Published:Updated:

`அவள் உன்னுடன் வர சம்மதித்துவிட்டாள்!’ - நம்பிச் சென்ற கோடீஸ்வரர்; நடுக்கடலில் வைத்து தீர்த்த பெண் வழக்கறிஞர்

சத்யா கோபாலன்

`முதலில் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரவுடி குடுமி பிரகாஷ் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சிலரைக் கைது செய்துள்ளோம்’ என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டவர்
கொலை செய்யப்பட்டவர்

சென்னை அடையாறில் உள்ள இந்திரா நகரில் வசித்து வந்தவர் சுரேஷ் பரத்வாஜ். 50 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அடையாறில் ஒரு சொந்த பங்களா, அதைத் தவிர பத்து வீடுகள், ஒரு வணிகவளாகம் என அவற்றில் வரும் வாடகை மூலம் மிகவும் சொகுசாக வாழ்ந்துவந்துள்ளார் சுரேஷ். அவருக்கு குடும்பம் என யாரும் கிடையாது, அண்ணன் அரவிந்த் மட்டும் அமெரிக்காவில் வசித்துவந்துள்ளார்.

சுரேஷ் பரத்வாஜ்
சுரேஷ் பரத்வாஜ்

இந்த நிலையில், தினமும் தன்னைத் தொடர்புகொண்டு பேசும் தன் சகோதரர் சில தினங்களாக தன்னிடம் பேசாததால் சந்தேகமடைந்த அண்ணன் அரவிந்த், சுரேஷின் வீட்டுக்கு அருகில் இருப்பவருக்கு போன் செய்து விசாரித்துள்ளார். அவர்கள், சுரேஷை நீண்ட நாள்களாகக் காணவில்லை எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இ-மெயில் மூலம் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அவர். அந்தப் புகாரை வைத்து காவலர்களும் சுரேஷ், காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து அவரைத் தேடும் பணியில் இறங்கினர்.

காணாமல் போன அன்று சுரேஷ் தன் செல்போனை கார் டிரைவரிடம் கொடுத்துவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார் என்ற தகவல்தான் முதலில் காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது. கார் டிரைவரிடம் நடந்த விசாரணையில், ’ நான் அடையாறில் உள்ள பிரீத்தி என்ற பெண் வழக்கறிஞர் வீட்டுக்குச் செல்கிறேன்’ என தன்னிடம் கூறிவிட்டு சுரேஷ் சென்றதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி கேமிரா
சிசிடிவி கேமிரா

இதையடுத்து, வழக்கறிஞரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு வழக்கறிஞர், ‘ஒரே ஒரு நாள் சுரேஷ் இங்கு வந்து என்னிடம் பேசிவிட்டுச் சென்றுவிட்டார்’ எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, வழக்கறிஞரின் வீட்டுக்கு அருகிலிருந்த சிசிடிவி கேமிராக்களை போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். அதில் சந்தேகப்படும்படியான எந்தச் சம்பவமும் இடம்பெறவில்லை. ஆனால் சுரேஷ் வழக்கறிஞரின் வீட்டுக்கு வந்தபோது, பிரீத்தியின் வீட்டிலிருந்த சிசிடிவி கேமிராக்கள் அணைத்து வைக்கப்பட்டுள்ளன.

இங்குதான் காவல்துறையினருக்கு முதல் பொறி தட்டியுள்ளது. பின்னர் காவல்துறையினர், ப்ரீத்தியின் செல்போன் எண்ணை ரகசியமாகக் கண்காணித்துள்ளனர். அதில் சுரேஷ் சென்ற காசிமேடு பகுதி வரை பிரீத்தியும் பயணித்துள்ளார் என்பதையும், அங்கிருந்து வேறு ஒரு தொலைபேசி எண் மூலம் ப்ரீத்தி அடிக்கடி பேசியதும் தெரியவந்துள்ளது. அதற்குள் ப்ரீத்தி தலைமறைவாகியுள்ளார். இதனால் காவலர்களுக்குச் சந்தேகம் வலுத்துள்ளது.

செல்போன்
செல்போன்

வழக்கறிஞர் பிரீத்தி அடிக்கடி பேசிய தொலைபேசி எண், காசிமேடு பகுதியில் உள்ள ரவுடி குடுமி பிரகாஷ் என்பவருடையது என அறிந்ததும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி, குடுமி பிரகாஷை அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். ரவுடி அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரவுடியின் வாக்குமூலம் பற்றி நம்மிடம் பேசிய அடையாறு போலீஸ் துணை ஆணையர் பகலவன், ``கோடீஸ்வரர் சுரேஷ் பரத்வாஜ் வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் நீண்ட நாள்களாக வேலை செய்துவந்துள்ளார். அந்தப் பெண் தன் பிள்ளைகளின் படிப்பு, சொந்தச் செலவு என சிறிது, சிறிதாக ஐந்து லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில், சுரேஷ் வேலைக்காரப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் சுரேஷ் வீட்டுக்கு வேலைக்குச் செல்லவில்லை.

அடையாறு காவல்நிலையம்
அடையாறு காவல்நிலையம்

இதையடுத்து வேலைக்கார பெண், தன்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி வாங்கித்தரும்படி வழக்கறிஞர் பிரீத்தியிடம் கேட்டுள்ளார் சுரேஷ். பிரீத்தியும் வேலைக்காரப் பெண்ணை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில், `நான் இனிமேல் அவர் வீட்டுக்கு வேலைக்குச் செல்ல மாட்டேன். அவரிடம் வாங்கிய பணத்தை மெல்லத் திருப்பி அளித்துவிடுகிறேன்’ என அந்தப் பெண், வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். ஆனால் சுரேஷிடம் இதை மறைத்த பிரீத்தி, வேலைக்காரப் பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி தொடர்ந்து சுரேஷிடம் பணம் வாங்கி வந்துள்ளார். இதுவரை சுரேஷிடமிருந்து ரூ.60 லட்சத்துக்கும் அதிகமாக பிரீத்தி பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிறகு, வேலைக்காரப் பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என பிரீத்தியிடம் கேட்டுள்ளார் சுரேஷ். இதையடுத்து, அந்தப் பெண்ணையும், சுரேசையும் வேறு வேறு படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் சென்ற பிரீத்தி அங்கு வைத்து ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அன்று ஏதேதோ சொல்லிச் சமாளித்து இருவரையும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாள் ஆகியும் பிரீத்தியிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இதில் கடுப்பான சுரேஷ், வழக்கறிஞர் பிரீத்தியிடம் தான் வழங்கிய பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார்.

காசிமேடு கடல்
காசிமேடு கடல்

சுரேஷிடம் வாங்கிய பணத்தை திரும்பத் தர மனமில்லாத பிரீத்தி மீண்டும் பிளான் செய்து, `வேலைக்கார பெண் உன்னுடன் வரச் சம்மதித்துவிட்டார்’ எனப் பொய் சொல்லி, சுரேஷை மீண்டும் கடலுக்குள் அழைத்துச் சென்று, ரவுடிகளை வைத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் கரைக்கு வந்துள்ளார். முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் பிரீத்தியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பெண் கிடைத்தால் மட்டுமே என்ன நடந்தது போன்ற அனைத்து தகவல்களும் வெளிவரும்” எனக் கூறி முடித்தார்.