Published:Updated:

வேலூர்: பட்டாசுக்கடை விபத்தில், இரு குழந்தைகளையும் இழந்த தாய்! - ரயில் முன் பாய்ந்த சோகம்

வித்யாவின் சடலம்
வித்யாவின் சடலம்

பட்டாசுக்கடை தீ விபத்தில், உடல் கருகி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தாய் துயரத்திலிருந்து மீள முடியாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், லத்தேரி பேருந்து நிலையம் அருகில் மோகன்ரெட்டி என்பவர் நடத்திவந்த பட்டாசுக்கடையில், கடந்த 18-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்த மொத்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இந்தக் கோர விபத்தில், கடைக்குள் சிக்கிய மோகன்ரெட்டியும், அவரின் மகள்வழிப் பேரக்குழந்தைகளான 8 வயது தேஜஸும், 6 வயது தனுஷும் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்து நடப்பதற்கு முன் இரண்டு குழந்தைகளும் துள்ளி விளையாடிக்கொண்டிருந்தனர். கண்ணிமைப்பதற்குள்ளாக நொடிப் பொழுதில் இந்தக் கொடூரம் நடந்து முடிந்திருக்கிறது.

குழந்தைகள் தேஜஸ் - தனுஷ்
குழந்தைகள் தேஜஸ் - தனுஷ்

குழந்தைகளின் அழகிய தோற்றம் உருக்குலைந்துப்போய் அவர்களின் உடல் கரிக்கட்டையாக வெந்து கிடந்தது. கடைக்குள்ளிருந்து தீயணைப்பு வீரர்கள் குழந்தைகளின் உடல்களைத் தூக்கி வரும்போது, சுற்றியிருந்த பொதுமக்கள் பதறிப்போய் கண்ணீர்விட்டு துடித்தனர். அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். சுற்றி வேடிக்கை பார்த்தவர்களின் மனமே இப்படிப் பதறியபோது, பெற்ற தாய்பட்ட துயரம் சொல்லி மாளாது. குழந்தைகளின் தாய் வித்யாவுக்கு 34 வயதுதான் ஆகிறது. கணவரைப் பிரிந்து வாழ்வதாகச் சொல்கிறார்கள் அவரின் உறவினர்கள்.

தாய் வீட்டிலிருந்த வித்யா, தன் இரண்டு குழந்தைகள் மட்டுமே உலகம் என்று ஒவ்வொரு நாளையும் கடந்திருக்கிறார். தாத்தாவின் பாசமும் அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தந்தை அருகில் இல்லாத நினைப்பையே ஏற்படுத்தவில்லை. இப்படியான சூழலில் குழந்தைகள் மற்றும் தன் தந்தையின் மரணத்தை வித்யாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு நாள்களாக ஒரு வாய் உணவுகூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள் உறவினர்கள். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்திருக்கிறார். துக்க வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் நேற்று கிளம்பிச் சென்றுவிட்டனர்.

குழந்தைகளுடன் வித்யா
குழந்தைகளுடன் வித்யா

வித்யாவும் அவரின் தாயும் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். இன்று அதிகாலை தாய்க்குத் தெரியாமல் வீட்டிலிருந்து வெளியேறிய வித்யா, சிறிது தூரம் நடந்துசென்று அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். பொழுது விடிந்த பிறகு தண்டவாளத்தின் அருகில் வித்யாவின் சடலம் கிடப்பதைப் பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து வித்யாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

துக்க வீட்டின் முன் வேயப்பட்டிருக்கிற பந்தலின் நிழல்கூட அழுதுகொண்டிருக்கிறது. இறந்தவனுக்கு உடல் மட்டும் எரியும். இழந்தவனுக்கோ இதயமே எரியும் என்பதற்கு வித்யாவின் வாழ்க்கையில் நடந்த துயரமே சான்று. இப்படியொரு துயரம் யாருக்குமே வரக் கூடாது என்று கதறுகிறார்கள் உறவினர்கள்.

அடுத்த கட்டுரைக்கு