சேலம், சிறப்பு நீதிமன்றம், பட்டியலின சிறுமியைத் தலை துண்டித்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கியது கவனம் பெற்றது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிக்கு, இரண்டு மகள்கள். இரண்டாவது மகள், அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வந்தார்.

2018-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, பள்ளியில் நடந்த மாறுவேடப் போட்டியில் மாரியம்மன் வேடம் போடுவதற்கு சிறுமி பெயர் கொடுத்துள்ளார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமாரின் தோட்டத்தில் மல்லிகைப் பூ பறித்துவந்து, தன் தாயிடம் கொடுத்துள்ளார்.
சிறுமியும் அவரின் தாயும் பூக்களைக் கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது கையில் அரிவாளுடன் வந்த தினேஷ் குமார், வீட்டுக்குள் புகுந்து சிறுமியின் தலைமுடியைப் பிடித்து, தன் கையில் வைத்திருந்த அரிவாளால் அவர் தலையைத் துண்டித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் டவுன் போலீஸில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ, கொலை, வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைகள் அனைத்தும் முடிவுக்கு வந்த நிலையில், தினேஷ் குமார் சிறுமியை கொலை செய்தது நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து தினேஷ் குமாருக்கு மரண தண்டனையும், 25,000 அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அபராத தொகையை வழங்கவும் உத்தரவிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் பேசினோம். ``எங்க பொண்ணு நல்லா படிப்பா. கலெக்டர் ஆகணும்னு ஆசைனு சொல்லுவா. அவங்க பள்ளிக்கூடத்துல நடக்குற எல்லா போட்டியிலும் கலந்துக்குவா. அந்த பிஞ்சு மனசுக்கு என்னங்க தெரியும்? இரக்கமே இல்லாம இப்படி அந்தக் குழந்தையை கொடூரமா கொலை செஞ்சுட்டாங்க. இந்த வழக்குல குற்றவாளிக்கு உரிய தண்டனை கிடைக்கணும்னு நான் வேண்டாத சாமி இல்லங்க. நாலு வருஷமா ரொம்ப மன உளைச்சல்ல இருந்தோம். இப்போ குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுத்திருக்குறது ஆறுதலா இருக்கு. என் குழந்தைக்கு நடந்த கொடூரம் எந்தக் குழந்தைக்கும் நடந்துடக் கூடாது'' என்றனர் கண்ணீருடன்.

வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் சுதாவிடம் பேசினோம். ``கடந்த 5 வருடங்களாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பட்ட கஷ்டத்துக்கு உரிய நீதி கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பை முழுமனதாக ஏற்கிறோம். பட்டியல் இனத்தவர்கள் மீது நடக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது" என்றார்.