Published:Updated:

`இரவு பார்ட்டி; உடலில் காயங்கள்’ - தெலங்கானா 9 பேர் மரணத்தில் புதிய திருப்பம்

தெலங்கானா தொழிலாளர் இறப்பு
தெலங்கானா தொழிலாளர் இறப்பு

தெலங்கானாவில் 9 பேர் உடல்கள் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக அது கொலையாக இருக்கலாம் எனக் காவலர்கள் சந்தேகித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் பகுதியில் வசித்து வந்தவர் மசூத். மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக தெலங்கானாவில் தன் குடும்பத்துடன் தங்கி அருகில் இருக்கும் சாக்குப் பை தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தன் மனைவி, மகன், மகள் மற்றும் மகளின் 3 வயது மகன் ஆகிய அனைவரும் வாடகை வீட்டில் தங்கிவந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த இந்தக் குடும்பம், தங்கள் வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் திணறியுள்ளனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

இதையடுத்து தான் வேலை செய்யும் தொழிற்சாலை முதலாளியின் தயவால் தொழிற்சாலையிலேயே ஒரு அறையில் மசூத் குடும்பம் தங்கியுள்ளனர். இவர்களைப் போலவே பீகார் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த 3 தொழிலாளர்களும் செல்ல இடம் இல்லாமல் அதே தொழிற்சாலையில் வேறு அறையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை தொழிற்சாலைக்கு அருகில் இருக்கும் கிணற்றில் 4 பேரின் சடலங்கள் கிடந்துள்ளன. இதைப் பார்த்த தொழிற்சாலை உரிமையாளர் காவலர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அனைத்து உடல்களையும் கைப்பற்றினர்.

மீண்டும் மறுநாள் காலை அதே கிணற்றில் மேலும் ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தக் கிணற்றில் எஞ்சியிருந்த மொத்த நீரையும் வெளியேற்றியபோது அதில் 5 பேரின் உடல்கள் இருந்ததைக் கண்டு காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரே கிணற்றில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது கொலையா அல்லது தற்கொலையா என்பதும் தெரியாமல் போலீஸார் திணறி வந்தனர்.

கிணற்றில் கிடந்த சடலம்
கிணற்றில் கிடந்த சடலம்

இந்தச் சம்பவம் பற்றிப் பேசியுள்ள தொழிற்சாலையின் நிர்வாகி சந்தோஷ், ``கடந்த வியாழக்கிழமை மாலை தொழிற்சாலையைப் பார்வையிடுவதற்காக நான் வந்தேன். அப்போது அனைத்துக் கதவுகளும் திறந்துகிடந்தன. உள்ளே வந்து மசூத்தின் குடும்பம் மற்றும் மற்றவர்களைத் தேடினேன். யாரும் இல்லை. பிறகு அனைத்து கேட்டுகளையும் பூட்டிவிட்டு, இறுதியாக மாடிக்குச் சென்று பார்க்கலாம் எனச் சென்றபோதுதான் அருகில் இருந்த கிணற்றில் சடலங்கள் மிதப்பதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.

இத்தனை நாள்களாக இந்த உயிரிழப்பு எப்படி நடந்தது என்பது தெரியாமல் விழித்து வந்த காவல்துறையினர், தற்போது வரை தங்களுக்குக் கிடைத்துள்ள தகவலின்படி இது கொலையாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என முடிவு செய்து அந்தக் கோணத்தில் விசாரணையைத் துரிதப்படுத்தி வருகின்றனர். போலீஸாரின் இந்த விசாரணைக்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் சில தகவல்களும் கிடைத்துள்ளன.

கிணற்றில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதற்கு முந்தைய நாள் இரவு, மசூத்தின் அறையில் பார்ட்டி கொண்டாடப்பட்டுள்ளது. மசூத்தின் 3 வயதுப் பேரனுக்கு அன்றைய தினம் பிறந்தநாள். எனவே, தன் குடும்பத்தினரும் தொழிற்சாலையில் இருந்த பீகார் தொழிலாளர்களும் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய கூல் டிரிங்ஸ், இனிப்பு, உணவு ஆகியவை மசூத்தின் வீட்டில் அப்படியே திறந்துகிடந்துள்ளன.

தொழிலாளர் இறப்பு
தொழிலாளர் இறப்பு

மேலும், சம்பவம் நடந்த அன்றைய தினம் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மசூத்தின் போன் ஆனில் இருந்துள்ளது. அந்த சிக்னலும் தொழிற்சாலைப் பகுதியிலேயே காட்டியுள்ளது. அதன் பிறகுதான் போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். மசூத்தின் போனை ஆய்வு செய்ததில் அவர் இறுதியாக பார்ட்டி தொடர்பாகப் பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பார்ட்டியில் விநியோகிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து கொடுத்து இவர்களைக் கொன்று உடலைக் கிணற்றில் வீசியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். மேலும், இறந்தவர்களின் உடலில் காயங்கள் இருப்பதாகப் பிரேதப் பரிசோதனையில் ஈடுப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார். இது காவலர்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

`மொபைல் சுவிட்ச் ஆஃப், கிணற்றில் 9 சடலங்கள்' - வடமாநில தொழிலாளர்கள் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

இறந்தவர்களின் உடலில் தடயவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அது முடிந்த பிறகுதான் 9 பேரின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மசூத்தின் 22 வயது மகள் தன் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். அவரது கணவருக்கும் இந்த உயிரிழப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவரை அழைத்து காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவரோ, தன் மனைவிக்கும் வேறு ஒருவருக்கும் நட்பு இருந்ததாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் பார்ட்டியில் கலந்துகொண்டாரா, அவருக்கும் உயிரிழப்புக்கும் தொடர்பு இருக்குமோ எனக் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையாக இருந்தால் நிச்சயம் 2-3 பேர் சிக்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணை மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு