Published:Updated:

தேனி: `பழிக்குப் பழி; வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை!' - 4 பேர் கைது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கொலைசெய்யப்பட்ட வழக்கறிஞர் மதன்
கொலைசெய்யப்பட்ட வழக்கறிஞர் மதன்

தேனி அருகே வழக்கறிஞர் கொலை வழக்கில் பழிக்குப் பழியாக மற்றொரு வழக்கறிஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேனி மாவட்டம், கூடலூரை அடுத்த குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் (42). இவர் நிலப் பிரச்னை காரணமாக உத்தமபாளையம் அருகிலிருக்கும் கோவிந்தன்பட்டி பகுதியில் மர்மநபர்களால் 2020 மார்ச் 6-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர்கள் மதன், ஜெயபிரபு, கார் ஓட்டுநர்களான சூப் செல்வம், ஆனந்தன், கூலிப்படையைச் சேர்ந்த ராஜேஷ், சஞ்சய், ராஜா, வேல்முருகன் ஆகிய எட்டு பேரை உத்தமபாளையம் போலீஸார் கைதுசெய்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு வழக்கறிஞர் சொக்கர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தவர், தலைமறைவாக இருந்த மூதாட்டி மயிலம்மாள் என இதுவரை 10 பேர் வரை இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவந்தனர்.

இந்த நிலையில், உயிரிழந்த ரஞ்சித்குமாரின் மரணத்துக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கில் தொடர்புடைய கூடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் மதன் (39) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

வெட்டிக் கொலை
வெட்டிக் கொலை

உத்தமபாளையம் நீதிமன்றத்தில் பணியை முடித்துக்கொண்டு பைக்கில் இன்று மதியம் உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகே சாலையோரத்தில் மதன் சென்றுகொண்டிருந்தார். அவரைக் காரில் பின்தொடர்ந்து வந்த கும்பல், அவரது பைக்கை இடித்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மதனை, அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிச் செய்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த மதனை மீட்ட அக்கம் பக்கத்தினர் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், மதன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து, போலீஸார் மதனின் உடலைப் பிரேத பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

படுகொலை
படுகொலை

இதற்கிடையே மதனை வெட்டிய கும்பல் காரில் தப்பியோட முயன்றபோது, உத்தமபாளையம் - அம்மாபட்டி சாலையில் போலீஸாரிடம் பிடிபட்டனர். இதில் ஏற்கெனவே படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ரஞ்சித்குமாரின் தந்தை கருணாநிதி (70), சகோதரர்கள் செல்வேந்திரன் (47), சுதேசி (36), உறவினர் குமார் (45) ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், வழக்கறிஞர் ரஞ்சித்குமார் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு பழிவாங்குவதற்காக மதன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

தேனி: `அழிக்கப்பட்ட படம்; சிக்க வைத்த செல்போன்!’ - கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு