Published:Updated:

சென்னை: `சாமியார்; சத்தியம்’ - கணவரை உயிரோடு புதைத்த மனைவி?!

சென்னையில் கணவரை உயிரோடு மனைவி புதைத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். கணவரின் சடலம் குழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் கருணாநிதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரின் மனைவி லட்சுமி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நாகராஜ், வீட்டின் தோட்டத்தில் கோயில் கட்டி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்தார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நாகராஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்போது வீட்டில் மனைவி லட்சுமி மட்டும் இருந்தார். கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல லட்சுமி முடிவு செய்தார். இந்தச் சமயத்தில் வீட்டின் தோட்டத்தில் தன்னை புதைத்துவிடும்படி நாகராஜ் மனைவியிடம் கூறினார். அதைக்கேட்டு லட்சுமி அதிர்ச்சியடைந்திருக்கிறார். அப்போது தன்னை வீட்டின் தோட்டத்தில் புதைக்கும்படி மனைவி லட்சுமியிடம் நாகராஜ் சத்தியம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. சத்தியத்தை மீற முடியாத லட்சுமி, கணவர் விருப்பப்படி தோட்டத்தில் உள்ள குழியில் புதைத்ததாகக் கூறப்படுகிறது.

லட்சுமி
லட்சுமி

இதனிடையே, வெளியூருக்குச் சென்ற மகள் தமிழரசி, வீடு திரும்பினார். அப்போது அவர், அப்பா எங்கு என்று அம்மா லட்சுமியிடம் கேட்டார். அப்போதுதான் நாகராஜை குழி தோண்டி புதைத்த தகவலை லட்சுமி, மகளிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தமிழரசி, உடனடியாக பெரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்அடிப்படையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது நாகராஜ் புதைக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து வருவாய் துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சோழிங்கநல்லுர் தாசில்தார் மேற்பார்வையில் நாகராஜின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமியிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து தமிழரசி கூறுகையில், ``என்னுடைய தந்தை நாகராஜ்-க்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும். அதனால் அவர் உயிரோடு இருக்கும்போதே தன்னை வீட்டின் பின்புறத்தில் உள்ள இடத்தில் புதைக்கும்படி கூறியிருந்தார். வீட்டில் அம்மாவும் அப்பாவும் இருந்தபோது அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் அம்மாவிடம் அப்பா சத்தியம் வாங்கியிருக்கிறார். போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

சடலம்
சடலம்

போலீஸார் கூறுகையில், ``நாகராஜ் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். அவரின் மகன், வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். மகள் தமிழரசி, ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நாகராஜ்-ம், அவரின் மனைவி லட்சுமியும் வீட்டில் இருந்தபோது இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. விசாரணை முடிவில்தான் நாகராஜின் மரணம் குறித்து தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு