Published:Updated:

குளத்தில் மூழ்கிய குழந்தைகள்; துயரத்தில் தந்தையும் தற்கொலை! - மனதை உலுக்கும் கடைசிப் புகைப்படங்கள்

குளத்தில் மூழ்கிய குழந்தைகள்
குளத்தில் மூழ்கிய குழந்தைகள்

ஆம்பூர் அருகே இரண்டு குழந்தைகளைப் பறிகொடுத்த துயரத்தில் தந்தையும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகேயுள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன். இவரின் மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 8 வயதில் ஜஸ்வந்த் என்ற மகனும், 6 வயதில் ஹரிப்ரீத்தா என்ற மகளும் இருந்தனர். கல்லூரிலுள்ள அரசுப் பள்ளியில் ஜஸ்வந்த் நான்காம் வகுப்பும், ஹரிப்ரீத்தா இரண்டாம் வகுப்பும் படித்துவந்தனர். இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கடாம்பூர் கிராமத்திலுள்ள மாமியார் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்த லோகேஸ்வரன், நேற்று அருகிலுள்ள கைலாசகிரி மலைக்குச் சென்றார். அவருடன் மனைவி, குழந்தைகளும் சென்றனர்.

கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்
கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்

மலையில் ஆங்காங்கே குழந்தைகளை நிற்கவைத்து செல்போனில் போட்டோ எடுத்த லோகேஸ்வரன் பின்னர் அங்குள்ள குளத்தின் அருகிலிருக்கும் பாறைமீது படுத்திருக்கிறார். அப்போது, விளையாடிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகளும் கால் தவறி குளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தைகளை லோகேஸ்வரன் மீட்க முயன்றிருக்கிறார். ஆழமான பகுதி என்பதால் குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. கதறி அழுதார். உதவிக்கும் ஆளில்லை. இதையடுத்து, அங்கு கண்காணிப்புப் பணியிலிருந்த போலீஸ்காரர் அருகிலுள்ள உமராபாத் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.

தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினரும், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். குளத்தில் மூழ்கிய இரண்டு குழந்தைகளையும் சடலங்களாக மீட்டனர். மலையிலிருந்து குறிப்பிட்ட தூரத்துக்கு சாலை வசதியில்லை என்பதால் பெண் குழந்தையின் சடலத்தை உமராபாத் போலீஸ் எஸ்.ஐ காந்தி தனது தோளில் சுமந்துகொண்டு வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினார். அதேபோல், சிறுவனின் சடலத்தையும் தூக்கிக்கொண்டு வந்தனர். பிரேத பரிசோதனைக்காக இரு உடல்களும் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்துவரும் எஸ்.ஐ காந்தி
பெண் குழந்தையின் சடலத்தை தோளில் சுமந்துவரும் எஸ்.ஐ காந்தி

கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படமே இரண்டு குழந்தைகளின் கடைசிப் புன்னகையாகவும் மாறிவிட்டது. இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த துயரத்தில் இருந்த லோகேஸ்வரன், மீனாட்சி தம்பதியர் கதறி அழுதுகொண்டே இருந்தனர். இன்று காலை ஆம்பூர் ரயில் நிலையப் பகுதிக்குச் சென்ற இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தனர். விஷம் கலந்த குளிர்பானத்தை லோகேஸ்வரன் குடித்த பின்பு மீனாட்சியும் வாங்கிக் குடிக்க முயன்றிருக்கிறார். அப்போது, லோகேஸ்வரன் பாட்டிலைத் தட்டிவிட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மீனாட்சி விஷம் குடித்த கணவரை காப்பாற்றக் கோரி கூச்சலிட்டார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக மரணமடைந்துவிட்டார். இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சம்பவம், ஆம்பூர், ஊத்தங்கரையிலுள்ள அவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு