கு போன் செய்திருக்கிறார்.

இதற்கிடையே இரு தரப்புக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்கு மேலாக இந்தப் பிரச்னை தொடர்ந்தது. உடனடியாக போலீஸோ, அதிகாரிகளோ சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதற்கு அடுத்த நாள் மோகன்தாஸ் தரப்பினர் ஆசைக்கனியின் வீட்டுக்குச் சென்று வீட்டுக்குள் இருந்த பொருள்கள், அங்கு மாட்டப்பட்டிருந்த மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் போட்டோ ஆகியவற்றை அடித்து நொறுக்கியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது வீட்டில் ஆசைக்கனி உள்ளிட்டவர்கள் யாரும் இல்லை.

 மணல்
மணல்

இதைத் தொடர்ந்து ஆசைக்கனியின் உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்தப் பிரச்னை தொடர்பாக கள்ளப்பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டிருப்பதுடன், 12 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். மணல் எடுப்பதில் அ.தி.மு.க., பா.ஜ.க நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பகுதியிலுள்ள சிலரிடம் விசாரித்தோம். திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் பட்டா இடத்தில் மீன் வளர்க்க முறையாக அனுமதி பெற்று ஐந்து குளங்களை வெட்டியிருக்கிறார். அப்போது அந்த இடத்தில் மணல் அதிக அளவில் கிடைத்திருக்கிறது. மீன் வளர்ப்பில் கிடைப்பதைவிட மணலில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை உணர்ந்த பிரபு தொடர்ச்சியாக மணல் எடுக்கத் தொடங்கினார்.

இதற்காக ஊருக்குத் தேவையானவற்றையும் செய்து கொடுத்துவந்தார். ஆசைக்கனி தரப்பையும் நல்ல முறையில் கவனித்துவந்தார். இதேபோல் மோகன்தாஸும் தில்லைஸ்தானத்தைச் சேர்ந்த சூர்யாவின் துணையுடன் வெண்ணாற்றில் மணல் எடுத்துவந்தார். இருவரும் ஒரு வகையில் உறவினராக இருந்தாலும், இது தொடர்பாக ஆசைக்கனிக்கும் மோகனுக்கும் பிரச்னை இருந்துவந்தது. இதையடுத்து தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மோகன் மணல் அள்ளத் தொடங்கினார்.

உடைந்துகிடக்கும் கண்ணாடி
உடைந்துகிடக்கும் கண்ணாடி

மோகன் மணல் எடுப்பதை விரும்பாத பிரபு, அதைத் தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். இதற்காக ஆசைக்கனி தரப்பைத் தூண்டிவிட்டிருக்கிறார். அவர் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து மணல் ஏற்றிவந்த லாரியைச் சிறைப் பிடித்திருக்கிறார். அப்போது, `மோகன் லாரியை மறிக்க நீ யார்?’ எனக் கேட்க, `நான் சென்ட்ரல். நீ ஸ்டேட் நான் மறிப்பேன்’ எனச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து போலீஸ் வந்த பிறகே இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தநிலையில் அடுத்த நாள் மோகன் தன் ஆதரவாளர்களுடன் ஆசைக்கனி வீட்டுக்குச் சென்று பொருள்களையும், மோடி உள்ளிட்ட தலைவர்களின் போட்டோக்களையும் அடித்து நொறுக்கினர்.

அப்போது ஆசைக்கனியும் அவரது ஆதரவாளர்களும் வீட்டில் இல்லை. அவர்கள் இருந்திருந்தால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு நிச்சயம் ஏதேனும் விபரீதம் நடந்திருக்கும் என போலீஸாரே கூறிவருகின்றனர். இந்த வழக்கில் 12 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளப்பெரம்பூர் பகுதியில் தொடர்ச்சியாக ஆற்றில் மணல் கடத்தல் நடைபெற்றுவருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

மணல் திருட்டு
மணல் திருட்டு
Representational Image

தொடர்ந்து மணல் எடுத்துவந்ததால், ஆற்றின் கரைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஆற்றில் தண்ணீர் வரும்போது அவை ஊருக்குள் வரும் நிலை உண்டாகும்” எனக் கவலையுடன் தெரிவித்தனர்.

போலீஸ் தரப்பில் பேசினோம். ``மணல் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 12 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். வீட்டிலிருந்த பொருள்களைச் சேதப்படுத்தியிருக்கிறார்களே தவிர, மோடி உள்ளிட்ட தலைவர்களின் படங்களைச் சேதப்படுத்தவில்லை. ஆசைக்கனி தரப்பினர் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்றே மோடி போட்டோவையும் சேதப்படுத்தியதாகக் கூறிவருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். பட்டா இடத்தில்தான் மணல் எடுக்கப்படுகிறது. ஆற்றில் மணல் எடுக்கப்படுவதில்லை. அப்படியே எடுத்தாலும் அது தடுக்கப்படும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு