Published:Updated:

சாத்தான்குளம்; சொந்தஊர் வழக்கில் 6வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர்!

சாத்தான்குளம்
சாத்தான்குளம்

சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஸ்ரீதர் மீது தேனி மாவட்டம் வைகை அணை காவல்நிலையத்தில் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரின் தாக்குதலால் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், பல தரப்பினரும் இச்சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகிய இரண்டு எஸ்.ஐக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிற காவலர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். இதில் ஆய்வாளரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஜெயராஜின் குடும்பத்தினர், வியாபாரிகள், பல கட்சியைச் சேர்ந்தவர்களும் கூறினர்.

பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஸ்ரீதர்
பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஸ்ரீதர்

இந்நிலையில், நேற்றுதான் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளத்தைச் சேர்ந்த சில வியாபாரிகளிடம் பேசினோம், “ஒரு போலீஸ் ஸ்டேஷன்னா பதிவாகும் வழக்குகள், சம்பவங்களெல்லாம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்குத் தெரியாம எப்படி நடந்திருக்கும்? ஜெயராஜ், பென்னிக்ஸ் ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்குள்ள கூட்டிட்டுப் போகும்போது, வாசலில் நின்றுகொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ‘என்னய்யா.. என்ன கேஸு..?’ என எஸ்.ஐ ரகுகணேஷிடம் கேட்டார்.

’நம்மளையே தரக்குறைவாப் பேசுறானுங்க சார்’ எனச் சொல்ல, ‘என்ன திமிருங்கடா உங்களுக்கு. தகப்பன், மகன் ரெண்டு பேருக்கும் போலீஸ் அடியைக் காட்டுங்க” என ஸ்ரீதர் சொல்லிட்டுக் கிளம்பினார். அதுக்குப் பிறகுதான் ரெண்டு, பேரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. இரவு 11 மணிக்கு ஸ்டேஷன் முன்னால வியாபாரிகள் திரண்ட போது, ‘ரெண்டு பேரையும் விசாரணைக்காகத்தான் அழைச்சுட்டு வந்திருக்கோம். எந்தப் பிரச்னையும் இல்ல. ரெண்டு பேரும் நல்லாத்தான் இருக்காங்க’ என ஸ்ரீதர் சமாளித்துப் பேசிய வீடியோவும் வாட்ஸ் அப்பில் வைரலானது.

6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஸ்ரீதர்
6-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ஸ்ரீதர்

அடித்துத் துன்புறுத்திய எஸ்.ஐக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, அதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டரையும் சஸ்பெண்ட் செய்வதுதானே நியாயம். அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நெருக்கமானவர் என்பதால்தான் இவர் பெயர் லிஸ்ட்டில் சேர்க்கப்படவில்லை. தொகுதி எம்.எல்.ஏவான சண்முகநாதனும் ஸ்ரீதரின் பெயர் லிஸ்டில் வராமல் பார்த்துக்கொண்டார். இந்நிலையில், விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில்தான் ஸ்ரீதரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

இந்த ஆய்வாளர் ஸ்ரீதர் மீது தேனி மாவட்ட காவல் நிலையத்தில் ஏற்கெனவே வேறு ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரித்தோம். தேனி மாவட்டம் வைகைஅணை காவல்நிலையத்தில் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாகப் புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜூலையில், ’தன்னை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி, பழரசத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்வதாகவும், அதில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும்’ என்றும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 7 பேர் மீது வைகை அணைக் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார் திவ்யா என்ற பெண்.

வைகை அணை காவல் நிலையம்
வைகை அணை காவல் நிலையம்

இப்புகாரில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் பெயர் இருந்ததால், வைகை அணைக் காவல்நிலையத்தில் அந்தப் புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. புகாரை ஏற்க மறுத்தது தொடர்பாக, ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் திவ்யா முறையிடவே, மாஜிஸ்ட்ரேட்டின் தலையீட்டின் படி, ஜூலை 24ம் தேதி ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து வைகை அணைப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கேட்டோம். “ஆய்வாளர் ஸ்ரீதரின் பூர்வீகம் கேரள மாநிலம். அவருடன் பிறந்த சகோதர சகோதரிகள் என மொத்தம் 6 பேர் உள்ளனர். ஸ்ரீதரின் தந்தை தமிழகப் பொதுப்பணித்துறையில் வேலை பார்த்தார். குறிப்பாக வைகை அணையில் வேலை பார்த்ததால், தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தோடு வைகை அணைக்குக் குடிபெயர்ந்து விட்டார். ஸ்ரீதர், இங்கேதான் படித்தார். இப்போதும் வைகை அணைப்பகுதியில்தான் அவரது சொந்தக்காரர்கள் உள்ளனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்

அவரது அண்ணனின் மருமகள்தான் திவ்யா. அவரை வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தியதாகவும், கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், திவ்யாவின் மாமனார், மாமியார், சின்ன மாமனார் ஸ்ரீதர் உட்பட 7 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதில், 6வது குற்றவாளியாக ஸ்ரீதரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இப்போது அந்த வழக்கு விசாரிக்கப்படாமல் உள்ளது” என்றனர். வைகை அணை போலீஸார் தரப்பில் கேட்ட போது, “அது பழைய வழக்கு. அது சம்பந்தமா வேற எதுவும் தெரியாது” என்று சொல்லி முடித்துக்கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு