Published:Updated:

`பேனர் வைத்தது தவறுதான்’ - நீதிபதியிடம் ஒப்புக் கொண்ட அ.தி.மு.க பிரமுகர் ஜெயகோபால்

இன்று அதிகாலை சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட ஜெயகோபாலை, ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ஜெயகோபால்
ஜெயகோபால்

அ.தி.மு.க பிரமுகர் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற இளம்பெண் கடந்த 12-ம் தேதி பள்ளிக்கரணை அருகே விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `சாலையில் இறங்கி பேனரை அகற்றுவதைத் தவிர, அனைத்து வேலைகளையும் நாங்கள் செய்துவிட்டோம்’ என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ஜெயகோபால்
ஜெயகோபால்

தொடர்ந்து, `பேனர் வைக்கமாட்டோம்’ என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது. பேனர் வைத்த அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார். தனிப்படை அமைக்கப்பட்டு, அவரை தமிழக காவல்துறை தேடிவந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை சொகுசு விடுதியில் ஜெயகோபால் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று மாலை ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில் வைத்துக் கைது செய்தது தனிப்படை. இன்று அதிகாலை சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட அவரை, ரகசிய இடத்தில் வைத்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து பரங்கிமலை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட ஜெயகோபால், பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜெயகோபால்
ஜெயகோபால்

இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்டார்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய ஜெயகோபால், `பேனர் வைத்தது தவறுதான்’ என நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயகோபால் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பேனர் வைப்பதற்காக ஒப்பந்தம் எடுத்த அவரின் உறவினரான மேகநாதனை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.