Published:Updated:

`என் அப்பா எங்கே....!’-முன்விரோதத்தால் எரிக்கப்பட்ட சிறுமி; அ.தி.மு.க நிர்வாகிகள் கைது

Representational Image
Representational Image

தீயில் கருகிய பத்தாம் வகுப்பு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், விழுப்புரம் அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது செய்யபட்டிருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஜெயபாலும், அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (16) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். சுமார் 11 மணியளவில் ஜெயபால் வீட்டிற்குள் இருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன் அலறல் சத்தமும் கேட்டது.

Representational Image
Representational Image

அதனால் அக்கம்பக்கத்தினர் ஜெயபாலின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு
சிறுமி ஜெயஸ்ரீயின் வீடு

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க கவுன்சிலர் முருகன் மற்றும் கிளைச் செயலாளர் கலியபெருமாள் இருவரையும் கைது செய்த காவல்துறை அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், ``8 ஆண்டுகளுக்கு முன்பு குமார், கலியப்பெருமாள் உள்ளிட்ட 6 பேர் எனது தம்பி குமாரின் கையை வெட்டிவிட்டார்கள். அது தொடர்பான வழக்கு (குற்ற எண்:596/2013) நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக எங்களுக்கு அடிக்கடி வாய் தகராறு ஏற்படும். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி சனிக்கிழமை இரவு, எனது பெட்டிக்கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த எனது மகனை எங்கள் ஊரைச் சேர்ந்த சிலர் அடித்துவிட்டனர். அதற்காக அன்று இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு விடியற்காலையில் வீட்டுக்குத் திரும்பினோம்.

கைது செய்யப்பட்ட கலியப்பெருமாள்
கைது செய்யப்பட்ட கலியப்பெருமாள்

10-ம் தேதி காலையில் அந்தச் சம்பவம் தொடர்பாக புகார் கொடுப்பதற்காக நானும், எனது மகன் ஜெயராஜும் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்துக்குச் சென்றுவிட்டோம்.

எனது மனைவி ராஜி ஆடு மேய்ப்பதற்குச் சென்றுவிட்டார். அப்போது முருகன் மற்றும் கலியப்பெருமாள் இருவரும் என் பெட்டிக் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த எனது மகள் ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி, கை, கால்களை கட்டியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த பெட்ரோலை எடுத்து என் மகளின் மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்” என்று கூறியிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் முருகன்
கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் முருகன்

உடல் மற்றும் முகம் முழுவதும் தீக்காயங்களால் கறுகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ பேசும் உருக்கமான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

பார்ப்பவர்கள் மனதைப் பதற வைக்கும் அந்த வீடியோ காட்சியில், ``கவுன்சிலர் முருகனும், யாசகனும்தான் (கலியப்பெருமாள்) என் மேல பெட்ரோல் ஊத்திக் கொளுத்திட்டாங்க… என் அப்பா எங்க…” என்று கேட்டு அழுகிறார். சிறுமியின் தற்போதைய உடல்நிலை குறித்து விசாரிக்க விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமமனையின் டீன் குந்தவி தேவியைத் தொடர்புகொண்டபோது,``தீவிர சிகிச்சை அளித்தோம். ஆனால் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால் இன்று காலை 10 மணிக்கு சிறுமி உயிரிழந்துவிட்டார்” என்றார்.

சிறுமதுரை கிராம மக்கள்
சிறுமதுரை கிராம மக்கள்

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம். ``சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்துவருகிறோம். சிறுமியின் பெற்றோர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஏற்கெனவே முன் விரோதம் இருக்கிறது. இருந்தாலும் இந்தச் சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு