Published:Updated:

தூத்துக்குடி: முந்திரி கடத்தல்; முன்னாள் அமைச்சர் மகன்மீது குண்டாஸ்! - மா.செ பதவிக்கு வில்லங்கம்?

முந்திரி கடத்தல் வழக்கு
News
முந்திரி கடத்தல் வழக்கு

எப்படியும் 'மா.செ' பதவி தனக்குக் கிடைத்துவிடும் என நினைத்தார் செல்லப்பாண்டியன். இந்த நிலையில், தன் மகன் முந்திரி கடத்தல் வழக்கில் சிக்க, அது செல்லப்பாண்டியனுக்கு மேலும் சிக்கலானது.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் பகுதியிலிருக்கும் ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து ரூ.1.1 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிக்கொண்டு வந்த லாரியை, கடந்த நவம்பர் 26-ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டலுரணி விலக்கு பகுதியில்வைத்து 'TN 69 BL 5555 ' என்ற காரில் வந்த நபர்கள் வழிமறித்து கடத்திச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் லாரி ஓட்டுநரான தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து முந்திரிப்பருப்பு லாரியை கடத்திச் சென்ற கும்பலை மடக்கிப் பிடித்தனர்.

கடத்தப்பட்ட முந்திரி
கடத்தப்பட்ட முந்திரி

இந்த வழக்கில் போலீஸார் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகனான ஞானராஜ் ஜெபசிங், விஷ்ணுபெருமாள், பாண்டி, மாரிமுத்து, செந்தில்முருகன், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார், மனோகரன் ஆகிய 7 பேரையும் கைதுசெய்தனர். அத்துடன், கடத்தப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்பிலான முந்திரிப்பருப்பு, லாரி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

இது தொடர்பாக, உள்ளூர் அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ``இந்த வழக்கில், கைதுசெய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி முன்னாள் தொழிலாளர்நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகன் ஞானராஜ் ஜெபசிங்தான். ஏற்கெனவே, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளினி ஒருவருடன் ஞானராஜ் நெருக்கமாக இருப்பது போன்ற பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

முன்னாள் அமைச்சர் மகன் ஞானராஜ்
முன்னாள் அமைச்சர் மகன் ஞானராஜ்

திருமணம் செய்வதாகச் சொல்லி, ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் தொகுப்பாளினி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டன் இல்லத்திலேயே நேரில் சந்தித்து புகார் மனுவும் அளித்தார். அந்த நேரத்தில், அமைச்சரான குறுகிய காலத்திலேயே சொத்துக்குவிப்பு சர்ச்சையில் செல்லப்பாண்டியன் சிக்கியிருந்த நிலையில், அவரை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. தன் வாரிசுகளால் பெண் விவகாரத்தில் சிக்கிய சில அமைச்சர்களும் கதிகலங்கிப்போனார்கள். ஞானராஜ் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில்தான், 12 டன் முந்திரியை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்குச் சென்றுகொண்டிருந்த லாரி டிரைவரை மிரட்டி, லாரியைக் கடத்திச் சென்ற வழக்கில் ஜெபசிங் உள்ளிட்ட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில், செல்லப்பாண்டியனின் மகன்மீது குண்டாஸ் பாய்ந்திருக்கிறது" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரத்தில் செல்லப்பாண்டியனின் அரசியல் மூவ் குறித்தும் அ.தி.மு.க-வினர் நம்மிடம் பேசினார்கள். அதையும் கேட்டோம், ``தூத்துக்குடி அ.தி.மு.க தெற்கு மாவட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தனி அணியாகவும், முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தனி அணியாகவும் செயல்பட்டுவருகின்றனர். சண்முகநாதன் மீதான அதிருப்தியில் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் செல்லப்பாண்டியன் அணியில் சேர்ந்துவிட்டனர். அ.தி.மு.க-வின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தையும் இரண்டு அணியினரும் தனித்தனியாகவே நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன்

செல்லப்பாண்டியன் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் எஸ்.டி.கருணாநிதி, "தூத்துக்குடி எம்.பி தேர்தலில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு ஒதுக்கினார். எம்.எல்.ஏ எலெக்‌ஷன்லயும் தூத்துக்குடி தொகுதியை தா.ம.க-வுக்கு ஒதுக்கினார். இரண்டு தேர்தலிலுமே தோற்றுவிட்டோம். சண்முகநாதனும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தோற்றுவிட்டார். `நமக்குப் பதவி இல்லேன்னா கட்சியில எவனுக்கும் பதவி இருக்கக் கூடாது’ எனக் கட்சியை அழிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுவருகிறார். சாதாரண வைத்தியராக இருந்த சண்முகநாதன் அசுர வளர்ச்சி பெற்றது எப்படித் தெரியுமா?” என சண்முகநாதன் கட்சியில் வளர்ந்த கதையைப் பற்றி தனக்கே உரிய நக்கலான பாணியில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலானது.

இது, சண்முகநாதனின் ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தன் மனைவியுடன் இரவில் தூத்துக்குடி சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கருணாநிதியின் பைக்கை சண்முகநாதனின் உதவியாளர் சகாயராஜ், சந்தனப்பட்டு, தனம் ஆகிய கட்சியினர் வழிமறித்தனர். ‘அண்ணாச்சியைப் பத்தியா பேசுற?’ எனச் சொன்னபடியே பிளாஸ்டிக் தாளில் மடக்கி வைத்திருந்த மனித மலத்தை கருணாநிதியின் முகத்தில் பூசிவிட்டு கத்தியால் குத்த முயன்றனர். கருணாநிதியின் மனைவி கூச்சலிடவே கூட்டம் கூடியதும் தப்பியோடினர். இந்த விவகாரம் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து சண்முகநாதன் உள்ளிட்ட நான்கு பேர் மீது தூத்துக்குடி மத்திய காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவும் செய்திருக்கின்றனர்.

முந்திரி கடத்தல் வழக்கு
முந்திரி கடத்தல் வழக்கு

அந்த எஃப்.ஐ.ஆர் நகலுடன் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்-ஐ சந்தித்து கண்ணீர்மல்கப் புகார் அளித்திருக்கிறார் கருணாநிதி. கருணாநிதி உள்ளிட்டோரைத் தன் சொந்தச் செலவில் அழைத்துச் சென்றதே செல்லப்பாண்டியன்தான். எப்படியும் 'மா.செ' பதவி தனக்குக் கிடைத்துவிடும் என நினைத்தார் செல்லப்பாண்டியன். இந்த நிலையில், தன் மகன் முந்திரி ஏற்றிவந்த லாரி கடத்தல் வழக்கில் சிக்க, அது செல்லப்பாண்டியனுக்கு மேலும் சிக்கலானது. தற்போது குண்டர் சட்டத்தின் கீழும் வாரிசு கைதாக, மனமுடைந்து போனார் செல்லப்பாண்டியன். மகனால் மா.செ பதவிக்கு வில்லங்கம் வந்ததை நினைத்து அண்ணன் டென்ஷன் ஆகியிருக்கிறார். இந்த விவகாரம் சண்முகநாதன் தரப்புக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றனர்.