Published:Updated:

`குடிக்காதே எனக் கண்டித்தார்...!' -அறிவுரை கூறிய நெல்லை மூதாட்டிக்கு மகனால் நேர்ந்த கொடூரம்

சுடலையம்மாளுக்கு நடமாட முடியாத அளவுக்கு வயோதிகம் வாட்டியது. ஆனாலும், தவழ்ந்தபடியே தனது அன்றாடப் பணிகளைத் தானே செய்து வந்தார்.

representational image
representational image

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள செட்டிமேடு இந்திரா காலனியைச் சேர்ந்தவர், சுடலையம்மாள். 80 வயது நிரம்பிய மூதாட்டியான இவரின் கணவர் பிச்சையா 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்கள்.

Vikatan

சுடலையம்மாளுக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முருகன். இளையமகன் ராஜேந்திரன், மாற்றுத் திறனாளி. இருவருமே கூலி வேலை செய்து வருகின்றனர். வயது முதிர்வின் காரணமாக சுடலையம்மாள் தளர்ந்துவிட்டபோதிலும், ஊரில் உள்ள குடிசை வீட்டில் தனியாகவே வசித்து வந்தார்.

சுடலையம்மாளுக்கு நடமாட முடியாத அளவுக்கு வயோதிகம் வாட்டியது. ஆனாலும், தவழ்ந்தபடியே தனது அன்றாடப் பணிகளைத் தானே செய்துவந்தார். கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழையால் அவரது குடிசையின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அதனால் அருகில் உள்ள உறவுப் பெண்ணான செல்வி என்பவரின் வீட்டில் வசித்தார்.

representational image
representational image

வெளியூரில் தங்கியிருந்த செல்வி சில தினங்களுக்கு முன்பு திரும்பிவிட்டதால் அந்த வீட்டிலிருந்து வெளியேறிய சுடலையம்மாள், தன் மூத்த மகன் முருகன் வீட்டுக்குச் சென்றார். முருகனுக்கு 6 மகன்களும் இரு மகள்களும் உள்ள நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்திருக்கிறார். அதனால் அவருக்கு சுடலையம்மாள் அடிக்கடி அறிவுரை கூறி வந்திருக்கிறார்.

`தினமும் குடித்தால் குடும்பத்தை நடத்த முடியுமா?’- தட்டிக் கேட்ட மகனுக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம்

இந்த நிலையில், சுடலையம்மாள் திடீரென உயிரிழந்ததால் அவரது இறுதிச் சடங்குக்கான பணிகள் நடந்திருக்கின்றன. அங்கு வந்திருந்த உறவினர்களில் சிலருக்குச் சுடலையம்மாள் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீஸார் அங்கு சென்று சுடலையம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

representational image
representational image

இதனிடையே முருகன் தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, வழக்கம்போல குடித்துவிட்டு வந்தபோது சுடலையம்மாள் அறிவுரை சொன்னதால் ஆத்திரம் ஏற்பட்டு கீழே தள்ளியதாகவும் அதில் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கிய அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். குடிபோதையில் அப்படி நடந்துகொண்டதாகக் கூறி கதறியழுத முருகனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.