Published:Updated:

திருவள்ளூர்: கணவரைப் பிரிந்த பெண்; ஆத்திரத்தில் குடும்பத்தினர்! - வழக்கறிஞர் கொலையில் நடந்தது என்ன?

வழக்கறிஞர் வெட்டிக் கொலை!
வழக்கறிஞர் வெட்டிக் கொலை!

திருவள்ளூர் அருகே திருமணம் மீறிய உறவு விவகாரத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மனைவி பெயர் சின்னம்மா. இந்தத் தம்பதியின் மகள் சத்யா (30). கடந்த சில வருடங்களுக்கு முன்பு சத்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடசேன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்தநிலையில், கடந்த ஓராண்டுக்காலமாகக் கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சத்யா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்திருக்கிறார்.

இந்தநிலையில், சத்யாவுக்கும் திருவள்ளூரை அடுத்த வெள்ளரித்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான வெங்கடேசனுக்கும் (33) இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. வழக்கறிஞர் வெங்கடேசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், அது தெரிந்தும் சத்யா அவருடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியிருக்கிறார். இந்த விவகாரம் சத்யாவின் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. வழக்கறிஞர் வெங்கடேசனைத் தங்களுக்குப் பிடிக்காததால் சத்யாவின் பெற்றோர் அவருடன் பழகக் கூடாதென்று சத்யாவைக் கண்டித்திருக்கின்றனர். ஆனால், சத்யா வெங்கடேசனுடன் தொடர்ந்து நெருங்கிப் பழகிவந்திருக்கிறார்.

சத்யா
சத்யா

இந்தநிலையில், சத்யா கடந்த வாரம் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் வாடகைக்கு வீடு பார்த்துக்கொண்டு பெற்றோரைப் பிரிந்து சென்றிருக்கிறார். மதுரவாயலிலிருந்து காக்களூருக்கு சத்யா வந்துவிட்டதால் வழக்கறிஞர் வெங்கடசேன் கடந்த வாரம் அடிக்கடி சத்யாவைப் பார்க்க வந்து சென்றிருக்கிறார். இந்தநிலையில், தனியாக வசித்துக்கொண்டிருக்கும் சத்யாவைச் சந்தித்து, அவரைச் சமாதானம் செய்து, மீண்டும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவரின் தந்தை சங்கர், தாய் சின்னம்மா, தம்பி வினோத், தங்கை சங்கீதா, சித்தி தேவி மற்றும் தங்கை கணவர் வெங்கடசேன் ஆகியோர் அவரது வீட்டுக்கு நேற்று காலை சென்றிருக்கின்றனர்.

அப்போது வீட்டில் சத்யாவுடன் வழக்கறிஞர் வெங்கடசேனும் இருந்திருக்கிறார். அதைக் கண்டு ஆத்திரமடைந்த சத்யாவின் குடும்பத்தினர் வெங்கடேசனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பதிலுக்கு வழக்கறிஞர் வெங்கடசேனும் அவர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

அதன் காரணமாக, சத்யாவின் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வெங்கடசேனைத் தாக்கியிருக்கின்றனர். பதிலுக்கு வெங்கடேசனும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சத்யா குடும்பத்தினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் வெங்கடசேனை சரமாரியாக வெட்டியிருக்கின்றனர். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சத்யா தடுக்க முயன்றிருக்கிறார். அப்போது, ஆத்திரத்தில் அவரையும் வெட்டியிருக்கின்றனர். அதில், சத்யா மயங்கிக் கீழே சரிந்துவிட்டதை அடுத்து, வழக்கறிஞர் வெங்கடசேனை அனைவரும் சேர்ந்து சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதற்கிடையில், சத்யாவின் வீட்டில் அலறல் சத்தம் பலமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த சத்யாவை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, சத்யா குடும்பத்தினர் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வழக்கறிஞர் வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன்
கொலை செய்யப்பட்ட வெங்கடேசன்

கொலைச் சம்பவம் தொடர்பாகத் திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரஹாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்த தாலுகா போலீஸார், தப்பியோடிய சத்யாவின் குடும்பத்தினரைத் தீவிரமாகத் தேடினர். இந்தநிலையில், நேற்றைய தினமே சத்யாவின் தந்தை சங்கர், தாய் செல்லம்மாள், தம்பி வினோத் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ள ஆறு பேரிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். வழக்கறிஞர் ஒருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை: இரட்டைக் கொலை; தொட்டிக்குள் சடலங்கள்; தனியாக வசித்த தம்பதியருக்கு நேர்ந்த கொடூரம்!
அடுத்த கட்டுரைக்கு