Published:Updated:

முன்பகையா... அரசியல் காரணமா? - அ.தி.மு.க பிரமுகர் கொலையால் அதிர்ந்த முத்துப்பேட்டை

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்
கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

முன்பகை காரணமாக அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கோயில் திருவிழா ஒன்றில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றிருக்கிறதா அல்லது அரசியல் பகை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து வேறு ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முத்துப்பேட்டை [கோப்பு  படம்]
முத்துப்பேட்டை [கோப்பு படம்]

முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, ஒன்றிய கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டார். இந்தநிலையில், நேற்று காலை கோவிலூரிலுள்ள தன் வீட்டிலிருந்து, இருசக்கர வாகனத்தில் முத்துப்பேட்டைக்குச் செல்வதற்காகக் கிளம்பியிருக்கிறார்.

அவரை நோட்டமிட்டுப் பின்தொடர்ந்த ஒரு கும்பல், ஆலங்காடு பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் இவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் முயன்றிருக்கிறது. அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ராஜேஷ், அருகிலுள்ள கருவக்காட்டுக்குள் சென்றிருக்கிறார்.

கொலை செய்யப்பட்ட ராஜேஷ்
கொலை செய்யப்பட்ட ராஜேஷ்

அவரை விரட்டிச் சென்ற கொலைவெறிக் கும்பல், ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி, தலையைத் தனியாக துண்டித்ததோடு, பல கிலோமீட்டர் தூரம் அதை எடுத்துச் சென்று முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் வீசிச் சென்றிருக்கிறது. மனிதத் தலை ஒன்று துண்டிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஃப்ளெக்ஸ் வைத்தது தொடர்பாகப் பிரச்னை எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல் தொடர்ந்திருக்கிறது. இரு தரப்பினரும் மாறி மாறிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தென்காசி: பேத்தியுடன் மூதாட்டி கொடூரக் கொலை; 40 நாள்களுக்குப் பின் 5 பேர் கைது! என்ன நடந்தது?

அதேசமயம் அரசியல் பகை, பணம் கொடுக்கல் - வாங்கல் உள்ளிட்ட வேறு காரணங்களால் இந்தக் கொலை நடந்திருக்குமா எனவும் விசாரித்துவருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜேஷின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு