Published:Updated:

ஆப்கான்: பள்ளி மாணவிகளைக் குறிவைத்து நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்! - 68 பேர் பலியான கொடூரம்

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் மேற்கு காபூலில் பள்ளி அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68-ஆக உயர்ந்துள்ளது. மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. 

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலின் தஸ்த் இ பர்ச்சி மாவட்டத்தில், ஷியா பிரிவு மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். சிறுபான்மையின மக்களான ஷியா மக்கள் மீது அந்நாட்டின் இஸ்லாமியப் பிரிவுகளில் ஒன்றான சன்னி பிரிவு முஸ்லிம்கள் அடிக்கடி தாக்குதல்களையும், வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. இவர்களைத் தவிர்த்து தாலிபன் பயங்கரவாதிகளின் அச்சறுத்தலும் அந்தப் பகுதியில் மிகுதியாக உள்ளது.


கடந்த சில வருடங்களாக ஷியா சமூக மக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஒரு மாபெரும் மனிதநேயமற்ற கொடூர வெடிகுண்டுத் தாக்குதல் அரங்கேறியது. அதில் 68 பள்ளி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தஸ்த் இ பர்ச்சி மாவட்டத்தில் ஷியா சமூகப் பெண் பிள்ளைகளுக்காக பிரத்யேக பள்ளிக்கூடம் ஒன்று இயங்கிவருகிறது. கடந்த சனிக்கிழமை பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டுகள் வைத்து மாணவிகளைக் கொல்லத் திட்டமிட்டு, சயீத் அல்-ஷுஹாதா பள்ளிக்கு முன்னால் நின்றிருந்த ஒரு காரின் அடியில் வெடிகுண்டை பயங்கரவாதிகள் பொருத்தினர். மாணவிகள் பள்ளிக்கூடத்துக்குள் பாடம் படித்துக்கொண்டிருந்த வேளையில் பயங்கரச் சத்தத்துடன் காரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. பள்ளிக்கூடத்தின் அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தால், வெடிகுண்டின் தாக்கம் பள்ளிக்கூடத்தில் எதிரொலித்தது. படித்துக் கொண்டிருந்த மாணவிகள் வெடிகுண்டு வெடித்ததில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து மற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பீதியில் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேற முயன்றபோது பள்ளி அருகே தொடர்ச்சியாக இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

முதலில் வெடித்த கார்
முதலில் வெடித்த கார்

அதில் ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் வெடிகுண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாகத் தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு மீட்டனர். சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் முதலில் வெடித்த குண்டு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகவும், பள்ளிக் குழந்தைகளுக்கு மிகவும் அருகில் குண்டுகள் வெடித்ததால் சுமார் 68 பள்ளி குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் (ரமலான்) ஈத் அல்-பித்ருக்கான கொண்டாட்டங்கள் தொடங்கவிருக்கும் வேளையில் சிறுபான்மையின மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரத் தாக்குதல் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினர் சயீத் அல்-ஷுஹாதா பள்ளி அருகில் தங்கள் பிள்ளைகளின் உடல்களைக் கதறி அழுதபடி தேடிக்கொண்டிருக்கும் காட்சிகள் காண்போர் நெஞ்சை நொறுக்கிப்போடுகிறது.

அரங்கேறிய கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரையிலும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், சன்னி முஸ்லிம் பிரிவினர் மற்றும் தாலிபன் பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில், காபூல் குண்டுவெடிப்புக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றன. வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "காபூலில் சையது அல் சுஹாடா பெண்கள் பள்ளியில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் நினைவுகளுடனும் மற்றும் பிரார்த்தனைகளிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம். இளம் மாணவிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது, ஆப்கானிஸ்தானின் வருங்காலம் மீது நடந்த தாக்குதலாக அமைந்துள்ளது. இந்தியா எப்போதும் ஆப்கானிஸ்தான் நாட்டு இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. அந்நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற விஷயங்களில் ஈடுபாட்டுடன் உள்ளது" எனத் தெரிவித்திருந்தது.

ஆப்கான்: பள்ளி மாணவிகளைக் குறிவைத்து நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்! - 68 பேர் பலியான கொடூரம்

சம்பவம் குறித்து போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த தேவாலயக் கூட்டத்தில் காபூல் தாக்குதலை 'மனிதாபிமானமற்ற செயல்' எனக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு