Published:Updated:

சென்னை: அதிமுக பிரமுகரைக் கொலை செய்து நாடகமாடிய மனைவி - காட்டிக்கொடுத்த சாக்கு மூட்டை!

கொலை
கொலை

சென்னையில் கணவரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை சிசிடிவி காட்டிக் கொடுத்திருக்கிறது.

சென்னை மாங்காட்டை அடுத்த கோவூர், மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (37). முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலர். இவர் அந்தப் பகுதியில் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்திவந்தார். இவரின் மனைவி உஷா (34). இந்தத் தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ஏப்ரல் 29-ம் தேதி முதல் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாஸ்கரின் அம்மா மோகனா என்பவர் 30.4.2021-ல் மாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

மோகனா அளித்த புகார்
மோகனா அளித்த புகார்
admin

அதில் கூறியிருப்பதாவது, ``எனது கணவர் பழனி, இறந்துவிட்டார். அதனால் நான் தனியாக வசித்துவருகிறேன். எனக்கு பாஸ்கர் (37) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பாஸ்கருக்கும் கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்த உஷாவுக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். என் மகன்மீது சந்தேகப்பட்டு மருமகள் சண்டை போட்டுவந்தாள். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மனைவியைக் அழைத்துவர கொழுமணிவாக்கம் சென்றபோது அங்கு தகராறு ஏற்பட்டது. அப்போது உஷாவின் சகோதரர் பாக்யராஜ், என் மகன் பாஸ்கரை அடித்திருக்கிறார். அதன் பிறகு சமாதானமாகிவிட்டனர்.

சென்னை: மனைவி மீது சந்தேகம்; ஆத்திரத்தில் நடந்த கொலை! - போலீஸாரிடம் கணவர் கூறிய அதிர்ச்சி காரணம்

வீட்டுக்கு வந்த உஷா, என் மகனிடம் சண்டை போட்டு வந்தாள். 28-ம் தேதி இரவு பெரியம்மாவுக்குக் காரியம் செய்துவிட்டு பாஸ்கர், உஷா ஆகியோர் வீட்டில் படுத்துக் கொண்டனர். குழந்தைகள் என்னுடன் படுத்திருந்தனர். 29.4.2021-ம் தேதி காலை பாஸ்கர் எங்கே என்று உஷாவிடம் கேட்டேன். அதற்கு அவள் வேலை விஷயமாக விடியற்காலையில் சென்றுவிட்டதாகக் கூறினாள். 29.4.2021-ம் தேதி முழுவதும் பாஸ்கரை நான் பார்க்கவில்லை. 30.4.2021-ம் தேதி விடியற்காலை மருமகள் உஷா, குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு ஆட்டோவில் சென்றுவிட்டாள். நான் உஷாவை செல்போனில் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆஃப் என பதில் வந்தது. பின்னர் சம்பந்தி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அந்த வீடும் பூட்டியிருந்தது. எனவே, முன்விரோதம் காரணமாக பாஸ்கரை உஷாவும், அவரின் சகோதரர் பாஸ்கரும் சேர்ந்து கொலை செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் உள்ளது. என் மகன் பாஸ்கரைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

கொலை
கொலை

புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பாஸ்கரைத் தேடிவந்தனர். இந்தநிலையில் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது உஷா, அதிகாலை நேரத்தில் மூட்டை ஒன்றை தூக்கிக்கொண்டு தெருவில் நடந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பின்னர் சிறிது நேரத்தில் உஷா மூட்டையில்லாமல் வீட்டுக்கு வெறுங்கையோடு வந்தார். இந்தக் காட்சியின் அடிப்படையில் போலீஸார் உஷாவிடம் விசாரித்தனர். அப்போது உஷா, முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். அதனால் பாஸ்கர் குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில் சிங்காராயபுரம் பகுதியிலுள்ள கல்குவாரியில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் விசாரித்தபோது இறந்தவர் பாஸ்கர் எனத் தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கரின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் பாஸ்கர் மரணம் குறித்து உஷாவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது பாஸ்கரைக் கொலை செய்ததை உஷா ஒப்புக்கொண்டார். இதையடுத்து பாஸ்கரைக் கொலை செய்த வழக்கில் அவரின் மனைவி உஷாவை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சிசிடிவி
சிசிடிவி

பாக்கியராஜை போலீஸார் தேடிவருகின்றனர். பாஸ்கர் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,`` உஷாவுக்கும் பாஸ்கருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. சம்பவத்தன்று வீட்டில் இருவர் மட்டும் இருந்திருக்கின்றனர். அப்போது நடந்த தகராறில் பாஸ்கரை உஷா தள்ளிவிட்டிருக்கிறார். அதில் கீழே விழுந்த பாஸ்கர், மூச்சுப் பேச்சில்லாமல் இருந்திருக்கிறார். அதனால் தன்னுடைய சகோதரர் பாக்கியராஜுக்கு உஷா போனில் தகவல் தெரிவித்திருக்கிறார். வீட்டுக்கு வந்த பாக்கியராஜ், பாஸ்கர் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அதன்பிறகு வீடு முழுவதும் ஸ்பிரே அடித்துவிட்டு பாஸ்கரின் சடலத்தை சாக்குமூட்டையில் அடைத்து கல்குவாரியில் வீசியிருக்கின்றனர். பின்னர் ரத்தக்கறைபடிந்த தலையணை, பெட் ஷீட்டை சாக்குமூட்டையில் வைத்து அருகிலுள்ள பகுதியில் உஷா வீசியிருக்கிறார். அந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்தபோதுதான் உஷா சிக்கிக்கொண்டார்"என்றனர்.

அ.தி.மு.க பிரமுகரை அவரின் மனைவியே கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு