Published:Updated:

`வாழ்வளித்த உங்களையே கொன்றுவிட்டேன்!’ - தந்தையைக் கொலைசெய்த மும்பை பெண்

மும்பையில் தனக்கு பாலியல் சீண்டல்கள் கொடுத்த வளர்ப்புத் தந்தையைக் காதலனுடன் இணைந்து ஒரு பெண் கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆரத்யா
ஆரத்யா

மும்பையின் மாகிம் கடற்கரையில் கடந்த 4-ம் தேதி மாலை பெரிய சூட்கேஸ் ஒன்று மிதந்துகொண்டிருந்தது. அதன் வெளியில் நீட்டிக்கொண்டிருந்த காலை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அப்பகுதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள் அந்த சூட்கேஸை கைபற்றி திறந்து பார்த்தபோது அதில் ஆண் சடலம் இருந்துள்ளது.

மும்பை கடற்கரை
மும்பை கடற்கரை

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இறந்தவரையும் அவரை கொலை செய்தவரையும் தேடி வந்துள்ளனர். பின்னர் இறந்தவரின் உடலிலிருந்த ஸ்வெட்டரை வைத்து அவர் 59 வயதான இசைக்கலைஞர் பெனட் ரிப்பலோ என்பதும் அவரின் வளர்ப்பு மகள் ஆரத்யாவே தந்தையைக் கொலை செய்ததையும் கண்டுபிடித்தனர்.

``19 வயதான ஆரத்யாவிடம் அவரது வளர்ப்புத் தந்தை ரிப்பலோ பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆரத்யாவின் காதலுக்கு அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார். இதனால் ஆரத்யாவும் அவரது 16 வயது காதலனும் இணைந்து ரிப்பலோவை கொலை செய்து, உடலைத் துண்டாடி சூட்கேஸில் அடைத்து கடலில் வீசியுள்ளனர்” என மும்பை காவலர்கள் தெரிவித்திருந்தனர்.

கொலை
கொலை
மாதிரி புகைப்படம்

இந்நிலையில் ரிப்பலோ கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்த பெண் அளித்த வாக்குமூலம் பற்றிப் பேசியுள்ள காவலர்கள், ``ஆரத்யாவின் காதலன் ரிப்பலோவை கொலை செய்ய தன் நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார், அவர்கள் அனைவரும் உதவி செய்ய மறுக்கவே, கடந்த மாதம் 23-ம் தேதி ஆரத்யாவின் வீட்டுக்குச் சென்று இருவரும் இணைந்து ரிப்பலோவை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளனர்.

`காதல்; சூட்கேஸில் மகள் உடல்; நீண்ட பயணம்!’ - ஆட்டோ ஓட்டுநரால் சிக்கிய தந்தை

பின்னர், அவர்களின் திட்டப்படி மற்றொரு நாள் ஆரத்யாவின் வீட்டுக்குச் சென்ற காதலன், ரிப்பலோவிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்ட ஆரத்யா தான் தயாராக வைத்திருந்த மூங்கில் கட்டையால் தன் வளர்ப்புத் தந்தையின் தலையில் பலமாக அடித்துள்ளார். அதன் பிறகு சற்றும் யோசிக்காத காதலன் வேகமாக சமையலறையில் இருந்து கத்தியைக் கொண்டுவந்து பலமுறை ரிப்பலோவை குத்தியுள்ளார்.

ரிப்பலோ
ரிப்பலோ

இதையடுத்து ரிப்பலோ இறந்ததாக இருவரும் நினைத்து அங்கிருந்த ரத்தத்தை தூய்மைப்படுத்தும் பணிகளைச் செய்துள்ளனர். ஆனால் அவர் இன்னும் உயிருடன் உள்ளார் என்பது சில நிமிடங்களுக்கு பிறகுதான் தெரிந்துள்ளது, அதனால் வீட்டிலிருந்த கொசுவைக் கொல்லும் ஸ்ப்ரேவை ரிப்பலோவின் முகத்தில் அடித்து இறுதியாகக் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு தங்கள் பிளான் படி உடலைத் துண்டுகளாக வெட்டி கடலில் வீசியுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ரிப்பலோவை கொலை செய்த பிறகு வீட்டுக்கு வந்த ஆரத்யா, தன் வளர்ப்புத் தந்தையிடம் மன்னிப்பு கேட்டு எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், ``என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா. நான் மிகவும் கெட்டவள், நீங்கள் எனக்கு வாழ்வளித்தபோது நான் உங்களைக் கொலை செய்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

முதலில் தானே இந்த கொலையைத் தனியாகச் செய்ததாகக் காவலர்களிடம் தெரிவித்துள்ளார் ஆரத்யா, ஆனால் அதை நம்பாத காவலர்கள் தொடர்ந்து விசாரிக்கவே தன் காதலனுடன் சேர்ந்து செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் கொலை செய்த இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ரிப்பலோவின் மற்ற உடற்பாகங்களைத் தேடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.