பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, சுரேஷ் ஆகிய இருவரும் இரண்டு நாள்களுக்கு முன்பு மதுபோதையில் அதே கிராமத்தைச் சேர்ந்த நல்லுசாமி என்பவரின் வீட்டின் முன்பு தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கின்றனர். இதற்கு நல்லுசாமி சத்தம் போட்டு அனுப்பியிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த சிவா, அவரின் நண்பர்களான கோகுல் உள்ளிட்ட நான்கு பேர் நல்லுசாமி வீட்டுக்கு வந்த அவரின் குடும்பத்தினரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் நல்லுசாமி உறவினர்கள் மற்றும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 50 பேர் சிவாவின் தெருவுக்குச் சென்று எப்படி எங்கள் தெருவிற்கு வந்து எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களை அடிக்கலாம் என்று தகாத வார்த்தையில் திட்டியதோடு சிவா மற்றும் அவரது நண்பர்களைத் தேடியிருக்கிறார்கள். அப்போது அங்கு இல்லாததால் அங்கிருந்த சந்திரன், நிவாஸ் ஆகிய இருவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அவர்கள் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். சாதிய மோதல் உருவாகிவிடும் கூடும் என்பதால் திருச்சி, அரியலூரைச்சேர்ந்த உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர். இவ்வழக்கு சம்மந்தமாக பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த 34 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என்ன நடந்தது என்று போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``லாடபுரத்தில் நாகராஜ் என்பவர் மெடிக்கல் ஷாப் கடை நடத்தி வந்தார். அவரிடம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த பிரபாகரன், ரகுநாத் இருவரும் மாமூல் கேட்டு பிரச்னையில் ஈடுபட்டனர். அவர் கொடுக்க மாட்டேன் என்று தீர்க்கமாக இருந்திருக்கிறார். அந்த கடுப்பில் கடந்த மாதம் அவரை கடுமையாகத் தாக்கியதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதனால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மாற்றுச் சமூகத்தினருக்குள் மோதல் போக்கு இருந்து வந்தன. இந்நிலையில், சுரேஷ், சிவா ஆகிய இருவரும் மதுபோதையில் மாற்றுச் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்குச் சென்று பிரச்னையில் ஈடுபட்டது சிக்கலை மீண்டும் ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் பிரச்னை பெரிதாக உருவெடுத்திருக்கிறது. இப்பிரச்னை சம்மந்தமாக 34 பேரைக் கைது செய்திருக்கிறோம். மேலும் பிரச்னை உருவாகாமல் தடுக்க போலீஸார் குவித்திருக்கிறோம்" என்றார்.